அன்பு சேவுக! - பகுதி 3

  1. குருதேவரின் புதுமையான அருட்புரட்சி முயற்சி
  2. திராவிடக் கழகத்தின் உண்மை நிலை
  3. அனைத்துத் தீயவைகளையும் முழுமையாக அகற்றிடும் பணி
  4. நாட்டில் தலைவர்களே இல்லாத இருண்ட நிலை
  5. இந்துமதத்தின் நடைமுறைகள் கசப்பான மருந்தே!

[குருதேவர் அறிக்கை 14இலிருந்து]

குருதேவரின் புதுமையான அருட்புரட்சி முயற்சி

அன்புச் சேவுக!

யாம் சாதாரணச் சித்திகளைப் பெற்ற அருளாளர்களைப் போல் ஓரிடத்திலமர்ந்து கொண்டு எம்மைக் காண வருகிறவர்களை எம்முடைய அருள் எல்லைக்குள் கொண்டு வந்து அவர்களுடைய அக, புற போராட்டங்கள் தற்காலிகமாக அமைதியடையும்படிச் செய்து செயல்பட்டிட்டால் இந்நேரம் உலகம் முழுவதும் எமக்கென ஒரு பெரிய மாபெரும் கூட்டத்தையும் எண்ணற்ற அமைப்புக்களையும் பெற்றிருக்க முடியும். ஆனால், யாம் அப்படிப்பட்ட மாயா நிலைச் செயல் புரிந்து எம்மை மட்டும் வளர்த்துக் கொள்ள விரும்பியதே இல்லை.

எனவேதான், யாம், இம்மண்ணுலகில் இதுகாறும் தோன்றிட்ட அனைத்து வகையான அருளாளர்களின் வாழ்வியல்களையும் சாதனைகளையும் இணைத்துப் புதுமைப்படுத்தி உலகந் தழுவிய நிலையான நன்மைகளை விளைவிக்க 'அருட்புரட்சி' முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

நிலத்திலிருந்து தங்கம் கலந்து மண்ணை வெட்டியெடுத்துக் குவிப்பது போல்தான் இதுவரை உலக அருளாளர்கள் அண்டபேரண்டத்துள் புதைந்து கிடக்கும் அருட்சத்திகளை வெளிக்கொணரும் முயற்சியில் மட்டுமே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சென்று விட்டார்கள். அவர்கள் செய்யாதது தங்கத் தாதுகளை ஒன்று திரட்டி கட்டித் தங்கத்தை உருவாக்குவதும் அப்படி உருவாக்கிய தங்கத்தை உலக மக்களின் நல்வாழ்விற்குப் பயன்படும்படிச் செய்வதும் போன்று தங்களுடைய வாழ்வின் சாதனைகளை வடிவமைப்புப் படுத்தி என்றென்றும் அருட்சத்தி மக்களின் நன்மைக்கு பயன்படும்படியான செயல்திட்டத்தை வகுக்காமல் சென்றதால் இக்குறையை நிறைவு செய்யவே இவ்வியக்கத்தைத் துவக்கிச் செயல்படுகின்றோம். இதுதான் எமது தத்துவம், குறிக்கோள், சட்டதிட்டம்.

அன்பு நண்ப! அருளுலகில் மாணாக்கர்கள் குருவைத் தேடிக் கண்டுபிடித்தாலும் அக்குருவின் பின்னால் பலகாலம் அலைந்து பலவாறு தொண்டுகள் புரிந்து அதன்பிறகே குருவின் அருளைப் பெறுவதென்பதே மிகப்பெரிய மரபாக இருந்து வருகின்றது. இதே நேரத்தில் அருளுலகில் ஒருசில குருமார்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் தேடியலைந்து விரல்விட்டு எண்ணக்கூடிய சில மாணாக்கர்களை மட்டுமே உருவாக்கி அருள் வழங்கித் தங்களின் நினைவாகப் புதியதொரு கூட்டத்தை உருவாக்கிச் சென்று விடுவதும் மரபாக இருக்கின்றது.

யாம், இப்படிப்பட்ட அருளுலகில்தான் பாரம்பரியமாகப் பெற்ற அருளையும் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும்; கல்விக் கேள்வித் தொண்டுகளாலும், ... பெற்றிட்ட அருட்செல்வங்களையும் இப்புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு தலைமேல் தூக்கிச் சென்று கூடைக்காரி போல் 'அருளோ அருள்' என்று கூறி வாரிவாரி மலிவுவிலைக்கு வழங்கிப் பார்த்துவிட்டு; இந்தியத் துணைக் கண்டத்திலும் இதனைச் சார்ந்த நாடுகளிலும் உள்ளவர்களுக்கு தாங்கள் அறிய கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இனாமாகவே வழங்கிவிட்டோம். தம்மையும் புரியாமல், எம்மையும் புரியாமல் சிறுபிள்ளைத் தனமான செயல்களில் ஈடுபட்டு வீணாகிக் கொண்டிருக்கும் அருளுலக மாணாக்கர்களை எண்ணி வருந்துகிறோம்.

உலக மதங்களுக்கெல்லாம் மூலமாகவும், தாயாகவும் இருப்பது இந்துமதமே. இந்துமதத்துக்கு மூலமாகவும் தாயாகவும் இருப்பது தமிழினமே. எனவேதான், நமது இனமக்களான தமிழர்களை அருளுலகத் தலைவர்களாக உருவாக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம் யாம். ஆனால், நம்மவர்கள் ஊசலாட்டம் மிகுதியாக உடையவர்களாக இருக்கிறார்கள். இதனால், இவர்கள் சில அடிகள் முன்னோக்கி நடந்த உடனேயே பயந்து பல அடிகள் பின்னோக்கி நடந்து விடுகிறார்கள்.

அதாவது, எல்லா மதவாதிகளையும் போல நமது இயக்கச் செயல்திட்டங்கள் வெறும் பொழுது போக்குக்குரியன வைகளாகவோ குறுகிய வட்டாரத்தார்களுக்கு மட்டுமே பயனளிக்கக் கூடியவைகளாகவோ, ஆரிய வேதநெறிக்கு அடிமைப்பட்டதாகவோ இல்லை என்பதனால்தான் குருட்டு மதவாதிகளும், தன்னல வெறியர்களும், சந்தர்ப்ப வாதிகளும் விலகிச் செல்கின்றனர். எனவே, களைகள் களைவதைப் பற்றி கவலையடைய வேண்டாம்.

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்


[குருதேவர் அறிக்கை 15இலிருந்து]

திராவிடக் கழகத்தின் உண்மை நிலை

அன்புச் சேவுக!

மகாத்மா காந்தியைப் போல் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தி.க.வைப் பலமுறை கலைத்தார். அதற்கு அவர் கூறிய காரணம், 'என் பெயரைச் சொல்லிக்கிட்டு பொறுக்கித் திங்கிற கூட்டம் வளர்ந்து விடக்கூடாது. நான் யாரோ சிலருக்கு மட்டும் சொந்தக்காரன் என்று ஆகிவிடக் கூடாது. நான் சொல்ற கருத்துக்களை சாதி, மதம், கட்சி என்ற வேறுபாடெல்லாம் இல்லாம எல்லாரும் சிந்திக்கணும், செயலாக்க முயற்சிக்கணும். அப்பத்தான் மடமையெல்லாம் ஒழியும், பித்தலாட்டங்களும், ஏமாற்றுக்களும் போகும். இந்த காந்தி கூட சுதந்திரம் வந்திச்சு, காங்கிரசைக் கலைச்சுட்டேன் என்றாரு. ஆனா ஒரு பயலும் கேட்கவில்லை. ஏன்னா காங்கிரசுக் கட்சி என்று ஒன்றை வச்சுக்கிட்டு நாங்கதான் சுதந்திரம் வாங்கித் தந்தோம், நாங்கதான் சுதந்திரத்துக்காக கஷ்ட நஷ்டப்பட்டோம், எங்களுக்கு ஓட்டுப் போடுங்கன்னு சொல்லி அவனவன் பட்டம் பதவின்னு வாங்க்கிக்குனு கொள்ளையடிகிறானுக! முதல்லே காந்தி சொன்னாப் போல இந்த காங்கிரசு கட்சியை ஒழிக்கணும். அப்பத்தான் இந்த நாட்டிலே நல்லது நடக்கும். இது மாதிரிதான் இப்பவே தி.க.வை கலைச்சுட்டேன். அவங்கவங்க விருப்பப் பட்ட கட்சியிலே சேர்ந்து தொண்டாற்றுங்க! நாட்டுக்காக நல்லது செய்யுங்க! தி.க.வில் உள்ளவர்களெல்லாம் காங்கிரசு கட்சியிலே சேர்ந்து பச்சைத் தமிழன் காமராசர் கையை வலுப்படுத்துங்க!' *

[* இப்படி பெரியார் அறிவித்ததற்கேற்ப பல தி.க.வினர் காங்கிரசில் சேர்ந்தனர். இப்படிச் சேர்ந்தவர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். இதை இன்றுள்ள தி.க.வினரும், காங்கிரசுவாதிகளும் ஏற்றுக் கொள்வார்கள். இது பற்றிய கார்டூன்கள் ஆனந்த விகடனில் காணலாம்.]

இப்படிப் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மிக நுட்பமான தொலை நோக்குடன் தான் உண்டாக்கிய திராவிடக் கழகத்தைக் கலைத்திட்ட வரலாற்று நிகழ்ச்சியை தெரிந்து கொள்ளாத திராவிடக் கழகத்தவர்களே நிறைய உள்ளனர். எனவே, பெரியாரின் அந்தச் செயலைப் புரிந்து கொள்ளாதவர்களே இன்றைக்கு பெரும்பாலானவர்கள் இருக்கின்றனர் என்பது தவறல்ல. பெரியார் பயந்தது போலவே, அவருடைய குறிக்கோள்களும், கொள்கைகளும் அவருடைய கழகத்துக்கு மட்டுமே உரியவை என்பது போல் அதனுடைய இன்றைய தலைவர், தளபதி கி. வீரமணி செயல்படுகின்றார். இது மிகவும் வருந்தத் தக்கது. பெரியார் ஈ.வெ.ரா. கூறிய கொள்கைகளையும், அடைய நினைத்த குறிக்கோள்களையும் செயல் வடிவில் வாழ வைக்கக் கூடியவர்களை யெல்லாம் ஒன்று திரட்டிச் செயல்பட வைக்கக் கூடிய தலைமைப் பண்பு, பொதுநோக்கு, தீவிரப் போக்கு, ஆர்வமிகு பேராற்றல் ..... முதலியவைகள் எதுவுமே இல்லாதவராகத்தான் தலைவர் வீரமணி உள்ளார்.

அன்பு நண்ப! நண்பர் கி.வீரமணி அவர்கள், தமிழினத்தின் உரிமைக்கும், பெருமைக்கும் தமிழ்ச் சான்றோர்களின் உரிமைக்கும் பெருமைக்கும் கடுமையான சோதனைகள் ஆபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்று தெரிந்தும், அதற்காகப் பல்வேறு துறையைச் சார்ந்த அனைத்துத் தமிழர்களையும் ஒன்று திரட்டி உரிமைக்காகவும், பெருமைக்காகவும் இறுதிவரை போராடவேயில்லை. ஏதோ பெயருக்கு ஆங்காங்கே ஓரிரு நாள் போராட்டங்களையும் ஒரு சில அறிக்கைகளையும் வழங்கிவிட்டு தொடர்ந்தோ துணிந்தோ போராடாமல் கோழையைப் போல் விலகி ஒதுங்கி எதிலும் பட்டுக் கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றார்.

நாம் முழுமையான பிறாமண எதிர்ப்பாளர் என்பதை உணர்ந்தும் நண்பர் வீரமணி அவர்கள் இன்றைய தினம் 'தான், பிறாமணர்களின் எதிர்ப்பாளன் அல்ல; பிறாமணீய எதிர்ப்பாளனே' என்று கூறி வருவதோடு, நம்முடைய செயற்குழுவிற்கு பேட்டி தர (23-3-1985) பொன்னேரியில் மறுத்து தன்னை சங்கராச்சாரியாரின் எதிர்ப்பாளனல்ல, தான் ஒரு பிறாமணதாசன் என மெய்ப்பித்துக் கொண்டார்.

அன்பு நண்ப! நாம் பெரியார் தோற்றுவித்த திராவிடக் கழகத்தை இறுதியாக நம்பியிருந்தோம். அவர்களும் தங்களின் உண்மை வடிவத்தைக் காட்டிக் கொண்டு விட்டதால் வேறு வழியில்லை. நாம் தனித்தே தமிழினத் தந்தை தந்தை பெரியார் அவர்களின் மாபெரும் சமுதாய மறுமலர்ச்சிப் பணிகளை கட்டுரைகளாக, கவிதைகளாக, மந்தையிலே உரைகளாக சொற்பொழிவுகளாக வெளிப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டிருக்கின்றோம். ஏற்கனவே உள்ள சமய மறுமலர்ச்சிப் பணியோடு தந்தை பெரியாரின் சமுதாயப் பணிகளையும் வெளிப்படுத்திச் செயலாக்குவோம்.

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்

[குருதேவர் அறிக்கை 16இலிருந்து]

அனைத்துத் தீயவைகளையும் முழுமையாக அகற்றிடும் பணி

அன்புச் சேவுக!

சில ஆயிரம் பேர் ஒருங்கு கூடி ஒற்றுமையுடன் திட்டமிட்டபடி மிகப் பெரிய திருவிழா நிகழ்த்தியிருக்கிறோம். ஆனால், இத்திருநாட்டுப் பதிப்பகங்களோ, செய்தியேடுகளோ, சமய சமுதாய அரசியல் கலை இலக்கியக் கழகங்களோ, தனிமனிதர்களோ, ...... நம் பக்கம் திரும்பவில்லை; நம்மை விமர்சிக்கவில்லை.

நாமும் பல நூறாயிரக்கணக்கான அறிக்கைகளையும்; விரல்விட்டு எண்ணிடக் கூடிய அளவு பத்துப் பன்னிரண்டு நூல்களையும்; ஏட்டையும் நாட்டையும் கதிகலங்கச் செய்யும் கருத்துக்களைத் தாங்கிவரும் மாத இதழ் 'குருதேவர்' அறிக்கையை இரண்டாண்டு காலமாக வெளியிட்டும்; நமது முழுநேர ஊழியர்களும், பகுதிநேர ஊழியர்களும் நாடெங்கும் கருத்துரையாடல், விவாதம், சொற்பொழிவு, அருளுரை, அருள் வழங்கல், ...... என்று நேரடியான கருத்துப் புரட்சியில் ஈடுபட்டும், ........ செயல்படுகிறோம். பிறகு, ஏன் நமக்கு எதிர்பார்க்கும் வரவேற்பில்லை'

நண்ப! யார்யாரோ திடீரென்று அருளாளர்களாக வெளிப்படுகிறார்கள்; பொருளுலகச் செல்வாக்கும், விளம்பரமும் பெற்றிடுகிறார்கள். நமக்கு அவர்கள் மீது பொறாமையில்லை. அவர்கள், அருட்புதையல் எடுத்தவர்களாகத் தன்னல வாழ்வு, குறுகிய வட்டாரச் செயல், மொழியின் நாட்டுணர்வற்ற போக்கு, எல்லா மதவாதிகளையும் போல் பசனைக் கூட்டமாகச் செயல்படல் ..... என்று செக்குமாடு போல சுற்றிச்சுற்றி வருகிறார்கள். இவர்களைப் போன்ற அனைவருக்கும் உயிராக, உள்ளீடாக, வாழ்வாக, தத்துவமாக, வேலியாக ...... இருப்பவர்களே நாம். கடவுள்களையும், வழிபாட்டு நிலையங்களையும், மனித வாழ்வின் முன் பின் மறைகளையும், அண்ட பேரண்டங்களையும் விளக்கிடும் அறிவும், ஆற்றலும், ஆண்மையும் உள்ளவர்களே நாம். எனவே, உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு, இந்துமறுமலர்ச்சி, மதவிழிச்சி, ஆவி, ஆன்மா, உயிர் ஒன்றுபடல், ...... என்று செயல்படும் நாமே சமயத்துறையின் வழி, வழிகாட்டி, வழித்துணை, வழிப்பயன், வழிக்காவல், ....... என்பதை உணர்ந்து அமைதியோடு செயல்படுவோமாக.

எத்தனையோ சிறிய பெரிய சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியக் கழகங்கள், கட்சிகள், இயக்கங்கள், சபைகள், குழுக்கள் ..... இன்றைய உலகியலில் அந்தந்த வட்டாரங்களில் ஏற்படக் கூடிய ஒரு சில சிக்கல்களை எதிர்த்துப் போராடிச் சிறுசிறு வெற்றிகளையும் பெற்றிடுகின்றார்கள். இவைபோல், நாம் ஏன் நேரடிப் போராட்டங்களில் ஈடுபடவில்லை என்ற ஆதங்கமும், ஏக்கமும், குற்றச் சாட்டும் எழுந்துள்ளன. இது தவறு. ஏனெனில், மேற்படி அமைப்புக்கள் 'தற்காலிகமான தீர்வுகளையே' [Temporary reliefs] உண்டாக்குகிறார்கள். நாம், அப்படியல்ல. குறைகளுக்கும், கறைகளுக்கும் காரணமாக இருக்கக்கூடிய அனைத்துத் தீயவைகளையும் முழுமையாக அகற்றிடும் மாபெரும் பணியிலேயே ஈடுபட்டுள்ளோம். நம்மால், தனிமனிதர்களும், குடும்பங்களும், சமுதாயமும், ........ முழுமையான செம்மைநிலையைப் பெற்றுவிடும். அதன்பிறகு, இன்று நிகழும் போராட்டங்களுக்கோ, போராடும் அமைப்புக்களுக்கோ அவசியமே இருக்காது.

நம்மவர்கள், 'குருதேவர்' அறிக்கைகளை விற்பதிலும்; பொது இடங்களிலும் வழிபாடுகளிலும் நமது குருதேவர் அறிக்கைகளைப் படித்துக் காட்டுவதிலும் தாம் நமது வளர்ச்சியிருக்கிறது. நம்மவர்கள், இதுவரை வெளிவந்துள்ள அறிக்கைகளையும் அறிவிக்கைகளையும்; புத்தகங்களையும் திருப்பித் திருப்பி ஊன்றிப்படித்து கொள்கை விளக்கம் வளமாகவும், வலிவாகவும் பெற்றுக் கொண்டேயாக வேண்டும். இதுவே உடனடிச் செயல்திட்டமாக அமையட்டும்.

விரைவில், நேரடிப் பயிற்சியால் ஒரு சில முழுநேர ஊழியர்களை உருவாக்கியேயாக வேண்டும். பக்குவமுடையவர்களுக்கு அருளாற்றலும் அருட்கலைப் பயிற்சிகளும் வழங்கப் பட்டேயாக வேண்டும். இதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தால் உடனே சுற்றுப் பயணம் வரத் தயாராகவுள்ளோம் யாம்.

எம் காலத்துள் அருளாட்சி அமைய வேண்டும்.

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்
இந்துமதத் தந்தை


[குருதேவர் அறிக்கை 18இலிருந்து]

நாட்டில் தலைவர்களே இல்லாத இருண்ட நிலை

அன்புச் சேவுக!

அஞ்சல் வடிவக் கட்டுரைகளும், கட்டுரைகளும், நூல்களும் பழைய நூல்களைத் தேவைக்கேற்ப சிறுசிறு செய்தித் தொகுப்பாக வடிவப்படுத்தும் செய்திக் கட்டுரைகளும், ....... எழுதி எழுதிக் கோப்புகள் நூற்றுக்கணக்கில் குவிந்ததுதான் மிச்சம், பயன் ஏதும் உருப்படியாக எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை.

நெஞ்சத்தில் நெருப்புக் கடல் கொதித்துப் பேரலைகள் மிகுந்து அனல் புயல் வீசவாரம்பித்து விட்டது. இனியும், தாமதிக்கக் கூடாது! தாயகத்து மக்களைத் தவறான, போலியான, சோம்பலான, ஏமாளியான, கோமாளியான, மோசமான, மோசடியான, கூலிப் போக்குடைய, அடிமைச் சிந்தையுடைய, பயனற்ற..... வாழ்க்கை வாழுமாறு செய்யும் மத்திய மாநிலச் சமய, சமுதாய, அரசியல், கலை, இலக்கியத் தொழில் துறைத்தலைவர்களை எண்ணி எண்ணிச் சிந்தை எரிமலை எனக் குமுறி வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பு ஆறாக ஓட ஆரம்பித்து விட்டது. இருமருங்கும் சாம்பல் மேடுகள் கரைகளாக உயர்ந்து வருகின்றது.

இந்தியத் துணைக்கண்டத்தில் மக்களின் உள்ளத்தைத் தொட்டும், சிந்தையைத் தட்டியெழுப்பியும், உணர்வில் நிறைந்தும் செல்வாக்குப் பெற்றுத் தலைமை தாங்கி வழி நடத்தக் கூடிய தலைவர்களேயில்லை [Neither the leaders are inspired nor they can inspire others]. அதாவது, தன்னம்பிக்கையும் தன்னுணர்வும், அகஞானமும், புற ஞானமும் மீக்கூரப் பெற்றுத் தற்கவர்ச்சியும், புறக்கவர்ச்சியுமுடைய தலைவர்களே நம் நாட்டில் ஏறத்தாழ இல்லை! இல்லை!! இல்லை!!! எனவேதான், எங்கும் இருள்! இன்னல்! இடர்! இழிவழிவு! ஏமாற்று! சுரண்டல்! கொள்ளை! அநியாயம்! அநீதி!

நண்ப! அனைத்துத் துறைகளில் உள்ள தலைவர்களும், தங்களுக்கு எதிர்பாராமல் கிடைத்த மதம், சாதி, பாரம்பரியம், பணம், புகழ், ....... முதலிய போலியான செல்வாக்கை வைத்துக் கொண்டு ஏமாற்று வேலையே செய்து வருகிறார்கள். இவர்களுக்கெல்லாம் மிக நன்றாகத் தெரியும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மக்கள் செம்மறியாட்டு மந்தை போலத் தங்களின் பின்னால் வந்தே தீருவார்கள் என்பது. எனவேதான், இவர்கள் கொள்கையோ [Policy], நெறியோ [Principle], முறையோ [Standard approaches and attitudes of procedure], குறிக்கோளோ [aim] ...... இல்லாமல் சுயநல வெறிகொண்டவர்களாகவே செயல்படுகிறார்கள். அதாவது, இவர்கள் தங்களின் குடும்பம், சொந்தம், உறவினர், நண்பர், இயக்கத்தவர் ....... என்ற குறுகிய எல்லைகளையே பாதுகாப்புக் கோட்டைகளாகவும், நடைபாதைகளாகவும் கொண்டு செயல்படுகிறார்கள்.

நண்ப! இன்றைய இந்தியத் தலைவர்கள் அனைவருக்குமே, மிக நன்றாகத் தெரியும், தாங்கள் மக்களை ஏமாற்றுகிறோம் என்று. எனவேதான், அவர்கள் மக்கள் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தங்களை மறுக்கக் கூடும், வெறுக்கக் கூடும், ...... என்பதைத் தெளிவாக உணர்ந்து அதற்கேற்ப எச்சரிக்கையாகவே வாழுகிறார்கள். இவற்றால்தான், எந்தத் தலைவரும் உண்மையான பிடிப்போடும், துடிப்போடும் செயல்படுவதேயில்லை. இப்படிப்பட்ட ஓர் இரண்டுங் கெட்டான் நிலையில் தலைவர்களும், மக்களும் உள்ள காலத்தில்தான் நாம் செயல்படுகிறோம் என்பதை எண்ணும்பொழுதுதான் நமது இன்றைய கொள்கை முழக்க, விளக்க வளர்ப்பு முயற்சிகள் மாற்றிக் கொள்ளப்பட வேண்டுமோ என்று எண்ணுகிறோம் யாம்.

நண்ப! யாம் தாலாட்டுப் பாடல்களாகவும், காவடிச் சிந்துகளாகவும், தெம்மாங்குகளாகவும், கலை நிகழ்ச்சி இன்னிசைப் பாடல்களாகவும், கதை நிகழ்ச்சி வில்லுப்பாடல்களாகவும், நாடகங்களாகவும், ........ நமது வரலாறுகளையும், இலக்கியங்களையும், தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் எழுதிவிடலாமா' என்று எண்ணுகிறோம். இது ஒருவேளை எமக்குப் பெரிய வீழ்ச்சியாக இருக்கலாம். ஆனாலும் வேறு வழியில்லை. கலைகளின் மூலம்தான் நமது கருத்துக்களைப் பரப்பியாக வேண்டுமென்ற நிலை நம்மவர்களால் விரும்பி வரவேற்கப்படுகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் யாம்.

நண்ப! நாம் அ.வி.தி. யின் பெயரால் பயிற்சி கொடுத்து வளர்த்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அனைவருமே கோபுரத்தைத் தாங்கள்தான் தாங்கும் பதுமை போல் இருக்கிறார்கள். எனவே, இ.ம.இ.யின் மூலம் ஆங்காங்கே சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், சிறப்புக் கூட்டங்கள், பட்டிமன்றங்கள், ......... முதலியவை நிகழ்த்தி நமது வரலாறுகளையும், இலக்கியங்களையும், தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் நேரடியாகப் பொதுமக்களிடம் விளக்கி நமக்கு ஆதரவு திரட்டினால்தான் முடியும். அதாவது, அ.வி.தி. செயல்வீரர்களால் தேவையில்லாத போட்டிகளும், பொறாமைகளும், சண்டை சச்சரவுகளும், நிறுவன நிர்வாகச் சீரழிவுகளும்தான் ஏற்படுகின்றன. விரிவாக உங்களின் நெஞ்சந் திறந்த உணர்வு நிறை எண்ணங்களைப் பதிலாக உடனே அனுப்புமாறு வேண்டி இந்த அஞ்சலை நிறைவு செய்கிறோம்.

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்
14-7-1985

[குருதேவர் அறிக்கை 19இலிருந்து]

இந்துமதத்தின் நடைமுறைகள் கசப்பான மருந்தே!

அன்புச் சேவுக!

யாம், அன்னியர்களுக்கு மட்டும் புதியவனாக இல்லாமல்; நம் தாயகத்து மக்களுக்கும் புதியவனாகவே உள்ளோம். ஆனால், இந்த எமது சொந்தநிலை; நமது இயக்கத்துக்கும் தொடர்ந்து வந்து விடக்கூடாது என்பதால்தான்; இந்த ஆண்டு 1985-இல் டிசம்பர் 24, 25இல் மதுரை மாநகரில் மாநில மாநாடு கூட்ட முடிவு செய்துள்ளோம்.

நம்மிடம் அருளுலக ஐயங்களை அகற்றிக் கொள்ள வந்த ஆர்வலர் முதல், நமது அருட்பணியால் நலமடைந்தோர் வரை அனைவரையும் சித்தரடியான், சித்தரடியார், சித்தரடியாள் ...... என்று எண்ணற்று உருவாக்கி அருளுலக இளவரசர்களாக, அருட்படைத் தளபதிகளாக, அருட்சேனை வியூகநாயகங்களாக, அருட்படையின் மாவீரர்களாக நாடு முழுவதும் சென்று செயல்படச் செய்தும் ...... நம்மால் நன்மையடைந்தவர்கள் கூட நமக்குத் துணையாக வராத நிலையே உருவாகிவிட்டது. இது வருந்தத் தக்கதே.

உடனடியாக, நாம், நமது வரலாறு, தத்துவம், கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம் ..... முதலியவைகளைப் படித்தவர் முதல் பாமரர் வரை புரிந்து கொள்ளுமளவுக்கு நமது பணிகளனைத்தும் நமது அச்சிட்ட அறிக்கைகளையும், அறிவிக்கைகளையும், குருதேவர் ஏடுகளையும் விற்பதில் முனைவதாக இருக்க வேண்டும், நண்ப!

நாத்திகர்கள், மதமறுப்பாளர்கள், பகுத்தறிவுவாதிகள் ........ நமது மதத்தின் செயல்நிலைகளையும், தத்துவங்களையும் அநாகரிகமானவை, காட்டுமிராண்டித்தனமானவை, ஆபாசமானவை .... என்று குறைகூறிக் குற்றம் சாட்டுகின்றார்கள். இதற்குப் பதில் கூறத் தெரியாமல் பலகாலமாக நமது மதவாதிகள் திகைத்துத் திக்குமுக்காடித் திணறித் தேங்கியுள்ளார்கள்.

இந்துமதம், அநாகரீகமாக வாழ்ந்த ஆதிமனிதனை வளப்படுத்த படைக்கப்பட்டதே ஆகும். மனிதன் ஆடை, அணிகலன், வாழிடம் ........ முதலிய வசதிகளில்தான் நாகரீகம் அடைந்தவனாக உள்ளானே தவிர, அவனது சிந்தையும், நெஞ்சும், உணர்வும், எண்ணமும், வேட்கையும் ........ காட்டுமிராண்டி நிலையிலேயேதான் இருக்கின்றன. எனவேதான், மனிதனின் அகப்பண்புகளைத் திருத்திச் செம்மைப்படுத்தும் மதமான இந்துமதத்தில் ஆரம்ப காலத்திலிருந்த பல நெறிமுறைகளும், விதிகளும், பழக்கவழக்கங்களும் தொடர்ந்து கையாளப்படுகின்றன. இந்துமதம் மிகமிகத் தொன்மையானது, பழமையானது ........ என்பதை விளக்குவதாகத்தான் இந்து மதத்தில் நடைமுறைகள் கருத்துக்கும், கண்ணோட்டத்துக்கும் அப்பாற்பட்டு விளங்குகின்றன. இந்துமதத்தின் நடைமுறைகள் கசப்பான மருந்து போன்றவை. இவைதான், அருளை ஊற்றெடுக்கச் செய்கின்றன. அருளை அனுபவப் பொருளாக வழங்குகின்றன. இந்துமதம் மனிதர்களைத் தூய்மையும், வாய்மையும் .......... அடையச் செய்யும் பேராற்றலுடையவை!

---- இவ்வுண்மையை ஏற்று ஒவ்வொரு இந்துவும் தன்மானத்தோடும் தன்னம்பிக்கையோடும் தனது இந்துமதத்தை வளவளர்ச்சியும், மறுமலர்ச்சியும் அடையப் பாடுபட முன்வர வேண்டும். இதற்கான வழிமுறைகளும், நடைமுறைகளும் தெளிவான திட்டங்களும் எம்மிடம் இருக்கின்றன.

வாருங்கள்! சிந்திப்போம்! செயல்படுவோம்!

 அன்பு

ஞாலகுரு சித்தர் கருவூறார்