அன்பு சேவுக! - பகுதி 4

  1. நமது வெளியீடுகளே தமிழரது பாடப் புத்தகங்கள்.
  2. கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடல்களே இன்றைய தேவை
  3. மானுட நல உரிமை பேணும் புதியதோர் தத்துவம் பிறப்பிக்கப் படல் வேண்டும்.
  4. தமிழரின் தன்னம்பிக்கை இந்துமதத்தின் வளவளர்ச்சியிலேயே உள்ளது
[குருதேவர் அறிக்கை 20இலிருந்து]

நமது வெளியீடுகளே தமிழரது பாடப் புத்தகங்கள்.

அன்புச் சேவுக!

(1) நம் நாட்டில் முதலாளிகள் ஏறத்தாழ நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேர்கள் இருக்கிறார்கள். அனைத்துக் கோயில்களிலும் விழாக்களிலும் கூட்டம் கூட்டமாகக் கலந்து கொள்ளும் மக்கள் நிறைய இருக்கிறார்கள். எண்ணற்ற மத நிறுவனங்கள், இயக்கங்கள், மதத் தலைவர்கள், மதக் கலைஞர்கள், மதப் பத்திரிகையாளர்கள், மதப் பேச்சாளர்கள், மத எழுத்தாளர்கள் ....  இருக்கிறார்கள். எங்குப் பார்த்தாலும் அடிக்கடி மதத்தின் பெயரால், சிறிய பெரிய கூட்டங்களும், விழாக்களும், கதை நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும், பிறவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏறத்தாழப் பூசைக்கென்று தனியிடம் இல்லாத வீடே இல்லை, பூசைப்படம் மாட்டப்படாத கடையே இல்லை. இந்த அளவு நமது நாடு மதவாதிகள் மிகுந்த நாடாகத்தான் இருக்கிறது. ஆனால், இந்த நாட்டின் சமுதாய சீர்திருத்தவாதிகள், அரசியல்வாதிகள், இலக்கிய வாதிகள், தமிழார்வமுடையோர் ......... எனப்படுபவரெல்லாம் உதட்டளவில் நாத்திகக் கருத்துக்களையே மிகுதியாகப் பேசித் திரிபவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், தொடர்ந்து கால் நூற்றாண்டாக, நாத்திகப் போக்கும், நோக்கும் உடையவர்களே நமது அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். என்ன காரணம்? எது காரணம்? எப்படிக் காரணம்? எவ்வளவு காலம் காரணம்? என்னென்ன முயற்சிகள் காரணம்? ...... என்பதையெல்லாம் ஆராய வேண்டும். இம்மாபெரும் சுமை நமக்கு இருப்பதால்தான் நாம் கழுத்து நோக, விழி பிதுங்க, மூச்சுத் திணற மெல்ல நிதானமாக நடைபோடுகிறோம். இதனைப் பிறரும், நாமும் புரிந்தும் புரியவைத்தும் செயல்படக்கூடிய சூழ்நிலையை எப்படியாவது உருவாக்கியே ஆக வேண்டும். ஆனால் அது அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும்.

(2) நண்ப! நமது பத்தர்கள் மதவாதிகள் மதத்தால் வயிறு பிழைக்கும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் முதலியோர்கள் வேண்டா வெறுப்பாக நாற்றம் அடிக்கும் குப்பையை நறுமணமிக்க மலரைத் தரும் செடி கொடிகளுக்கு உரமாக, கையால் அள்ளியள்ளி தூறில் (செடி அடியில்) வைத்துப் பணிபுரியும் ஆட்களைப் போலவே, மதத்தைத் தங்களுடைய வாழ்க்கையின் நன்மைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது, பெரும்பாலான மதவாதிகள் உதட்டளவில் மதம் மடமையானது, மூட நம்பிக்கை மிகுந்தது, ஆபாசங்கள் மிகுந்தது, அறிவுக்கு அப்பாற்பட்டது, தவிர்க்க முடியாத தீயது என்ற கருத்தை எல்லாம் கூறியபடியேதான் மதத்தைப் பயன்படுத்தி வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் மதத்தைப் பற்றிய முறையான வரலாறு, நிறைவான தத்துவம், முழுமையான இலக்கியம், பொறுப்பான பயிற்சி, பொறுமையான சிந்தனை, உண்மையான மத உணர்வு, நேர்மையான மதச்சிந்தனை, ஒழுங்கு படுத்தப்பட்ட மதவாழ்க்கை, மதக்கலைகளில் பயிற்சி, மத குருமார்களிடம் தொடர்பு ... முதலியன இல்லாமை, மதத்தைப் பற்றிய அச்சம், கூச்சம், இச்சை, வேற்று மொழியில் மதத்தைச் செயல்படுத்துதல், அன்னியர்களை மதத் தலைவர்களாக ஏற்றல், ..... முதலிய தவறுகள்தான். எனவே, இத்தவறுகளை அகற்றிடும் முயற்சி விரிந்தும், விரைந்தும் துவக்கப்பட்டே ஆக வேண்டும்.

(3) நமது மதவாதிகள் கண்மூடிப் பத்தர்களாக, எல்லாம் கடவுள் செயலாக ஏற்கும் மந்தகதி உடையவர்களாக, புதுமை நாட்டமோ, புரட்சி நம்பிக்கையோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள். எனவேதான், ஒலிபெருக்கியோ, விளம்பரமோ இல்லாமல் எல்லாக் கோயில்களிலும் நம்மவர்கள் கூடி ஒருவர் இருவர் என்று நின்றாவது நமது வெளியீடுகளை உரக்கப் படித்துக் காட்ட வேண்டும். விற்பனைக்காக நமது வெளியீடுகளைக் கடைவிரிக்க வேண்டும். மக்களின் ஐய வினாக்களுக்கும் பதில் கூறிச் சிறுசிறு சொற்பொழிவுகள் நிகழ்த்துதல் வேண்டும்.

(4) பொழுதுபோக்கும் கழகங்கள் நடத்துவது போலவே பல பணக்காரர்களும், சிலசில இலக்கியச் செல்வாக்குடையவர்களும், மதச்சபைகள், மன்றங்கள் வாரவழிபாட்டு அமைப்புகள், சிறுசிறு தொடர் இலக்கிய விழாக்கள்.... நடத்தி வருகிறார்கள். இவர்கள்தான் மதத்தை மயக்கப் பொருளாக, பிற்போக்குச் சத்தியாக, புரியாத துறையாகக் காப்பாற்றுவார்கள். எனவே, இவர்களிடமிருந்து மதத்தைக் காப்பாற்றிப் பகுத்தறிவுப் போக்கும், சமுதாய நலநோக்கும், விஞ்ஞானச் சூழலும் உடையதாக்கிடல் வேண்டும்.

(5) மதவாதிகள் தங்களுடைய நூல்களும், தலைவர்களும் சமத்துவத்தை, பொதுவுடமையை, கூட்டுறவை, வட்டி வாங்காமையை, சுரண்டாமையை, ஏமாற்றாமையை, வேறுபாடு பாராட்டாமையை, பிறரை அடிமைப் படுத்தாமையை .... என்று எண்ணற்ற உயர்ந்த தத்துவங்களைக் கூறுவதற்காகக் கூறுவார்கள். ஆனால், யாருமே இவற்றைச் செயலாக்கும் ஆர்வத்தையோ, நம்பிக்கையையோ விரும்பி ஏற்றுப் போற்றும் பக்குவத்தையோ பெற்றிருக்கவில்லை. எனவேதான், நமது மதம் ஏட்டுச் சுரைக்காயாக, கற்பனையாக, பழங்கதையாக, கவைக்கு உதவாததாக இருக்கிறது. இதனை மாற்றும் ஏட்டறிவும், பட்டறிவும், புரட்சியுள்ளமும் உடைய மதவாதிகள் ஏறத்தாழத் தோன்றவே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

(6) நண்ப! மத சம்மந்தமான அனைத்து விழாக்களிலும், நிகழ்ச்சிகளிலும், நம்மவர்கள் மதரீதியாகவே, சமுதாய, பொருளாதார, இலக்கிய, கலை, அரசியல் சிந்தனைகளை வளர்க்கும் வண்ணம் சொற்பொழிவாற்ற வேண்டும். இதற்குத் தேவையான பாடப்புத்தகங்கள் இதுவரை நாம் வெளியிட்டு இருக்கும் அறிக்கைகளும், அறிவிக்கைகளும், புத்தகங்களும், மாதந்தோறும் வெளிவரும் குருதேவர் இதழுமேயாகும்.

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்


[குருதேவர் அறிக்கை 21இலிருந்து]

கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடல்களே இன்றைய தேவை

அன்புச் சேவுக!

இன்றைய நிலையில், நாம் இனவெறியையோ! மொழிவெறியையோ, மதவெறியையோ!, வன்முறை வெறியையோ! தூண்டி விடுவதாகவோ ஊக்குவிப்பதாகவோ எளிதாகக் குற்றம் சாட்டப்பட்டு விடலாம். எனவேதான், நாம் மிகமிகத் தெளிவாகவும், விளக்கமாகவும், நேரடியாகவும் நமது கொள்கைகள், குறிக்கோள்கள், திட்டங்கள் ...... முதலியவற்றை விளக்கியேயாக வேண்டும். இதற்காகவே நாடெங்கும் கையெழுத்துப் பிறதி நூலகங்கள் துவக்கி வைக்கின்றோம்; நம்மவர்கள் தனித்தோ! குழுக்களாக இணைந்தோ வசதி வாய்ப்புப்படி அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களிலும், பிற பொது இடங்களிலும் கூடி நின்று உரையாடல் முறையிலும்; வினாவிடை முறையிலும், கலந்துரையாடல் விவாத முறையிலும், நம்மையும், நமது இயக்கத்தையும் அறிமுகப்படுத்த வேண்டுமென்று முயலுகின்றோம். இவற்றைப் புரிந்தும் புரியவைத்தும் தொடர்ந்து மேற்படிச் செயல்கள் நிகழுமாறு செய்வதுதான் இன்றைய தேவை!

நண்ப! நாம், திருவள்ளுவர், திருமூலர், சமயக் குரவர், சங்கராச்சாரியார், பெரியார் ஈ.வெ.ரா., புத்தர், மகாவீரர், ஏசு, முகம்மது நபி, காரல் மார்க்சு, கரம்சந்த் மோகன்லால் காந்தி ...... முதலிய அனைவரின் சிறப்பு இயல்புகளை எல்லாம் நமது தாயகத்து மக்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கூறியே செயல்படுகின்றோம்.

தமிழினத்திற்கே உரிய 'இந்து' என்ற சொல்லையும்; இதற்குரிய பொருளையும் புரிந்து கொள்ள முயலாமலே வெறுப்பது, பிற இனத்தவர்களும், பிற மதத் தலைவர்களும், பிற மொழிகளுந்தான் உயர்ந்தவர் என நினைக்கும் அப்பாவித்தனம்.......... முதலியவைகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்படுவதற்குரிய முழுமையான முயற்சிதான் இக்கலி உகத்தில் தோன்றிய பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோற்றுவித்த 'இலக்கியப் புரட்சி' ['தத்துவப் புரட்சி', 'கருத்துப் புரட்சி', 'எண்ணப் புரட்சி']. அதாவது மதத் துறையில் தோற்றுவிக்கப்பட்ட தீயவைகளும், காலப் போக்கில் தோன்றிய தீயவைகளும்தான் நமது மக்களின் வீழ்ச்சிகளுக்கும் தாழ்ச்சிகளுக்கும் காரணம் என்பதை முழுமையாக உணர்ந்ததால்தான்; இரு பதினெண் சித்தர் பீடாதிபதிகளும் 'குருபாரம்பரியம்' என்ற பெயரால் மத வரலாறும், 'இலக்கியப் பாரம்பரியம்' என்ற பெயரால் சமுதாய வரலாறும், 'அரச பாரம்பரியம்' என்ற பெயரால் தமிழ்நாட்டு அரசியல் வரலாறும் எழுதித் தொகுத்துக் கருத்துப் புரட்சியைத் தோற்றுவித்தனர்.

இப்படி அவர்கள் இலக்கியக் கருவூலத்தைத் தந்து விட்டுச் சென்றுள்ள காரணத்தினால்தான், நம்மால் அவற்றை எளிதில் அறிந்து புரிந்து பகுத்து வகுத்துச் செயல்பட ஏதுவாக அமைகின்றது. இந்த எழுத்துலகத் தொகுப்பேதான் நமது புரட்சிக்குரிய ஆயுதங்கள். இவைகளேதான் நாம் எதிர்காலத்தில் நிகழ்த்தப் போகும் அருளாட்சிக்குரிய போர்ப்பாசறைகளாகவும் பாடிவீடுகளாகவும் அமையும்.

நமது மொழி, இன, நாட்டு வரலாற்று இலக்கியங்களை நம்மவர்கள் படித்துணர்ந்தால் போதும்; முதலில் நம்மவர்கள் அறிவொளியும், அகவொளியும் பெற்றுத் திகழ்ந்திடுவார்கள். மக்களின் அறியாமையையும், கோழை மனத்தையும், கூலி மனப்பான்மையையும் ..... போக்க இக்கருத்துக்களை மக்களிடையே மேடைப் பேச்சாக வழங்க வேண்டும். நமது இயக்கப் பணி அல்லது கொள்கை அல்லது திட்டம் என்பது வேறொன்றுமல்ல; நமது இன மொழி நாட்டு வரலாற்றினை நமது தாயகத்து மக்களை உணர வைப்பதே ஆகும். இம்மாபெரும் பணிக்குத் தயாராகும் நம்மவர்கள் கையில் பிடித்திருக்கும் வாள்களும், வேல்களும், விற்களும் நமது இலக்கியங்களேயாகும் என்னும் கருத்துச் சிந்தனை வளம் பெற்றதாக இருக்க வேண்டும்.

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்


[குருதேவர் அறிக்கை 22இலிருந்து]

மானுட நல உரிமை பேணும் புதியதோர் தத்துவம் பிறப்பிக்கப் படல் வேண்டும்.

அன்புச் சேவுக!

மதம்தான் அகவாழ்வுக்குரிய பண்பாட்டையும், புறவாழ்வுக்குரிய நாகரீகத்தையும், சமுதாய இயக்கத்துக்குரிய அரசியல் சித்தாந்தத்தையும் உருவாக்கிக் காத்துப் போற்றிப் பேணி வளர்த்து வருகிறது. எனவேதான், 'மதமே அனைத்துக்கும் தாய்', 'மதமே பண்பாட்டுக்கும் நாகரீகத்துக்கும் மூலக்கரு', 'மதமே கலையும் அறிவியலும் வளர்க்கப்பட்ட தொட்டில்' ..... என்ற கருத்துக்கள் வலுவாக வளமாகச் செழித்து வருகின்றன.

இப்படிப்பட்ட மதத்தையே வழியாக, வழித்துணையாக, வழிகாட்டியாக ஏற்றுத்தான் மனித வாழ்வில் மாற்றங்களையோ, ஏற்றங்களையோ, தோற்றங்களையோ விளைவிக்க முடியும். எனவே, யாராக இருந்தாலும் தங்களை மதவழியாகச் சிந்திக்கும் சிந்தனையாளர்களாகத் தயாரித்துக் கொண்டால்தான் பயனுள்ள சாதனைகளைச் சாதிக்க முடியும்.

இந்த அரிய, கூரிய, சீரிய, சிறந்த பயன்மிக்க மதத்தின் உயிரே மொழியில்தான் இருக்கின்றது. எனவே, எந்த ஒரு மதமானாலும்; அது பிறப்பிக்கப்பட்ட அல்லது பிறப்பெடுத்த மொழியில்தான் அதனுடைய முழுமையான ஆற்றலும் விளக்கமும், பயனும் கிடைக்கும். எனவேதான் நெடுங்காலமாகக் கிறித்தவ மதம் தனது வேத நூலான 'திரு பைபிளையும்' பிற கருத்துக்களையும் சடங்கியல்களையும், மத நடைமுறைகளையும், ஒழுகலாறுகளையும் இப்ரூ மொழியிலும், இலத்தீன் மொழியிலுமே வைத்துக் காத்திட்டது. இதேபோல், இசுலாமும் தனது வேதநூலான 'திருக்குரானையும்' மற்ற படியுள்ள மதத்தொடர்பான அனைத்துச் செய்திகளையும் அராபிய மொழியிலும் பாரசீக மொழியிலுமே பாதுகாத்திட்டது. ஆனால், உலகம் முழுவதும் நாடு கடந்து மொழி கடந்து இனம் கடந்து இவை பரவியதால், பிற மொழியாளர்களும் மதத் தத்துவங்களையும், சித்தாந்தங்களையும் ...... புரிந்து கொள்ளுவதற்காக அனைத்தையும் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்துத் தாராளமாக வழங்கிட்டார்கள். இதனைப் பின்பற்றி இந்துமதத்தின் தலைவர்களாகத் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் பிறாமணர்களும், பிறாமண ஆச்சாரியர்களும், பீடாதிபதிகளும், மடாதிபதிகளும் ஏன் சமசுக்கிருத மொழியிலுள்ள மத இலக்கியங்களை மொழிபெயர்த்துத் தர முன்வரவில்லை' - வெளிநாட்டார்களில் மாக்சு முல்லர் (Maxmuller), பர்ரோ (T.Burrow), டாயின்பீ (Toynbee), கோல் (G.H.Gole) ..... போன்று சிலர் சமசுக்கிருத இலக்கியங்களை உலகறியச் செய்ய மொழி பெயர்ப்புக்களைப் படைத்தார்கள். ஆனால், அவை சரியானவையல்ல! உண்மையானவையல்ல! ஆழமான பொருளை வழங்க வில்லை! ..... என்றே மேற்படி பிறாமணர்கள் விமர்சனங்களை வழங்கி இருட்டடிப்புச் செய்து விட்டனர். இந்தப் போக்கு ஏன்' ஏன்' ஏன்'

நண்ப! தமிழ் மொழியிலிருந்து திருடப்பட்ட அல்லது கடன் வாங்கப்பட்ட தத்துவங்களும் சித்தாந்தங்களுமே சமசுக்கிருத மொழியில் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, வேதம், உபநிடதம், சுருதி, ஆரணம், ஆகமம்... எனப்படுபவை எல்லாமே ஏறத்தாழ ஒலிநயத்தை மட்டுமே நல்கக் கூடிய பொருளற்ற வெற்றுச் சொற்களின் கூட்டமேயாகும். எனவே, இவை மொழிபெயர்க்கப் பட்டால் கேலிக்கும், கேள்விக்கும் உரிய நிலையையே வட ஆரிய வேதமதமான ஹிந்துமதம் பெற்றிடும். இவற்றால்தான் மொழி பெயர்ப்பை மறுத்தும், வெறுத்தும் எதிர்த்தும் வருகின்றார்கள் பிறமண்ணினரான பிறாமணர்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான் நாம், நமது தமிழ்மொழிப் பூசாமொழி வாசகங்களை வெளியிட்டிடல் வேண்டும். இவற்றால், தமிழ் மொழிக்கு அருளை அநுபவப் பொருளாக ஊற்றெடுக்கச் செய்யும் ஆற்றலுண்டு என்பதை மெய்ப்பிக்கலாம்.

நண்ப! நாம் பழங்காலத்தில் பயன்பட்டிட்ட இந்துமதத்தை மட்டும் மக்களுக்குச் சொல்லாமல் சாக்கிரடீசு, தாந்தே, கதே, இயேசு, முகம்மது நபி, கார்ல்மார்க்சு, ஏங்கல்சு, இலெனின், மாசேதுங், தொல்காப்பியர், திருமூலர், திருவள்ளுவர், யக்ஞவல்லி, வியாசர்கள், வால்மீகிகள், கம்பர்கள், பெருந்தேவனார்கள், இராமலிங்க அடிகளார், பெரியார் ஈ.வெ.ரா. ...... முதலியோர் கூறியுள்ளவைகளையும் கூறியேயாக வேண்டும். அப்பொழுதுதான் இன்றைய நாட்டு நடப்பில் உயிர்த்துடிப்பும், உண்மையும், உற்சாகமும், ஊக்கமும், உட்கிடக்கைமிகு உழைப்பும், சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் பிறப்பிக்கப் படுவதற்குரிய புதியதோர் தத்துவம் பிறந்திடும். மானுட நல உரிமைக்காக நமது செயல்களின் முதல் கட்டமாகத் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற முக்கோண எல்லைக்குள் நமது செயல்களை உருவாக்கிடுவோம். நாம் எதையும் எவரையும் எப்போதும் சந்திக்க, சிந்திக்கத் தயாராக இருப்போம்.

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்


[குருதேவர் அறிக்கை 23இலிருந்து]

தமிழரின் தன்னம்பிக்கை இந்துமதத்தின் வளவளர்ச்சியிலேயே உள்ளது

அன்புள்ள சேவுக!

இன்றைய நாட்டு நிகழ்ச்சிகளை உற்று நோக்கிடு. இரண்டுக்கும் மேற்பட்ட பட்டங்களைப் பெற்ற ஆசிரியப் பெருமக்கள் நூறாயிரம் பேர்களுக்கும் மேல் வெஞ்சிறையில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக வாடி வதங்கித் திரும்பியிருக்கிறார்கள். இவர்களில் பதினாறுபேர்கள் பலியாகியிருக்கிறார்கள்; எண்ணற்றோர் உடல்நலத்தையும், உளநலத்தையும் இழந்து திரும்பியிருக்கிறார்கள். ஆனால், 'போராடித்தான் எதையும் பெறமுடியும்' - என்ற கருத்தை முழுமையாகப் பெற்றே திரும்பியுள்ளார்கள் இவர்கள். தனிமனிதர், குடும்பம், சமுதாயம், அரசியல், சீர்திருத்தம், போராட்டம், புரட்சி, ... என்ற சொர்களைப் புரியவும், புரிய வைக்கவும் முற்படுவார்கள்.

உடல்வலிமை பற்றிய கவலையின்றி இரவு பகலாகப் படித்து; அறிவு வளத்தை மட்டும் பெருக்கிக் கொண்ட ஆசிரியர் சமூகத்துக்கு வெஞ்சிறைக் கொடுமை ஒரு பெரிய அதிர்ச்சி, பயிற்சித் துவக்கம். அதாவது, முறையாகவும், நிறையாகவும் கற்றுத் தேர்ந்த ஆசிரியர் சமூகத்துக்கும், அரைகுறையாகக் கற்றுத் தேர்ந்த அனைத்துத் தலைமைச் சத்திகளுக்கும் இடையே ஏற்பட்ட நேரடிப் போரே இது. இதனால், 'படித்தவர்களுக்கும் படியாதவர்களுக்கும் இடையே போர் விளைந்தால்தான் நியாயம் பிறக்கும்' - என்ற செயல் சித்தாந்தம், நாற்றங்காலில் விதைக்கப்பட்டுப் பயிராக்கப்படும் விவசாயம் துவங்கியிருக்கிறது.

எப்படியோ! .... ' ஆசிரியர் சமுதாயம் போராட்ட உணர்வையும், போராட்டப் பண்பையும், போராட்ட நம்பிக்கையையும், போராடும் பழக்கத்தையும், ........ கற்றுக் கொள்ள வேண்டிய அல்லது வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை வந்து விட்டது. இனிமேல்தான், ஆசிரியர் சமுதாயம் ஏட்டுலகையும், நாட்டுலகையும் இணைக்கும் மாபெரும் பணியில் ஈடுபட்டிடும். அதாவது, இனிமேல், வயிற்றுப் பிழைப்புக்குரிய கல்வியையே வழக்கமாக வழங்கும் நிலைமாறிச் சமுதாய அநீதிகளையெல்லாம் அகற்றும் மெய்ஞ்ஞானக் கல்வியின் வித்துக்கள் விதைக்கப்படும் நிலையே வளர்ந்திடும். அதனால், ஆசிரியர் மாணவர் உறவும், ஆசிரியரின் பாட்டாளி வர்க்க உணர்வும் பொலிவுமிக்க வலிமையோடு செழித்தோங்கி வளரும். எனவே, பொதுவாக இனிமேலாவது 'உழைக்கும் வர்க்கம்' என்ற உணர்வோடு ஆசிரியர் கட்டுப்பாடும், விழிச்சியும், எழிச்சியும், செழிச்சியும் பெற்றிடுவர்.

இதேபோலத்தான், தமிழர்களுக்கும் ஓர் இக்கட்டான போராட்ட நிலைமை உருவாக வேண்டும். அப்போதுதான், இந்துமதத் தத்துவத்திலும், வரலாற்றிலும் உண்மையான பற்றும், முறையான பயிற்சியும், நிறைவான தேர்ச்சியும் விளைந்திடும். அதாவது, இந்துமதத்தை ஏற்றுக் கொண்ட தன்மானத் தமிழனுக்கும்; அரைகுறை இந்து மத அறிவும் பற்றும் பயிற்சியுமுள்ள அப்பாவித் தமிழர்களின் போலித் தலைவர்களுக்கும் இடையே நேரடியான போராட்டம் துவங்கிடல் வேண்டும். அப்பொழுதுதான், தமிழர்கள், தங்களுடைய மொழியுரிமை, இன உரிமை, பண்பாட்டுப் பெருமை, நாகரீக அருமை, சமுதாயக் கட்டுக் கோப்பு, சுய மரியாதை, தன்னம்பிக்கை, ...... முதலிய அனைத்துமே இந்துமதத்தின் வளவளர்ச்சியிலும், வலிமைப் பொலிவிலும்தான் இருக்கின்றது என்ற பேருண்மையைக் கற்றுக் கொள்ள நேரிடும்.

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்