அன்பு சேவுக! - பகுதி 6


  1. அருட்பணி விரிவாக்கத் திட்டம் வெற்றி பெறப் பாடுபடுங்கள்
  2. நமது வளவளர்ச்சியும், செயல் நிலையும்
  3. அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம்
  4. அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம் - (தொடர்ச்சி)
[குருதேவர் அறிக்கை 29இலிருந்து]

அருட்பணி விரிவாக்கத் திட்டம் வெற்றி பெறப் பாடுபடுங்கள்

அன்புச் சேவுக!

பதினெண் சித்தர்கள் பீடாதிபதிகள் தோன்றுகின்ற பொழுது மட்டுமே; அவர்களால், கல்லும் புல்லும்; அதாவது, அனைத்துவகையான உயிரற்ற பொருள்களும், உயிரினங்களும் கடவுளாக்கப்படும் அருட்பணி நிகழுகின்றது. எனவே தான், அனைத்தையும், அனைவரையும் அருளூற்றுக்களாக மாற்றும் அமாவாசை வேள்வி [கந்தழி நிலை = சூரிய வழிபாடு]; மூன்றாம் பிறைத் தொழுகை [கொடி நிலை = விண்மீன், கோள் வழிபாடு]; பருவபூசை [வள்ளி நிலை = திங்கள் (நிலவு, சந்திரன்) வழிபாடு] என்ற மூன்றும் அருட்பணி விரிவாக்கத் திட்டங்க்ளாகின்றன.

ஆண்டுக்கொரு முறை கருகுலம், குருகுலம், தருகுலம், திருகுலம் ஆகிய நான்கிலும் அந்தந்த யுகத்துக்குரிய மாதங்களில்; 'ஞானம் வழங்கு பால்குடப் பருவபூசைத் திருவிழா' கொண்டாடும் திட்டம் செயலாக்கப் படுகிறது; இதன் மூலம் அனைத்து வகையான தர, திர தீர, வீர, உர... மக்களும் ஒரு முறையாவது அருளை அநுபவப் பொருளாகப் பெற்றுத் தெய்வீக இன்பம் துய்க்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனால், அக இருளும், புற இருளும், அகன்று; சாதாரணப் பொது மக்களும் அருளாளர்களாக மாறும் முயற்சியில் ஆர்வம் கொள்ளும் நிலைகள் உருவாக்கப்படுகின்றன.

மனித வாழ்வும் ஏக்கத்திலும் துக்கத்திலும் தூக்கத்திலும், வெறியிலும், அற்பப் பொருளுலக ஆசைகளிலும் வீணாவதைத் தடுக்கும் முயற்சியே ஞானம் வழங்கு பால்குடப் பருவ பூசைத் திருவிழா, இந்த அமுத ஆண்டு வைகாசித் திங்கள் 9-ஆம் நாள் [23-5-86 வெள்ளிக்கிழமை] நிகழ்ந்த ஞானம் வழங்கு பால்குடப் பருவபூசைத் திருவிழாவில் நூற்றுக்கணக்கில் திருக்குடங்களுடன் உலா வந்தவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அருளுற்றுக்களாகவே மாறினார்கள். இவர்கள் மெய் மறந்து அருளுலக இன்ப வெள்ளத்தில் சிறு துரும்பு போல் அலைமோதி துள்ளி ஆடினார்கள். இவர்கள், தங்கள் தலையிலிருந்த திருக்குடத்தை இறக்கிப் பொருளுலகுக்குத் திரும்ப மறுத்துக் குதித்து ஆடியும் அழுதும் புலம்பி ஆனந்தக் கண்ணீர் வடித்தும் ஆடினார்கள். ஒவ்வொருவரையும் நாலைந்து பேர் பிடித்தும் கூட நிறுத்த முடியவில்லை. இறுதியில் பத்துப் பதினைந்து பேர்கள் சேர்ந்து முயன்றுதான் அருள் வெள்ளத்தில் ஆடிச் சென்றவர்களின் தலையிலிருந்து திருக்குடத்தை இறக்க முடிந்தது திருக்குடம் இறக்கப் பெற்றும் சிலர் சுயநினைவு பெறப் பல மணிநேரம் ஆயிற்று இதே நிலைதான் கங்கைக்கரையில் இராமகிருட்டிணப் பரமஅம்சரால் அவரது அடியார் விவேகாநந்தருக்குக் கடவுளை உணரும் பொருட்டு 'அருட்பெருஞ் சுடர்' [The Divine Light அருட்பெருஞ்சோதி] மயக்க நிலையில் வழங்கப்பட்டு; மீண்டும் அவரை அந்த அருளுலகப் பேரின்ப நிலையிலிருந்து விடுவித்துப் பொருளுலக நிலைக்குக் கொணர்ந்தபோது ஏற்பட்டது அதாவது அருளுலக அநுபவம் எவரையும் பொருளுலக உணர்வுகளனைத்தையும் மறந்து பேரின்ப ஆட்டத்தில் ஈடுபடுத்திடும். இப்பேருண்மையை, இனியாவது அனைவரும் அறிந்தும், பிறர்க்கு அறிவித்தும் நமது அருட்பணி விரிவாக்கத் திட்டம் வெற்றி பெறப் பாடுபடுங்கள்.

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்.


[குருதேவர் அறிக்கை 30இலிருந்து]

நமது வளவளர்ச்சியும், செயல் நிலையும்

அன்புச் சேவுக!

நாம் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறந்த வளர்ச்சியினைத் தமிழ் நாடெங்கும் பெற்றிருக்கிறோம். நமது இயக்க நேரடி உறுப்பினர்கள் வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் நன்கு பரவியிருக்கின்றனர். நம்மிடையே கொள்கைத் தெளிவும் குறிக்கோள் பிடிப்பும் உடையவர்கள் எண்ணிக்கையில் நூறின் மடங்குகளாகிவிட்டார்கள் நம்மைச் சார்ந்தவர்களின் நிகழ்ச்சிகளில் பத்தின் பலமடங்கினர் இயக்கத்தவர்களாகவே கூடுகின்ற நிலையும் வளர்ந்திட்டது. நமது அ.வி.தி செயல்வீரர்களின் சுற்றுப்பயணங்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று வருகின்றன. சற்றும் எதிர்பாராத வகையில் நம்மவர்களில் தயங்கியும், மயங்கியும், தேங்கியும், நாணியும் ஒதுங்கி யிருந்தவர்கள் கூட எத்தகையத் தியாகத்தையும் செய்யத் தயாராகிவிட்டார்கள் நாடெங்கும் அ.வி.தி நிலையங்கள் செயல்பட்டு மக்களுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்கும் பணியும் வளமுற்றுவிட்டது. நமது அ.வி.தி நிலையங்களாக மாறியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து நமது வளர்ச்சி வளமான, வலிமையான, வளர்ச்சிதான் என்று எண்ணி பெருமைப்படவேண்டும் நாம்.

ஆர்வம்மிக்க, பொறுமைமிகு இனிய நண்ப! நமது வளவளர்ச்சி வலிவும் பொலிவும், பெற்றிருந்தாலும் அதனுடைய செயல்நிலை முறையும் நிறையும் (A Systamatic Order and a Perfect functioning) பெற்றுத் திகழவில்லை அதாவது நமது செயல் நிலைகள் புதிய புதிய நிறுவனக்கட்டமைப்புக்களையும், தலைமையின் செயல் திட்டங்களின்படி இயங்குகின்ற நிர்வாக ஒழுங்கினையும் பெற்றிடவில்லை என்பது வருத்தத்தோடு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதாவது இன்றைய நிலையில் பல இலட்சம் மக்களுக்கு மேல் நம்மையும், நமது இயக்கங்களையும், நமது கருகுலம் குருகுலம், திருகுலம் போன்ற நிறுவனங்களையும் நன்கு தெரிந்து புரிந்து வைத்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் பேரார்வத்துடன் நமக்கு பேராதரவை வழங்குபவர்களாகவே இருக்கிறார்கள் இப்படிப் பட்டவர்கள் பெரிய பெரிய நகரங்கள் முதல் சின்னஞ்சிறு கிராமங்கள், பட்டிதொட்டிகள், களத்துவீடுகள் ..... முதலிய எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறார்கள். ஆனால் இவர்களையெல்லாம் ஒன்று திரட்டி இயக்கமாக இயங்கச் செய்யும் முறைகள்தான் அதாவது செயல்நிலைகள்தான் வளவளர்ச்சி பெறவில்லை, வலிவு பெறவில்லை. பொலிவு பெறவில்லை, இப் பேருண்மையினைப் புரிந்தும் புரிய வைத்தும் செயல்படப் புறப்பட்டேயாக வேண்டும். நம்மவர்கள் இதற்காகப் பேரன்பு கூர்ந்து தாங்கள் பலருக்கும் அஞ்சல் அனுப்புங்கள். சென்னையில் இ.ம.இ பயிற்சி மன்றம் பல செயல் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுவது போல் அ.வி.தி தலைமைச் செயலகமான குருகுலத்திலும் பல செயல்திட்டங்களை உருவாக்கியே தீரவேண்டும்.

இ.ம.இ.யின் மக்கள் தொடர்பு அமைப்பாக அ.வி.தி தான் பேராற்றலுடன் இருக்கிறது இதற்காக குருகுலத்தில் மாதந்தோறும் நடக்கும் பருவபூசையை அடிப்படையாக கொண்டு மக்களுக்கு அநுபவப் பூர்வமாக, உணர்வுப் பூர்வமாக நமது மெய்யான இந்துமதத்தை வழங்கும் பணி நிகழ்ந்திடல் வேண்டும். அதாவது 'மெய்யான இந்துமத உணர்ச்சி!, மெய்யான இந்துமத வளவளர்ச்சி!, மெய்யான இந்து மத ஆட்சிமீட்சி!, மெய்யான இந்துக்கள் எனப்படும் மதவாதிகளிடையே ஒற்றுமையுணர்ச்சியின் எழிச்சி!, மத வேறுபாடில்லாமல் மெய்யான இந்துக்கள் உலக அருளாளர்களை வழிபட்டுப் பயனடையும் மத ஒருமைப்பாட்டுணர்ச்சியின் கிளர்ச்சி வளர்ச்சி!, படிப்பறிவில்லாத பாமரர்களும் மதத் தத்துவங்களையும், மதப் பெரியார்களின் வரலாறுகளையும், தெரிந்து கொள்ளுமாறு செய்யும் கருத்துப் புரட்சியின் செழிச்சி!, எழுதப் படிக்கத் தெரிந்த மக்களிடையே தழிழ் மொழிதான் அருளுலக ஆட்சி மொழி என்ற பேருண்மை விளங்கச் செய்யும் தமிழின விடுதலைப்புரட்சி முயற்சி மறுமலர்ச்சி!, அனைத்து வகையான கலைத் துறைகளிலும் தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சி விளைவதற்குரிய இலக்கியப்புரட்சி!...' முதலியவைகள் உருவாவதற்குரிய பயிற்சிகளை வழங்கும் முயற்சிகள் நம்மவர்களால் விரைந்தும் விரிந்தும் மேற்கொள்ளப் பட்டேயாக வேண்டும். இந்த அழைப்பின் அடிப்படையில் நாம் செலவழிக்கப் போகும் உழைப்பின் அளவைப் பொறுத்துத்தான் நமது விரிந்த, விரைந்த வளவளர்ச்சியின் வடிவமைப்புச் செய்ய முடியும்.

அடக்கத்திலும் அமைதியிலும் அரும்பணியாற்றிடும் சீரிய நண்ப! தாங்கள் எங்குமுள்ள நமது இயக்கத்தவர்களுடன் நிறுவனங்களைச் சார்ந்தவர்களுடனும் தொடர்ந்து கடலலை பொலத் தொடர்பு கொண்டு அவரவர் அவரவருடைய அறிமுக வட்டாரங்களுக்குட்பட்ட மக்களிடமிருந்து தெளிவான முகவரிகளைப் பெற்று மாதாமாதம் ரூபாய் இரண்டு பெற்று பருவ பூசைக்காக அனுப்புமாறு ஏற்பாடு செய்யுங்கள். இதில் ரூபாய் ஒன்று இ.ம.இ பயிற்சி மன்ற உறுப்பினர் தொகையாகவும் 50 காசு பருவபூசைச் செலவுக்காகவும், 50 காசு அருளுறு யாகச் சாம்பலை அனுப்பும் அஞ்சல் செலவாகவும் பயன்படுத்திக் கொள்ளப்படல் வேண்டும், பருவ பூசைக்காக ஒதுக்கப்படும் 50 காசை ஒரே நாளில் (பருவ பூசைநாளில்) ஆடம்பரமாகவோ, ஆரவாரமாகவோ, அளவுக்கதிகமாகவோ செலவிட்டு விடக்கூடாது. அதாவது மாதம் முழுவதும் நிகழ்கின்ற குருகுலப் பூசைகளுக்கு இந்தப் பருவ பூசை வசூலைத் திட்டமிட்டு செலவழிக்க வேண்டும். அப்போதுதான் இ.ம.இ பயிற்சி மன்ற நிறுவனமும் அ.வி.தி. நிறுவனமும் இணைந்து வலிவோடும், பொலிவோடும். செயல்படமுடியும் இதற்காக நமது அ.வி.தி. நிறுவனங்களுக்கு வரும் மக்களிடம் அனைத்து வகையான நலிவுகளுக்கும் மெலிவுகளுக்கும், பாதிப்புக்களுக்கும் பரிகாரமாக மாதாமாதம் குருகுலத்தில் நடக்கும் பருவ பூசையிலிருந்து அருளூறு யாகச் சாம்பலைப் பெறுவதற்காக ரூபாய் இரண்டு காணிக்கையாகப் பெறும் திட்டத்தைச் செயலாக்குமாறு வேண்டுகோள் அனுப்புங்கள் இதுபோல், நமது அனைத்து அ.வி.தி செயல் வீரர்களுக்கும் அறிவிப்பு வேண்டுகோள் அனுப்புங்கள் நமது குருகுலத்திற்கு வந்து செல்பவர்களிடம் நமது இந்துச் செயல்திட்டத்தை விளக்கிக் கூறுங்கள்.

எத்தகைய ஏழை எளிய பாட்டாளிப் பாமரர்களாக இருந்தாலும் உடல் நோய்க்கு மருந்து வாங்குவதற்குச் செலவழிப்பது போல அல்லது உள்ளத்திற்கு விருந்திற்காக திரைப்படம் போன்ற பொழுதுபோக்கிற்குச் செலவழிப்பது போல அருட்சத்தியினை தங்களது வாழ்விற்கு மருந்தாகவும், விருந்தாகவும் பெற மாதத்திற்கு ரூபாய் இரண்டு செலவழிப்பது மிகமிகச் சாதாரணமான சுலபமான செயலாகும். இத்திட்டத்தின்படி சேருகின்ற மக்களனைவரையும் வரிசை எண் கொடுத்து (Serial No) பேரேட்டில் எழுதுங்கள் மாதமாதம் 1+2=3 நகல் எழுதி, அதாவது புதியதாகச் சேருபவர்களின் பெயர் எழுதி, முழுமுகவரியையும் எழுதி, பழையவர்களின் வரிசை எண்ணையும் பெயரையும் எழுதி தலைவர், பொறுப்பாளர், நிறுவனக் குழு மூவருக்கும் அனுப்புங்கள் குருவாணை.

குவலய குருபீடம் ஞாலகுரு சித்தர் கருவூறார்.

 
[குருதேவர் அறிக்கை 32இலிருந்து]

அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம்

அன்புச் சேவுக!

தாத்தாக்களும் ஆத்தாக்களும் அம்மையப்பன்கள் துணையோடு நிகழ்த்துகின்ற திருவிளையாடல்களுக்குக் காலப்போக்கிலதான்; செயல்முறையில் உரிய விளக்கங்கள் பெரிய அளவில் கிடைக்கின்றன. யாம், எந்த நொடியிலும், எதையும், எம் செயல் என்று எண்ணி விடாதிருக்கத் தாத்தாக்களும் ஆத்தாக்களும் எம்முடைய அன்றாட வாழ்வியல் நிகழ்ச்சிகளில் கூடத் தங்களின் விருப்பப்படியே முடிவுகளை வழங்குகிறார்கள் அதாவது, 'ஊர் கூடி இழுக்கின்ற பெரிய தேருக்குச் சக்கரத்தடியிலேயே அமர்ந்து சிறிய முட்டுக்கட்டை போடுவது அவசியம்' என்பது போல, 'எண்ணற்ற அடியான்களும் அடியார்களும் சேர்ந்து இழுத்துச் செல்லும் எழுந்தருளிகள் அமர்ந்த அழகு செய்யப்பட்ட பெரிய தேராக இருக்கிறது எம்முடைய வாழ்க்கை'. இந்த வாழ்க்கைத் தேரின் சக்கரங்களுக்கடியிலே தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றன. அவை நமது அடியான், அடியாள், அடியார் பயிற்சி முயற்சி தேர்ச்சிகளில் அவ்வப்போது ஏற்படுகின்ற தளர்ச்சி நிலைகள். கட்டுபாடற்ற நிலைகள், தோல்வி நிலைகள், நம்பிக்கையற்ற நிலைகள், அவசர ஆத்திர நிலைகள், பேராசை நிலைகள், 'தான்' என்ற அகம்பாவ ஆணவ வீம்பு நிலைகள், அறியாமை நிலைகள், புரியாமை நிலைகள், தெரியாமை நிலைகள், உலகியல் மயக்க நிலைகள், ஒற்றுமையற்ற நிலைகள், ஒருமைப்பாடற்ற நிலைகள், நட்புணர்வற்ற நிலைகள், தோழமையுணர்வற்ற நிலைகள் தொண்டுணர்வற்ற நிலைகள், சமாதானப் போக்கற்ற நிலைகள், பிறரோடு ஒத்துப் போகத் தயாராக இல்லாத நிலைகள், பிறருக்கு விட்டுக் கொடுத்துப் போகத் தெரியாத நிலைகள் ..... என்று மிகப் பெரிய பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய வடிவங்களாகவே இருக்கின்றன என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் யாம். ஏனெனில், இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் அடிப்படையான, உயிர் நாடியான, உள்ளீடான, மக்கள் தொடர்பு நிறுவனமான அருட்பணி விரிவாக்கத்திட்டத்தின் தலைமைச் செயலாளர் நீ. நீயொருவன் எமது உணர்வு நிலைகளை முழுமையாகப் புரிந்து கொண்டால் போதும்; உன் மூலம் அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

நண்ப! யாம் இது காறும் தோன்றிய மற்ற அருளாளர்களைப் போல்* முயன்றோ அல்லது திடீரென்றோ அருட்சத்தியையோ, சித்தியையோ, முத்தியையோ பெற்றவரல்ல. யாம் முக்காலமும் கடந்து, நிறைந்து, புரிந்து, அண்டபேரண்டங்களின் தொன்மைக்குச் சமமாக விளங்கும் பாரம்பரிய அருட் செல்வங்களைப் பெற்றிருக்கிறோம். எமது பதினெட்டாண்டு காலப் பயிற்சிகளும். பதினெட்டாண்டுகால முயற்சிகளும், கடலோடி, காடோடி, நாடோடி வாழ்வுகளும்; யாம் பாரம்பரியமாகப் பெற்ற அருட்செல்வங்களை எப்படியெப்படி உலகந்தழுவி வழங்க வேண்டுமென்ற வழிமுறைகளையும், நெறிகளையுமே வழங்கியிருக்கின்றன. யாம், அறிவு விழித்த நெறியிலேயே உலகியலின் சொந்த பந்தப் பாசங்களோடு இரண்டறக் கலந்த நிலையிலேயே பகுத்தறிவுப் போக்கிலும் விஞ்ஞானச் சூழலிலும் எமது பணிகளை ஆற்றி வருகிறோம். எமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி; விரல் விட்டு எண்ணினாலும் மாளாத அளவுக்கு அடியான்களும், அடியாள்களும், அடியார்களும் கிடைத்திருப்பதுதான். இவர்கள், யாம் விரும்பும் தேவையான அளவிற்கு மேலேயே கிடைத்து விட்டார்கள். ஆனால் இவர்களுக்குள்; யாம் விரும்புகின்ற தகுதிகளை முழுமையாகப் பெற்றவர்கள் இன்னும் போதுமான அளவுக்கு எண்ணிக்கையில் உயரவில்லை! உயரவில்லை! உயரவில்லை! உயரவில்லை எனவேதான், யாம், இந்த தன்னிலை விளக்க(self - Criticism) அஞ்சலைத் தீட்டுகிறோம்.

நண்ப! நமது சித்தர் நெறிப்படி எல்லோரும் இல்லற வாழ்வு வாழ்ந்தே தீர வேண்டும். எல்லோருமே சொந்த பந்தப் பாசப் பிணைப்புகளோடுதான் வாழ வேண்டும். இந்த அடிப்படைக் கருத்தில்; யாம், எள்முனையளவு கூட மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால், எம்மால் உருவாக்கப்பட்டு வருபவர்களில் சிலர் சொந்த பந்தப் பாசங்களை மறந்தவர்களாகவும், சிலர் துறந்தவர்களாகவும், சிலர் மறுத்தவர்களாகவும், சிலர் வெறுத்தவர்களாகவும், சிலர் ஒதுக்கியவர்களாகவும், சிலர் பதுக்கியவர்களாகவும், சிலர் புதுக்கியவர்களாகவும் ..... இப்படிப் பல நிலையில் இருக்கிறார்கள், இதற்கு யாம் எந்த நிலையிலும் காரண காரியமாகக் கருதப்பட்டு விடக் கூடாது, கருதப்பட்டு விடக் கூடாது, கருதப்பட்டு விடக் கூடாது, கருதப்பட்டு விடவே கூடாது, ஏனெனில், 'யாம், எக்காரணம் பற்றியும் எவருடைய சாபத்தையும் பெறக் கூடாது, பெறக் கூடாது, பெறக் கூடாது, பெறவே கூடாது அதாவது, எம்மிடம் வருபவர்கள் அவரவரின் ஊழ்வினைக்கும், வினைக்கும், ஆள்வினைக்கும், சூழ்வினைக்கும், நாள்கோள் மீன் பாதிப்புக்கும் ஏற்பவே மேலே பட்டியலிட்டுக் காட்டியது போல் பலவகையான உறவு நிலைகளையும், துறவு நிலைகளையும் பெற்றிடுகிறார்கள்.' இப் பேருண்மையினை மற்றவர்கள் புரிந்து கொள்ளா விட்டாலும் பாதகமில்லை; நம்மவர்களாவது முழுமையாகவும், முறையாகவும், தெளிவாகவும், விளக்கமாகவும் புரிந்து கொண்டேயாக வேண்டும். இல்லாவிட்டால், உலகெங்கும் தோன்றி மறைந்த எண்ணற்ற மதங்களைப் போல, அல்லது அருள் இயக்கங்களைப் போல, அல்லது அருளாளர்களின் சாதனைகளையும் போதனைகளையும் போல; யாமும் எமது சாதனைகளும், போதனைகளும், எம்மால் உருவாக்கப்படும் நிறுவனக் கட்டமைப்புக்களும், நிர்வாக ஒழுங்கமைப்புகளும், மங்கி மறைந்திட நேரிடும். இதற்காகத்தான் யாம். கற்றுத் தேர்ந்த நல்லிளைஞர்களையே மிகுதியாகத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறோம். எனவே, நம்மவர்களின் பயிற்சி நிலைகளையும், முயற்சி நிலைகளையும், தேர்ச்சி நிலைகளையும் ஒரு மின்னல் வேகக் கண்ணோட்ட ஆய்வு (A lightning Research Approach or Review) செய்யும் எண்ணம் இந்த அஞ்சல் எழுதுகிறோம்.

நண்ப! யாம், எமது திறமையால் யாரையும் ஈர்த்ததாக எண்ண வில்லை, எண்ண வில்லை, எண்ண வில்லை, எண்ணவே யில்லை. அதனால்தான் யாம் அரிதில் முயன்று உருவக்கிய பேராற்றல் மிக்க அருட்கலைஞர்கள்; காட்டாற்று வெள்ளம் போல் கட்டுப்பாடில்லாமலும், பொறுப்பில்லாமலும், எமது சட்டதிட்டக் கட்டுப்பாடுகளின்படி செயல்படாமலும், நிறுவனக் கட்டமைப்புக்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டாமலும், நிர்வாக ஒழுங்கமைப்புக்களை விரும்பாமலும் தான்தோன்றிகளாகச் செயல்பட்டு; மிகப் பெரிய தோல்வி நிலைகளையும், தேக்க நிலைகளையும், பயனற்ற நிலைகளையும் உண்டாக்கி விட்டார்கள் உண்டாக்கி விட்டார்கள், உண்டாக்கி விட்டார்கள். இப்படிப் பட்டவர்களைத் திருத்துவதற்காக எழுதப்பட்ட நலம் பாராட்டுத் திருவோலைகளும், செயல் விளக்க மடல்களும், கண்டிப்புக் குருவாணை அஞ்சல்களும் ஏறத்தாழப் பயனற்றுப் போய்விட்டன, பயனற்றுப் போய்விட்டன, பயனற்றுப் போய்விட்டன, பயனற்றே போய்விட்டன. ஏனென்றால் யாம் வியந்து வியந்து பாராட்டிப் பூரித்துப் பெருமையடையும் அளவிற்கு மிகப் பெரிய சித்தி நிலைகளைப் பெற்ற சிலர் நம்மிடையே வாழுகிறார்கள். இவர்கள் அனைவருமே தங்களுடைய தகுதிகளை அறியாமலும் குருமொழி கேளாமலும், சட்டதிட்டக் கட்டுப்பாட்டிற்கு உட்படாமலும் செயல்படுவதால்தான்; நமது வளர்ச்சி குடத்துக்குள் ஏற்றி வைத்த விளக்காகவே இருக்கிறது. இவர்களைத் திருத்துவது எமது கையில் இல்லை! இல்லை! இல்லை! இல்லவே யில்லை!!! எனவே, இவர்களை யெல்லாம், இவர்களின் போக்கிலேயே விட்டுவிட்டோம் யாம். அடுத்த நிலையில் நம்மவர்களுக்கிடையில் படித்துப் பட்டம் பெற்றவர், பட்டம் பெறாதவர், வேலை பார்த்துச் சம்பாதிப்பவர், சம்பாதிப்பவர், சம்பாதிக்காதவர், பணக்காரர், ஏழை, செல்வாக்கான குடும்பத்தவர், சாதாரண குடும்பத்தவர், உயர் சாதிக்காரர், தாழ்ந்த சாதிக்காரர் என்ற வேறுபாடுகளும் மாறுபாடுகளும், முரண்பாடுகளும், போட்டி பொறாமைகளும் பேய்க்காற்றுப் போல் தலைவிரித்தாடுகின்றன. இவற்றால்தான், உலகாண்ட தமிழினம் இருந்த இடம் தெரியாமல் இருக்கிறது; உலகாண்ட மெய்யான இந்து மதம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்குச் சிதைந்து சீர்குலைந்து எண்ணற்ற கற்பனை வடிவங்களைப் பெற்றுக் கிடக்கிறது; அண்ட பேரண்டமாளும் அருளுலகத் தமிழ்மொழி தனது மக்களாலேயே இழிக்கப் பட்டும், பழிக்கப் பட்டும், புறக்கணிக்கப் பட்டும், அடிமையாக்கப் பட்டும் அனாதை நிலையில் நாதியற்றுக் கிடக்கிறது;  இவற்றிற்கெல்லாம் பரிகாரமாகத்தான், அருளுலக அரியணையில் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடமாக அறிவு விழித்த நிலையில் திருவோலக்கத்திலும் நாளோலக்கத்திலும் அமர்ந்து அருளாட்சி நடத்தி வருகிறோம் யாம். அதாவது யாம், இலைமறை காயாகவே இருந்து கொண்டு, எம்மால் உருவாக்கப் படுபவர்களின் மூலமே உலகைச் சந்தித்துச் செயல்பட்டு வருகிறோம்.

(தொடர்ச்சி அடுத்த அறிக்கையில்)
 
[குருதேவர் அறிக்கை 33இலிருந்து]

அருளுலகப் பயிற்சி முயற்சி தேர்ச்சி முறை விளக்கம் - (தொடர்ச்சி)

அன்புச் சேவுக!

அனாதி காலத்து, விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மனிதனுக்கு விண்வெளியிலிருந்து வந்திட்ட பதினெண் சித்தர்கள் ஆரம்ப கட்டத்தில் வழங்கிய அதே பயிற்சிகளையும், முயற்சிகளையும் வழங்குகிறோம் யாம். அதாவது எதையுமே அநாகரீகமானது, உலகியலுக்கு அப்பாற்பட்டது, அச்ச கூச்ச மாச்சரியங்கள் உள்ளது, கடுமையானது என்று மறைத்தோ, குறைத்தோ, அஞ்சியோ, கெஞ்சியோ செயல்படுத்தாமல் ஏறத்தாழ அனைத்தையுமே பச்சையாகவும் கொச்சையாகவும் செயல்படுத்தி வருகிறோம் யாம். இதனால் விளைகின்ற நலிவு மெலிவுகளைப் பற்றியோ, சிதைவு இழப்புக்களைப் பற்றியோ, கவலைப்படாமல் செயல்பட்டு வருகிறோம் யாம். இதுவரை, எனவேதான், யாம், எம்மிடம் ஒரு நொடிப் பொழுது பழகிவிட்டுப் பிரிந்தவர்களானாலும் சரி; அவர்கள் எம்மை மறக்கவோ, துறக்கவோ முடியாதவர்களாகவே வாழுகின்றார்கள் என்ற சாதனையைச் சாதித்திருக்கிறோம் யாம்.

நண்ப! நம்மவர்களில் சிலர் யாம் அதிகமாகச் சித்து வேலைகளையும், அற்புதங்களையும், மாயங்களையும் செய்தால்தான் நமக்கு விரைந்த வளர்ச்சி ஏற்படமுடியும் என்று நம்புகிறார்கள், அப்படிப்பட்ட வளர்ச்சி விரைவில் தோன்றி அழியும் காளானின் வளர்ச்சியைப் போன்றதேயாகும். மேலும் இயற்கை கடந்த செயல்களைக் கண்டு வியந்து நமக்குச் சேருகின்ற கூட்டம் புற்றீசல்களைப் போல் அல்லது பட்டாம்பூச்சிகளைப் போல விரைவில் செயல் ஒடுங்கிப் போய்விடும். இக்கருத்தை, யாம், ஆழமாகவும், வலிமையாகவும் எடுத்துரைப்பதற்குக் காரணம் பதினெண் சித்தர்களின் தலைவரான சிவபெருமான் அறுபத்து நான்கு முறைகள் நேரில் தோன்றித் திருவிளையாடல்கள் புரிந்தும், அறுபத்துமூன்று நாயன்மார்களை அனுப்பி அற்புதங்களையும், மாயங்களையும், சித்துக்களையும் செய்து காட்டியும் கூடத் தமிழ் மொழியின் அருளுலக ஆட்சிநிலை நிலைத்து நிற்கவிலலை! மெய்யான இந்துமதம் நிலையான வாழ்வைப் பெறவில்லை.

பதினெண் சித்தர்களின் நேரடி வாரிசான தமிழர்களுக்கிடையில் ஒற்றுமையும், பற்றும், பாசமும், கட்டுப்பாடும், ஒருமைப்பாடும், உரிமை உணர்வும், பண்பாட்டுப் பெருமித உணர்வும் நிலை குலையாமல் நிற்க முடியவில்லை, எனவேதான், யாம் சித்தர்களுக்கே உரிய 'சித்துக்கள் அனைத்தையும் தனித்தனியே கடந்த நிலையில்' தொடர்ந்து வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம். யாம், இம்மண்ணுலகின் மூலத் தத்துவத்தின் பாரம்பரிய நாயகமாகத் தோன்றியிருக்கிறோம். எம்மைப் போல் இன்னும் முப்பத்தாறு (36) பேர்கள் தோன்ற இருக்கிறார்கள். எனவே தான், யாம், கூறுவதைக் கூறுவோம் செய்வதைச் செய்வோம் நடப்பது நடக்கட்டும் என்று நிதானமாக, அடக்கமாக பொறுமையாக, பொறுப்பாகச் செயல்பட்டு வருகிறோம்.

நண்ப! யாம் எந்தத் தனிமனிதரையும், உயர்த்தவோ, தாழ்த்தவோ ஒதுக்கவோ, பதுக்கவோ அடக்கவோ, அடக்காமல் விடவோ, முற்படவில்லை, முற்படவில்லை, முற்படவில்லை, முற்படவில்லை ஏனென்றால்,'கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுநாட்களுக்கு நிலைத்திருக்க மாடடா' என்ற மூதுரையை நம்புகிறவரே யாம். அதாவது யாரும் யாரையும் உயரத்தில் தூக்கி நிறுத்தவோ, அல்லது முதன்மையாக விளம்பரப் படுத்தியோ வளர்த்துவிட முடியாது' வளர்த்துவிட முடியாது! வளர்த்துவிட முடியாது! வளர்த்துவிடவே முடியாது! இதே போல் யாரும் யாரையும் அடக்கியோ, ஒடுக்கியோ மறைத்தோ, குறைத்தோ வளருவதைத் தடுத்துவிட முடியாது' தடுத்துவிட முடியாது! தடுத்துவிட முடியாது! தடுத்துவிடவே முடியாது' எனவே நம்மவர்கள் அச்சிட்டு வழங்கப் பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும், கையெழுத்துப் பிரதிகளாக இருக்கின்ற எண்ணற்ற கட்டுரைகளையும், அஞ்சல்களையும், நூல்களையும் தேடிப் படித்துத் தங்கள் தங்களின் விருப்பத்திற்கும். ஆற்றலுக்கேற்பப் பயிற்சி முயற்சிகளைச் செய்து தேர்ச்சிகளைப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்துக் கொள்கிறோம் யாம்.

தலைவர். குருதேவர், ஞானாச்சாரியார்,