அன்பு சேவுக! - பகுதி 7


  1. நமக்குத் தனிமனிதத் தலைமை கிடையாது; தத்துவம்தான் தலைமையேற்கும்
  2. நமது தேக்க நிலைக்குக் காரணம் நம்மவர்களின் பக்குவமின்மையா?! 'இலக்காட்சியினரின் தோல்விக்குக் காரணம் குருவழிச் செயல்படாமையே'
  3. ஊசலாட்டம் - இந்து மறுமலர்ச்சி இயக்க ஊக்கம் தேயுமா! ஓயுமா! மாயுமா!
[குருதேவர் அறிக்கை 35இலிருந்து]

நமக்குத் தனிமனிதத் தலைமை கிடையாது; தத்துவம்தான் தலைமையேற்கும்

அன்புச் சேவுக!

உனக்கு யாமெழுதியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சல்கள் நம்மிருவரின் தோழமையையும், நட்பையும் மட்டும் விளக்குவனவாக இல்லை. இவை, வரலாற்று முதன்மையும், சிறப்பும் புகழும் பெறுபவை இவை, இந்தப் புவிப்பரப்பின் அறியாமை, புரியாமை, தெரியாமை, இயலாமை, இல்லாமை, கல்லாமை, பொல்லாமை, மாயை, மயக்கம், குழப்பம், கலக்கம் ..... முதலிய அனைத்தையும் தெளிவுபடுத்தும் ஒளிப்பெருஞ்சுடராக அருட்பெருஞ்சோதியாக! கோடைகாலப் பகலவனின் ஒளியாக! ..... விளங்குகின்றன. இருந்தும், நம்மவர்களிலேயே பெரும்பாலானவர்கள் விடுக்கப்படும் அஞ்சல்களின் பொருளாழத்தைப் புரிந்து கொள்ளாமல் புலம்புவர்களாக இருக்கிறார்கள்.

நண்ப! முன்பெல்லாம் தி. க. வில் பெரியார், அறிஞர் அண்ணா. நாவலர் நெடுஞ்செழியன் கலைஞர் கருணாநிதி ..... போன்றவர் பொதுக்கூட்டம் பேச வந்தால்; கூட்டத்துக்குப் பல மணிநேரத்துக்கு முன்பிருந்தே கொள்கை விளக்க நூல்கள், உலகப் பேரறிஞர்கள், மாவீரர்கள், புரட்சிக்காரர்கள் .... முதலியோரின் வரலாற்று நூல்கள்; தமிழின மன்னர்கள், புலவர்கள். பல்கலைவாணர்கள் முதலியோரின் சாதனைகளையும் போதனைகளையும் விளக்கும் நூல்கள்... முதலியவை கடை விரித்து விற்கப்ப்டும். பொதுக்கூட்டத்தில் பேசுபவரனைவருமே பொதுமக்களைத் தங்களது கழக வெளியீடுகள், மலிவு விலையில் கிடைக்கும் புத்தகங்களாகவும்; அரிய பெரிய பயன்மிகு நூல்களாகவும்; அறியாமை அகற்றும் அதிரொலியாகவும் ..... விளக்கி விளம்பரம் செய்து ; வாங்கிப் படுக்குமாறு வேண்டுகோள் விடுப்பார்கள். ஆனால் இன்றைய நிலையில் எந்தச் சமய சமுதாய அரசியல் கட்சிகளும் துணிவோடு தங்களுடைய கருத்தை, கொள்கையை, குறிக்கோளை ..... விளக்கும் நூல்களை அச்சிடுவதும் இல்லை. ஒருவேளை தவிர்க்க முடியாத காரண காரியங்களால் ஒரு சில நூல்களை அச்சிட்டாலும் அவற்றைப் பொது கூட்டங்களில் விளம்பரம் செய்து விற்பதில்லை. அதாவது, அச்சிட்ட நூல்களைப் பெயரளவில் சிலருக்கு வழங்கிட்டு மற்றவற்றைத் தாங்களே முடக்கி வைத்திடும் பழக்கத்தைத்தான் பெரும்பாலான அரசியல் கட்சிகள் செய்கின்றன. இப்படியாக ஏறாத்தாழ எல்லாக் கட்சியுமே 'தனது கொள்கை இதுதான்'; 'தனது குறிக்கோள் இவைதான்'; 'தனது செயல் சிததாந்தங்கள் இன்னவைதான்' என்று வெளிப்படையாகவும், நேரடியாகவும், தெளிவாகவும் விளக்கிக் கூற முடியாதவைகளாகவும் இயலாதவைகளாகவுமே இருக்கின்றன. அதாவது இன்றைய நிலையில் ஏறத்தாழ எந்தக் கட்சிக்குமே கொள்கை கிடையாது! குறிக்கோள் கிடையாது! செயல் சித்தாந்தம் கிடையாது! என்பதுதான் உண்மை. ஆனால், எல்லாக் கட்சிகளிலும் தலைவர்கள் பலராகவும், சிலராகவும் இருக்கின்றார்கள்; தொண்டர்களும் தேவையான அளவு இருக்கிறார்கள். இதெப்படி முடிகிறது என்றால் 'தனிமனிதச் செல்வாக்கும் புகழும்' கட்சிகளை வளர்க்கின்றன.

இப்படித் த்னிமனிதச் செல்வாக்கினால்தான் கட்சிகள் வளர்க்கப்படுகின்றன என்ற பேருண்மை மத்திய அரசிலும், மாநில அரசிலும் நிலவுகின்றன. எனவேதான் எந்தக் கட்சியும் தொண்டர்கள் எடுக்கும் முடிவின் படி இயங்கவில்லை. அதாவது ஏறத்தாழ எல்லாத் தனிமனிதர்களின் கட்சிகளுமே சொந்த விருப்பு வெறுப்புக்களாலேயே நிகழும் கட்சியாகத்தான் இருக்க நேரிடுகிறது. இயங்குகின்றனவாகவே இருக்கின்றன, எனவே எந்தக் கட்சியாலும் நம் நாட்டு மக்களுக்கு நிலையான நன்மைகள் திட்டவட்டமாக உருவாக்கிட முடியாது! முடியாது! முடியாது! முடியவே முடியாது! எனவேதான் தத்துவத்தையோ, தொண்டர்களையோ நம்பாமல் சில 'தனிமனிதச் சொத்துக்களாகவோ'. அல்லது 'ஒரு சிலரின் கூட்டுச் சொத்தாகவோ'தான் இயங்குகின்றன, எனவேதான், எந்தக் கட்சியிடத்தும் நம்பிக்கையோ! ஆர்வமோ வளர்த்துக் கொள்ளாமல் ஏனோதானோ என்று வாழுகிறார்கள். இந்த அவல கேவல நிலைகளைப் புரிந்து நமது இயக்கத்தவர்கள் அதிக அக்கரையுடனும் ஆர்வத்துடனும் செயல்பட்டு நமது இயக்கத்தப் பொது மேடைப் பேச்சுகளின் மூலமும்; அச்சிட்ட புத்தகங்கள், அறிக்கைகள் ..... முதலியவைகளின் மூலமும் வளர்க்கப் பாடுபட வேண்டும்! பாடுபட வேண்டும்! பாடுபட வேண்டும்! பாடுபட்டேயாக வேண்டும்! இல்லாவிட்டால், நமது வருங்காலச் சந்ததியார் தமது இருண்ட இன்னல்மிகு வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தவர்களின் பட்டியலில் நம்மையும் சேர்த்து வசை பாடிடுவார்கள்! வசை பாடிடுவார்கள்! வசை பாடிடுவார்கள்! இதனை உணர்ந்தும் உணர்த்தியும் செயல்பட முற்படுங்கள்.

நண்ப! நாம் மாதாமாதம் (ரூ 1-00) ஒன்று விலையில் வெளியிட்டு வரும் குருதேவர் அறிக்கைகள் முப்பத்து மூன்றும்; நாம், வெளியிட்டுள்ள ஏழெட்டுப் புத்தங்களும் மட்டுமே போதும் நமக்கு, இவற்றை வைத்துக் கொண்டே; நாம், நமது வரலாற்றுப் பின்னணி, இலக்கியச் சான்று, கொள்கை வளம், குறிக்கோள் வலிமை, செயல்திட்டத் தெளிவு ..... முதலியவற்றை உலகம் முழுவதற்கும் விளக்கியுரைத்திடலாம். அதாவது, நமது இயக்கத்துக்கென்று வரலாற்று உரிமையும் இலக்கியப் பெருமையும், தத்துவ பாரம்பரியமும், செயல் சித்தாந்தச் செழுமையும் ... மிகமிகத் தெளிவாகவும் முறையாகவும் நிறையாகவும் ... இருப்பதைச் சுட்டிக்காட்டி விளக்கியுரைத்தே வானுற வளர்ந்திடலாம் நாம். ஆனால், நம்மவர்களில்; முன்னணியில் உள்ள பலர்; நமது இயக்கத்தைத் தங்களின பொழுதுபோக்குச் சாதனமாகவே பயன்படுத்துகிறார்கள், அதாவது 'பாம்பும் சாகக் கூடாது; பாம்பை அடிக்கும் கம்பும் கையும் நோகக் கூடாது' என்ற பழமொழிப் படியே பலர் நமது இயக்கப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் இவர்கள் எல்லோருமே நல்லவர்கள்தான்! நல்லவர்கள்தான்! நல்லவர்கள்தான்! இருந்தாலும், இந்த நல்லவர்கள் பெரும்பாலும் ஏமாளிகளாகவும், சோம்பேறிகளாகவும், அப்பாவிகளாகவும், சுறுசுறுப்பு இல்லாதவர்களாகவுமே இருக்கின்றார்கள் எனவேதான் இவர்களில் யாரையுமே கண்டிக்க விரும்பவில்லை யாம் ..... இது பற்றித் தாங்களே நம்மவர்களோடு சிந்தியுங்கள் .....

நண்ப! பொறுப்பை உணர்ந்தவர்கள் கூடப் பொழுது போக்கும் சாதாரணமானவர்களாக மாறி வரும் நிலை நமது இயக்கத்துள்ளும் வளருகிறது, எனவே, நாம் தனிமனிதர்களை நம்பிப் பயனில்லை; நாம் நமது தத்துவத்தை நம்பித்தான் செயல்பட்டாக வேண்டும்! செயல்பட்டாக வேண்டும்! செயல்பட்டாக வேண்டும்! செயல்பட்டேயாக வேண்டும்! அதாவது கோபுரத்துப் பொம்மைகளுக்கும், கோபுரத்துக்கும் என்ன உறவு என்பதை விளக்கியுரைக்க வேண்டிய காலக்கட்டத்துக்கு வந்துவிட்டோம் நாம். எனவே, நாம், மீண்டும் (பேனாவையும் பேப்பரையும்) எழுதுகோலையும் தாளையும் மட்டுமே நம்பி நமது பணிகளை தொடருவோம். நாம் எதிர்பார்க்கும் நாளும் ஆளும் நமக்குக் கிடைக்கும் வரை விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் ஆங்காங்கே அருட்கணிப்புக் கூறியும், அருள் வழங்கியும் அருளுரையாற்றியும் செயல்பட்டிட்டாலே போதும்! போதும்! போதும்! ஏனெனில், யாம், யாரையும் அடிக்கடி தொந்தரவு செய்து இயக்கப் பணிகளில் ஈடுபடுமாறும், இயக்கம் வளர்க்க இயன்ற உதவிகளைத் தருமாறும் ... ... கேட்டுக் கொண்டே இருக்க இயலாது! அதாவது அவரவராக மனம் விரும்பி ஆற்றக் கூடிய பணிகளையும், தரக்கூடிய ஆதரவுகளையும், உதவிகளையும் பெற்றுச் செயல்பட்டால் போதும் நாம். எனவே, விரைவில் வில்லுப்பாட்டு நாடகம். கலை நிகழ்ச்சி ... முதலியவைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடப் போகிறோம் யாம், அது கண்டு 'நமது குருதேவரா இப்படியெல்லாம் இறங்கிச் செயல்படுகிறார் ...' என்று வருந்தத் தேவையில்லை. ஏனெனில், 'நல்லவர்கள் நினைப்பது மட்டும் நடப்பதே இல்லை நம் நாட்டில்' என்ற குருபாரம்பரிய வாசகம் மெய்யாகி வருகிறது. எமக்கும் தோல்வி ஏற்பட்டிடுமோ'!'!... என்று எண்ணுகிறோம்... ஒதுங்குவோரும் பதுங்குவோரும் பலராவதை உணர்க.

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்.

 
[குருதேவர் அறிக்கை 36இலிருந்து]

நமது தேக்க நிலைக்குக் காரணம் நம்மவர்களின் பக்குவமின்மையா?! 'இலக்காட்சியினரின் தோல்விக்குக் காரணம் குருவழிச் செயல்படாமையே'

அன்புச்சேவுக!

உலகியலுக்குத் தெரிந்த வரலாற்றுப்படி இலக்காட்சியினர் (இலக்கு + ஆட்சியாளர் -> இலட்சியவாதிகள்) கடுமையான சோதனைகளையும் கொடுமையான செயல்களைச் செய்ய வேண்டிய இன்றியமையாத நிலைகளையும் அடைந்து வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அப்படி யல்லாமல், எதிர்பாராமல் எளிமையாகப் புகழும், பதவியும், பொருளும் ஈட்டியவர்கள் மெய்யான சாதனைகளைச் சாதித்தவர்களாக மாட்டார்கள். மேலும், இவர்களுடைய சாதனைகள் நிலைத்த வடிவையோ, வாழ்வையோ, பயனையோ நல்கியவையானதில்லை.

நாம், சிவன், திருமால், பிறமண் ... முதலியவர்களின் வாழ்க்கை வரலாறுகளை விஞ்ஞான நோக்கிலும், பகுத்தறிவுப் போக்கிலும் விளக்கியுரைக்கும் மாபெரும் கருத்துப் புரட்சியின் மூலம்தான் படிப்படியாகச் சமயம், சமுதாயம், அரசியல் மறுமலர்ச்சிகளை விளைவிக்க முடியும் அதனால் நமது எல்லை சமயம்தானா'! ... அல்லது இது கடந்து சமுதாயம், அரசியல் ... என்ற எல்லா எல்லைகளுக்கும் செல்ல வேண்டுமா' என்பதைச் சிந்தித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும், நாம்.

முருகன் பாலகப் பருவம் கடக்கும் முன்னரே தாய்தந்தையரின் போக்கை விமர்சித்துத் தன் போக்கில் முடிவெடுத்து அதனைச் செயலாக்கினான் என்பதையும்; இராமன் தன் மனைவி என்ற பந்த பாசங்களைக் கடந்து சீதையை நெருப்பில் நீராடவும், கொலைத் தண்டனைக்கு உரியவளாக்கிடவும் முற்பட்டான் என்பதையும்; கண்ணன் ஒரு பக்கமும் சார்பின்றிச் சமாதானத்துக்காகப் பஞ்ச பாண்டவர்களுக்காக ஐந்து வீடுகளாவது கேட்டும் தோல்வி கண்டதால் அனைவரையும் அழித்தொழிக்கப் பாரதப் போர் நிகழ்த்தினான் என்பதையும்; மகாவீரர், புத்தர், ஏசு, நபி நாயகம், காலடி ஆதிசங்கரர், அறுபத்து மூன்று நாயன்மார்கள். பன்னிரண்டு ஆழ்வார்கள், பட்டினத்தார், அருணகிரியார், தாயுமானவர், சீர்காழி வள்ளல், சந்தானாச்சாரியார்கள், இராமலிங்கர், ... முதலியோர் அனைவருமே மிகுந்த மனவலிமையோடும், சிந்தைத் துணிவோடும், சொந்தபந்தப் பாசங்களைப் போரிட்டு முறியடித்து வென்றுதான் புதிய சாதனைகளைச் சாதித்திருக்கிறார்கள் என்பதையும் நம்மவர்கள் முறையாகவும் நிறையாகவும் தெரிந்தாராய்ந்து புரிந்து கொள்ள முடியாத காரணத்தால்தான் நமது நிலைகளில் தேக்க நிலைகளும், தொய்வு நிலைகளும், மந்த நிலைகளும் மிகுந்திருக்கின்றன. அதாவது, இலக்காட்சியினர் சூழ்நிலைகளோடும் தீரத்தோடும் வீரத்தோடும் கடுமையாகப் போரிட்டு வெற்றி தோல்வி பற்றிக் கவலையின்றித் தியாகங்களைச் செய்திட்டால்தான் எதையாவது சாதித்தவர்களாகிட முடியும். அப்படிப்பட்டவர்கள் நம்மிடையில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவினராவது உள்ளனரா?

நம்மவர்களில் உலகியலாகப் பணமோ, பதவியோ, செல்வாக்கோ உள்ளவர்கள் தாங்கள்தான் இயக்கத்தையே நடத்துவதாக எண்ணிக் குருவழிச் செயல்படாமல் செயல்படுவதால் தேவையில்லாத தேக்க தூக்க நிலைகளும், சிதைவுச் சீரழிவு நிலைகளும் உருவாகுகின்றன. இதேபோல், ஊழ்வினையாலும் விதியாலும் பயிற்சி முயற்சியாலும் ஓரளவு அருட்சத்திகளையும், சித்திகளையும் பெற்றவர்கள் தங்களால் விளைகின்ற அற்ப சொற்பச் சாதனைகளையெல்லாம் எண்ணித் தாங்களே அனைத்தும் என்ற மாயைக்கும், அகம்பாவ ஆணவங்களுக்கும் உள்ளாகிடுகிறார்கள். இதனால், இவர்கள் குருவழிச் செயல்படாமலும், இந்துமத வரலாற்றுப் பேருண்மைகளை எண்ணிச் செயல்படாமலும், தங்களால் அருளுலகில் மலர்ச்சியும் வளர்ச்சியும் புதிய தோற்றங்களும் பயன்களும் விளைவதாக எண்ணி இறுமாப்புக் கொண்ட தாந்தோன்றிகளாகி விடுகிறார்கள். இருந்தாலும் குருவின் அருள் உள்ளம் அனைவரின் அகஇருளையும் புற இருளையும், அகற்றும் பணியில்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனைப் புரிந்தும் புரியவைத்தும் செயல்பட்டேயாக வேண்டும், நம்மவர்கள்.

பறவையின் குஞ்சுகள் முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வருவது போலப் புதியன சாதிக்க விரும்புகிறவன், தன்னைச் சுற்றியுள்ள அனைத்து விதமான சொந்த பந்தப் பாசக் கட்டுப்பாடுகளையும், மற்ற சமூக சட்ட திட்டக் கட்டுப்பாடுகளையும் முட்டி மோதிப் போரிட்டு உடைத்தெறிந்து விட்டுத் தியாகச் செம்மலாகப் புரட்சி வாழ்வை மேற்கொண்டேயாக வேண்டும். அதற்காகத் தனிமனித வாழ்வில் பழியையும் இழிவையும், அழிவையும், இழப்பையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் வீரதீரப் போரில் விழுப்புண்கள் தாங்கிப் போராட்ட வாழ்வு வாழத் தயாராக இருப்பவனே பக்குவம் பெற்றவனாகக் கருதப் படுகின்றான். இத்தகையவனாலேயே ஆக்கச் சாதனைகளுக்குரிய ஊக்க உணர்வையும், தலைவனாகிய குருவழியே செயல்படக்கூடிய தரத்தையும், திறத்தையும் பெற்றிட முடியும், பெற்றிட முடியும், பெற்றிட முடியும் இந்த நிலையினைப் பெற்றவர்கள் நம்மில் எத்தனை பேர்? எத்தனைப் பேர்? எத்தனை பேர்? ----- என்று நடு நிலையில் நின்று சிந்தித்தால்; நமக்குத் தோல்வி நம்மவர்களாலேயே!' 'நமது தேய்நிலைகளுக்கும் ஓய்நிலைகளுக்கும் காரணம் நம்மவர்களின் ஓயாத மாயா நிலைகளே காரணம்' என்பது விளங்கிடும். அதாவது. நம்மவர்களுக்கிடையில் தன்னையறிந்தோ அல்லது தலைவனைப் புரிந்தோ செயல்படாது, தான்தோன்றித்தனமாகச் செயல்படுபவர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருப்பதன் காரணமாகத்தான் அனைத்து வகையான தூக்க, தேக்க, முடக்க நிலைகளும் வளர்ந்து வருகின்றன. இனியும் இது கூடாது. இந்த 1986-ஆம் ஆண்டு டிசம்பர் மாத குருதேவர் அறிக்கையோடு 36 புத்தகங்களில் நமது கொள்கை விளக்கம் வரலாற்றுப் பூர்வமாக இலக்கியச் சான்றுகளோடும், தத்துவ ஊன்றுகளோடும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளைக் கடந்து பருவமடைந்து பக்குவப்பட்டு விட்டது. எனவே நம்மவர்கள் இந்த 36 அறிக்கைகளையும் மாதமொருமுறை முழுமையாகத் திருப்பித் திருப்பிப் படித்துக் கொண்டு விட்டால் போதும்; பாடி வீடுகளும் பாசறைகளும் முழுமை பெற்றுவிடும்.

அன்பு
குவலய குரு பீடம், அருளாட்சி நாயகம்,
குருமகா சன்னிதானம்,
ஞாலகுரு சித்தர் கருவூறார்.


[குருதேவர் அறிக்கை 37இலிருந்து]

ஊசலாட்டம் - இந்து மறுமலர்ச்சி இயக்க ஊக்கம் தேயுமா! ஓயுமா! மாயுமா!

 அன்புச் சேவுக!

நாம், ஒரு பண்பாட்டுப் புரட்சி இயக்கம்! நமக்கெனப் பழம்பெரும் வரலாறு, இலக்கியம் தத்துவம், வாழ்வியல் நெறி முறை ...... முதலியவை உண்டு. ஆனால், கண்மூடிப் பழக்க வழக்கங்களாலும் மூடநம்பிக்கைகளாலும், தவறான தலைமைகளாலும், இனப்பற்று மொழிப்பற்று இல்லாமையாலும், இனஒற்றுமையும் ஒருமைப்பாடும் இல்லாததாலுமே ...... அனைத்தும் மண்மூடிப் போயின. எனவே, நாம், இருளுக்குள் இருக்கிறோம்; நமக்குள் இருள் இருக்கக் கூடாது.

நண்ப! நூற்றுக்கணக்கான முறை உறுதிமொழி வழங்கிக் குருவையே தாயாக, தந்தையாக, தெய்வமாக, வாழ்வாக ஏற்பவர்களைக் கொண்டுதான் அருட்படை உருவாக்கப்படல் வேண்டும். ஆனால், நம் நாட்டில் படித்த இளைஞர்களில் அலுவலக உழைப்பாளிகளான அறிவியல் சீவிகள் என்றும்; விவசாயம், தொழில் வாணிகம், கலை ... என்று உடலுழைப்பாளிகளான செயல் சீவிகள் என்றும் இருபெரும் பிரிவுகள் உள்ளன. இவற்றை இணைத்தேயாக வேண்டும்.

நமது, அறிவியல் சீவிகள்தான் அனைத்து வகையான இயக்க நடவடிக்கைகளைத் தலைமை தாங்கி முன்னின்று வழிகாட்டி நடத்தவேண்டும். ஆனால், ஊசலாட்டமும், திசைதிருப்பலும். திருத்தல்வாதமும், ஒதுங்கலும், பதுங்கலும் ..... எப்படியோ நமது அறிவியல் சீவிகளிடம் ஆங்காங்கே முளைவிட்டுக் கிளைத்துள்ளன. இவை, செழித்து வளருமுன் தத்துவ விளக்கம், கொள்கை விளக்கம் செயல்திட்ட விளக்கம், குறிக்கோள் நோக்கம் ...... முதலியவைகளைப் பணியாளர்களாக நியமித்து இத் தவறான களைகளைப் பயிரிலேயே வேருடன் பறித்தெடுக்க வேண்டும். இதற்குத் துணிவும், நேர்மையும், நடுநிலையும், பொறுமையும், பொறுப்பும், உரமும், தரமும், திரமும், திறமும், தீரமும், வீரமும் உடைய பல செயல்கள் ஏட்டளவிலும் செயலளவிலும் வழங்கப்படல் வேண்டும்.

நண்ப! யாம் யாரையும் குறைகூற முயலவில்லை ஆனால், நம்மவர்களுக்கிடையே சினிமாவும் சீமைச்சாராயமும். சிகரெட்டும் ... ஆட்சிபுரிந்து அனைத்தையும் மறந்து செயல்படக் கூடியவர்களை உருவாக்கும் நிலை வளர்ந்து விடக் கூடாது. அதற்கு இதுகாறும் வெளிவந்துள்ள 35 முப்பத்தைந்து குருதேவர் மாத அறிக்கைகளையும்; ஓர் ஆண்டு மலரையும் ஏழெட்டுத் தனிநூல்களையும் திருப்பித் திருப்பிப் படிக்கும் பழக்கத்தை மேற் கொள்ளுமாறு அனைவருக்கும் அறிவுரை வழங்க வேண்டும். இதனை, நமது அறிவியல் சீவிகளுக்குச் சட்டமாக்க வேண்டும். அப்பொழுதுதான். அவர்களின் மயக்கம், தயக்கம், பேதளிப்பு, ஊசலாட்டம் முதலியவை அகன்றிடும். நம்மிடம் வளமான, வலிவான கொள்கை இருக்கிறது; தெளிவான. திட்டவட்டமான குறிக்கோளும் இருக்கிறது; மிக எளிய செயல்திட்டங்களும் இருக்கின்றன என்ற பேருண்மை அவர்களுக்குப் புரியும்.

நண்ப! தலைமையை முழுமையாக ஏற்றுத் தலைமைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு எந்த ஆணையையும் ஏற்றுச் செயல்படுத்தும் வீரர்களாக அறிவியல் சீவீகளை உருவாக்க இயலாது என்ற நிலை நாளுக்குநாள் தெளிவாகிறது. மேலும் நகர நாகரிகமும் மேம்போக்கான வாழ்வும் அறிவியல் சீவிகளைக் கோழைகளாகவும், குழப்பவாதிகளாகவும், குறுகிய போக்குடையவராகவும் ஆக்கியுள்ளன. எனவே, நாம், அதிகப் படிப்பில்லாதவர்களையும், உடலுழைப்புப் பாட்டாளிகளையும் நம்பித்தான் அருட்படை திரட்ட வேண்டும். இதற்கு அருட்பணி விரிவாக்கத் திட்டம்தான் உரிய உயர்ந்த வழி.

அன்பு நண்ப! அ,வி,தி. நிலையாட்களை நாடெங்கும் தோற்றுவிக்க வேண்டும் அ.வி.தி. செயல்வீரர்களை உருவாக்கும் பணியிலேயே முழுக் கருத்தையும் கவனத்தையும் செலவிடவேண்டும். இ.ம.இ.யின் மூலம் உருவாகும் கொள்கைவாதிகள் குடிகாரர்கள் போல் திடீர்திடீரென்று திசைமாறவும், திருத்தல்வாதம் போதிக்கவும் ஆரம்பித்திடும் நிலையை வளர்க்கக் கூடாது. 'செய் அல்லது செத்துமடி' [Do or Die] என்ற ஆணைக்கு அடிபணியும் வீரமனம் அ.வி.தி.யால்தான் உருவாகும்.

நம்மவர்கள், கட்டாயமாக அன்றாடப் பூசை, வாரபூசை (வியாழன். ஞாயிறு) மாதப் பருவப்பூசை, அமாவாசை வேள்வி முதலியவைகளைக் கட்டாயமாகப் பயிற்சியாக்க வேண்டும். இல்லாவிட்டால் அருட் பேரரசான பிற்காலச் சோழப் பேரரசின் வீழ்ச்சியே நமக்கும் ஏற்படும். எனவே, யாம் நாளோலக்கத்திலிருந்தும் திருவோலக்கத்திலிருந்தும் விடுக்கும் இந்த அருளாட்சி ஆணையின்படி நமது சன்னிதானங்கள் மட்டுமாவது முழுமையான அ.வி.தி. செயல் வீரராவதற்கு மேற்குறித்த பயிற்சி நிலையைக் கடைப்பிடித்தேயாக வேண்டும். இதற்குரிய விளக்க ஆணைகளைத் திருவோலை நாயகமாகிய தாங்கள் உடனே எங்கும் அனுப்புமாறு குருவாணை வழங்குகிறோம்.

அன்பு
ஞாலகுரு சித்தர் கருவூறார்.