அன்பு சேவுக - 1


குருதேவர் தமது மாணாக்கர்கள் அனைவருக்கும் பொதுவாகக் கூற வேண்டிய அறிவுரைகளையும், அருளுரைகளையும், ... இந்த அன்பு சேவுக என்ற தலைப்பிட்ட அஞ்சல் வடிவக் கட்டுரைகளின் வாயிலாக வரைந்து அளித்தார். இந்தக் கட்டுரைகள் 'குருதேவர்' என்ற சுற்றறிக்கையில் அச்சாகி வெளியிடப்பட்டன. அவற்றை இங்கே படிக்கலாம். இந்தக் கட்டுரைகளில் உள்ள கருத்துக்கள் தமிழராகப் பிறந்த அனைவருக்கும் பயன்படக் கூடியன.

  1. அருளாட்சித் திட்டம்
  2. குருதேவரது  உயரிய வாழ்க்கை வரலாறு
  3. தெய்வீகச் சோதனையே குருதேவரின் வாழ்க்கை!
  4. "எம் தாயகத்தில் யாம் ஓர் அன்னியனே?!"
  5. கண்ணுக்கு விருந்தாகாது வீர உடல்!
[குருதேவர் அறிக்கை 2இலிருந்து எடுக்கப் பட்டது.]

அருளாட்சித் திட்டம்

அன்புள்ள சேவுக!

'..... எனது முன்னோர்களால் கட்டப்பட்ட எல்லாக் கோயில்களிலும்,

உரிய தெளிவான, முறையான, முழுமையான திட்டங்கள் அனைத்தும் தீட்டி முடிக்கப்பட்டுவிட்டன ..... '


[குருதேவர் அறிக்கை 5இலிருந்து எடுக்கப் பட்டது.]

குருதேவரது  உயரிய வாழ்க்கை வரலாறு

அன்புள்ள சேவுக,

'...... நான் என்னுடைய ஏட்டறிவும் பட்டறிவும், முயற்சியும், உழைப்பும் உயர்நோக்கும் அக்கரையும், ஆர்வமும், ... உலகுக்குப் பயன்படாமல் போய்விடக்கூடாதே என்ற அச்சத்தால்தான் அச்சங்கள் கடந்து அயராது பாடுபட்டு வருகிறேன்.

நான், உலகுக்கு வழங்குபவை அனைத்தும் உலக முதலினமான தமிழினத்தவர் உருவாக்கிய அறிவுச் செல்வங்களே! இவை தமிழர் புகழ் பாடுபவை மட்டுமல்ல; மனித இனத்தின் நல்வாழ்வுக்கு வழியமைப்பவை.

இன்றுள்ள கலை, இலக்கியம், சமுதாயம், அரசியல் முதலிய பெரும்பாலான துறையின் பெரும்பாலானவர்கள் மக்களைச் சிந்திக்கவிடாமல் திசை திருப்பிப் போலிகளாக, கூலிகளாக, காலிகளாக, எடுபிடிகளாக, அடிமைகளாக, கோழைகளாக, தன்னல வெறியர்களாக, ஊழல் பேர்வழிகளாக உருவாக்கி வருகிறார்கள். இதனைத் தடுத்துத் திருத்தும் மாபெரும் பணியில் துணிவோடும் பணிவோடும் ஈடுபட்டிருப்பவனே நான்.

நான் எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும், வசதியையும், பிறரின் ஏக்கங்களும், ஏமாற்றங்களும், தேக்கங்களும், விம்மல்களும், விசும்பல்களும், புலம்பல்களும், துடிதுடிப்புக்களும், இல்லாமைகளும், இயலாமைகளும் ...... அகற்றப்படுவதற்காகவே பயன்படுத்துவேன். இது உறுதி, உண்மை, வாய்மை என்பதனை என்னை ஆளாக்கிய என் தந்தை, பேராசான், சிந்தனையாளன், ஆராய்ச்சியாளன், மிகப்பெரிய படிப்பாளி, பொதுவுடமைத் தத்துவத்தின் தன்னிகரற்ற தலைவன், அரசியல் மாமேதை, அறிவியல் வித்தகன், சமுதாயத் தத்துவஞானி, சித்தர் காக்கையர் ம. பழனிச்சாமி முழுமையாக நம்பியது ஒன்றே எமக்குப் போதும், பிறரை நம்பவைக்கும் முயற்சியில் ஈடுபடப் போவதில்லை நான்.

எனவே, நான் புகழுக்காகவோ! பொருளுக்காகவோ! பதவிக்காகவோ! ....... நடிக்க வேண்டிய அவசியமே எனக்கு இல்லை. எனவேதான், நான் எனது ஒவ்வொரு நொடி வாழ்வையும் சான்றுகளும், ஊன்றுகளும், சாட்சிகளும் நிறைந்த வரலாறாக உருவாக்கி வருகிறேன்.

இந்த வரலாறு, மானுட நல உரிமை என்றாவது, எப்படியாவது செயலாகிட வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக அமைந்திடும். இதுவே, எனது தெளிவான முடிவான கருத்து! ...... '

ஓம் திருச்சிற்றம்பலம்
அன்பே சிவம்!

அன்பு
இந்துமதத் தந்தை
குருமகா சன்னிதானம்
ஞாலகுரு சித்தர் கருவூறார்


[குருதேவர் அறிக்கை 7இலிருந்து]

தெய்வீகச் சோதனையே குருதேவரின் வாழ்க்கை!

அன்புள்ள சேவுக!

நான் தனியனாகக் காடு, மேடு, ஆறு, கடல் என்று இயற்கை கொப்பளிக்கும் இடங்களிலெல்லாம் திரிந்தபோது கூட அஞசவோ கலங்கவோ இல்லை; பசி வேட்கையுடன் திரிந்த மிருகங்களின் முன்னால் சென்ற போதும்; சீற்றமெடுத்துப் பாய்ந்துவரும் ஆற்று வெள்ளத்தில் நீந்திய போதும்; ஆர்ப்பரித்துப் பொங்கியெழுந்து நின்ற கடற் சூறாவளியில் பயணம் செய்த போதும்; ஆரவாரித்து ஓ'வென்று சுழன்று சுழன்று அடித்த புயற்காற்றில் சிக்கிய போதும் நான் மயங்கவோ, மதிமாறாவோ இல்லை. இவைகளையெல்லாம் தாண்டி, மனிதர்களுக்காக, மானுட நலனுக்காக நான் பெற்ற அநுபவங்களையும், உற்ற ஏட்டறிவுகளையும், பட்டறிவுகளையும் சுமந்து வந்தபோதுதான் தயங்கினேன், தடுமாறினேன், சிந்தித்தேன். சமுதாயம் மூடநம்பிக்கையாலும், மடமைப் போக்காலும், வீணான வறட்டுவாதத் தத்துவத்தாலும் புரையோடிக் கிடப்பதைக் கண்டுத் துணுக்குற்றேன்! ஆழ்ந்து ஆராய்ந்தேன்!

எனது தந்தை, பகுத்தறிவு மேதை, மாபெரும் சீர்திருத்தவாதி, பொதுவுடமைச் சிந்தனைவாதியான காக்காவழியன் பண்ணையாடி M. பழனிச்சாமிப் பிள்ளையவர்கள் சமுதாயத்தைப் பற்றிக் கூறிய கருத்துக்கள் என் நெஞ்சில் ஆழத் தைத்தன. அப்போதுதான் எனது தந்தை என்னிடம் விட்டுச் சென்றிருக்கின்ற மாபெரும் பொறுப்பை உணர்ந்தேன். தமிழ் மொழிக்காக, நாட்டுக்காக, இனத்துக்காக, தமிழக இந்திய உலக வரலாற்றுக்காக, உலகச் சமயங்களுக்காக, உலக அறிஞர்களுக்காக, அறிஞர்களின் சாதனைகளின் உண்மையான பலனை அடைவதற்காக, மருத்துவத்திற்காக, கலைக்காக, விஞ்ஞானத்திற்காக, தொழிலுக்காக, பொதுவுடமைத் தத்துவத்திற்காக,... என் மூலம் செய்ய வேண்டிய பணிகளை உணர்ந்தேன். நான் எதையும் என் சொந்தக் கருத்தாகவே தருவதில்லை. ஏட்டிலே இருப்பதை மீண்டும் மக்கள் மத்தியில் உம்மைப் போன்றவர்கள் மூலம் அள்ளித் தருகின்றேன், செயல்படுத்திப் பார்க்குமாறு அழைக்கின்றேன். உலக அமைப்பாளர்கள் அத்தனை பேரையும் உரத்தக் குரலில் அழைத்து உண்மைகளை எடுத்துரைக்கின்றேன்.

காலம் விடியுமென்று கதிரவனுக்காகக் காத்திருக்கவில்லை. ஏழிசைப் பாடுமென்று புல்லினங்கள் வரவுக்காக ஏங்கியிருக்கவில்லை. 'எனது கடன் பணி செய்து கிடப்பதே' என்று வறண்ட, முட்புதர்க் காடுகளை சரமாரியாக வெட்டி வீழ்த்தித் தந்துவிட்டுச் சென்ற பகுத்தறிவுப் பகலவன், சிறக்கஞ்சாச் சிங்கம், வெண்தாடி வேந்தர், தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் பாதையில் உம்மைப் போன்றோரின் துணையோடு நடக்கின்றேன். ஆனால், இப்போதுதான் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும், ஏமாற்றங்களையும், தோல்விகளையும் சந்திக்க நேருமா' என்றஞ்சியே தாத்தாக்களின் ஆத்தாக்களின் துணையோடு எமது வாழ்க்கையையே தெய்வீகச் சோதனையாக்கிச் செல்லுகின்றேன். எம்முடன் நீயும் அணி வகுப்பாய்! உம்முடன் இந்த அவனியே அணி வகுக்கும் என்பதில் ஐயமில்லை!

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்


[குருதேவர் அறிக்கை 9இலிருந்து]

"எம் தாயகத்தில் யாம் ஓர் அன்னியனே?!"

அன்புச் சேவுக!

எம் வாழ்க்கை 'ஒரு தெய்வீகச் சோதனையே' [My life is the Test of Divinity]. யாம் நஞ்சுண்ட மேனியனாகவே வளர்க்கப் பட்டும், இம்மாஞாலம் முழுதும் பயிற்சி, முயற்சிகளில் தேர்ச்சி பெற்று முதிர்ச்சியுற்றும்; அரசயோகியாக, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானமாக இந்துமதத் தந்தையாக, குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறாராக, பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகச் செயல்பட்டும் இந்துக்களை ஒற்றுமைப்படுத்தவோ, ஒருமைப்பாடுபெறவோ, ஆட்சியுரிமையை பெறச் செய்யவோ ...... முடியவில்லை ............. இருந்தாலும், யாம், மேற்படி சாதனைகளுக்காக முயலவில்லை என்று எவரும் குறை கூறிடவே இயலாது.

இந்து மதம், பிறந்த நாட்டிலேயே மற்ற மதங்களால் வேட்டையாடப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும், தொடர்ந்து அரசியல்வாதிகளின் சுயநல வெறியால் இந்துமதத்துக்கு விரோதங்களும் துரோகங்களும் நிகழ்ந்தே வருகின்றன. இவற்றை நிலையாகத் தடுத்தும், முழுமையாகத் தீர்த்தும் இந்து மதத்தைக் காத்து இந்தியாவைச் சிதையாமல் காப்பற்ற வேண்டுமேயானால் இந்திய விடுதலை வரலாற்றின் தத்துவ நாயகர்களாக விளங்கிய திரு எம். என். ராய், திரு எம். பி. பிள்ளை என்ற இருவரும் விட்டுச் சென்றுள்ள வரலாற்றுக் குறிப்புக்களை வெளியிட்டேயாக வேண்டும். ஆனால், இந்து மதப் பிறப்பிடமான தமிழகமே இன்னும் தன்னுணர்வு, இன ஒற்றுமை, மொழிப்பற்று, மதநம்பிக்கை ....... பெறாமலிருக்கிறதே!'! .........

நண்ப! கடந்த பன்னிரண்டாண்டுகளாக யாம் மந்திரவாதியாக, சோதிடராக, குறிகாரராக, மருளாளியாக, அருளாளியாக, பூசாறியாக, மருத்துவராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, எழுத்தாளராக, ....... எப்படி யெப்படியெல்லாமோ செயல்பட்டும் கூடத் தன்னலக்காரர்கள், குறுகிய வெறியர்கள், ...... தங்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு முதலாளித்துவப் போக்கில் ஒதுங்கி விட்டனர். எனவே, நாம், இம்மண்ணுலகுக்குத் தனி மனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு, ..... முதலிய அனைத்தையும் 'இந்து மதம்' எனும் 'சமூக விஞ்ஞானத்தால்' [The Induism is a Social Philosophy] வழங்கிய பதினெண் சித்தர்களின் நேரடி உரிமை வாரிசு என்ற முறையில் செயல்பட்டேயாக வேண்டும்.

இதற்காக, இந்திய விடுதலை வரலாறு, விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியல் வரலாறு என்ற இரண்டையும் கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளை, சித்தர் காகபுசுண்டர் ம. பழனிச்சாமி பிள்ளை, உலகக் கம்யூனிச இயக்கம் நிறுவிய அறிவியல் மேதை எம்.என். ராய், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. ..... முதலியோர் எழுதிய வாசகங்களையும், எழுதாக் கிளவிகளாக விடுத்துச் சென்ற வாக்குகளையும் முடிந்தவரை அடுத்தடுத்து வெளியிட்டேயாக வேண்டும். இந்த நாட்டுப் பதிப்பகங்களையும், அறிவுலகத்தாரையும் நம்பிப் பயனில்லை.

யாம் எமது தாயகத்தில் ஓர் அன்னியனாகவே வாழ நேரிட்டிருப்பது தாங்க முடியாத வேதனையே! நமது ஆர்வலர்களை ஆதரவாளர்களாக்க வேண்டியதே நமது உடனடிக் கடமை.

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்
இந்துமதத் தந்தை


[குருதேவர் அறிக்கை 11இலிருந்து]

கண்ணுக்கு விருந்தாகாது வீர உடல்!

அன்புச் சேவுக!

உரிமையை நிலைநாட்டிட ஆயுதங்களைத் தாங்கி புறப்படுகிறவன்; எண்ணற்றோர் உயிருக்கு முடிவையும், உடலுக்கு மாறா வடுவுடைய விழுப்புண்களையும் நல்குவதோடு வெற்றித் திருமகள் அளித்திடும் வீரப்புண்கள் எனும் முத்திரைகளைப் பெற்றுத் தன்னை வீர வரலாற்று மாளிகைக்குள் நுழையும் உரிமை பெற்றவனாக்கிக் கொள்கின்றான்.

இறவாத தத்துவங்களை ஈன்றெடுப்பேன், உலகம் மறவாத அறிவுலக வரலாறு எழுதுவேன், வருங்காலம் என்றென்றும் கண்டு களிக்கக் கருத்து வளர்ச்சி மிக்க கலைக் கருவூலம் அமைப்பேன். மேலும், தாழ்த்தப் பட்டவர்களை உயர்த்துவேன், வீழ்த்தப் பட்டவர்களை எழுச்சி பெறச் செய்வேன், மூடி மறைக்கப் பட்ட பேருண்மைகளைத் தேடிக் கண்டுபிடித்து வெளிக் கொணருவேன், கோழையை வீரனாக்குவேன், எங்கும் எதிலும் இருள் படியாப் பேரொளியை ஏற்றி வைப்பேன், 'கண்டவர் விண்டார்' என்ற புதுப் பெருமையைப் படைப்பேன், 'கடைவிரித்தேன் நல்ல வியாபாரம் நடந்தது' என்ற அடைய முடியாப் பெருநிலையை அடைவேன்; என்மொழி, என் இனம், என் நாடு என்பவை எனது மூன்று நாடித் துடிப்பு. நான் எடுக்கும் முயற்சிகளும் பிறர் தடுக்கும் முயற்சிகளும் வீரவரலாற்றின் படிக்கட்டுகள் ..... என்று சூளுரைத்து வாளின்றி வேலின்றிப் போர் புரியப் புறப்பட்டவன் நெஞ்சமும், சிந்தையும், எண்ணற்ற வீரப்புண்களைப் பெற்று வடுக்கள் மிகுந்த திருவுருவைத்தான் பெற்றிட முடியும்.

கண்ணுக்கு விருந்தாகாது வீர உடல்; கருத்துக்கும் நாட்டு நல்வாழ்வுக்கும் விருந்தாகுதலே வீரவுடல். நெடிய, பெரிய பயணங்கள், கடுமையும் கொடுமையும் நிறைந்த அநுபவங்கள். கடந்த காலம் இருளும், இன்னலும், இழப்பும், இழிவும், அழிவும், பழியும், வெடிப்பும், நொடிப்பும் மிக்கவை. நாற்றமடிக்கும் குப்பையால் நறுமணமிக்க மலர்களையும், சுவைமிக்க கனிகளையும் பெறலாம். மண்வாகுக்கேற்பவே பயிர் செய்யலாம்.

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்

குறிப்பு: அருள்மிகு வீரமாகாளி சன்னிதானம் பரமாச்சாரியார் அவர்கள் குருவைத் தேடியலைந்த போது, மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கருங்காலக் குடி உயர்நிலைப் பள்ளியில் 'சமயமும் விஞ்ஞானமும்' என்ற தலைப்பில் குருதேவர் உரையாற்றியதற்கு பின்னால் ஈர்க்கப்பட்டு குருதேவருக்கு கடிதம் எழுதினார். அதற்குப் பதிலாக 29-4-1973 அன்று குருதேவர் முதன்முதலில் எழுதிய கடித்தத்தின் நகலையே வெளியிட்டுள்ளோம்.