எந்த மானுடம் இந்த மானுடம்


ஓலை:1

மனம் பெற்றதால் மனிதன் அவனே
இனம் என்ற தனியிடத்தால் மானுடம்
வனம் வழங்கிய வன்முறைகளை விடுத்தது
ஊனம் உள்ளத்துள் உறைவது உணர்ந்தே
ஈனம் தடுக்கச் சமயம் பிறந்தது.

ஓலை: 2

வானவாழ்வு தனக்காக்கி மகிழ்ந்தது மானுடம்
அனல் கனல் தணல் காளியாயிற்று
புனல் மழை நீர்நிலை மாரியாயிற்று
மனத்தால் நிறைந்தோர் இறைவராயினர்
இனம் புகழ மாண்டவர் ஆண்டவராயினர்.

ஓலை: 3

மானுடநிலை கடந்த உள்ளத்தோர் கடவுளாயினர்
மானுடம் உய்ய உழைத்தோர் தெய்வமாயினர்
வீரத்தால் உயிர் விட்டோர் பட்டவராயினர்
இனம் காக்கப் பிறவாமை பெற்றோர் கருப்பாயினர்
மனம் காக்கப் பிறவாமைப் பெரியோர் காற்றாயினர்.

ஓலை: 4

விவேகத்தால் ஞானம் விளைத்தோர் தேவராயினர்
ஆவேச ஞான விளைவுடையோர் தேவியராயினர்
அருவநிலை அழியாத மண்ணவர் அமரராயினர்
அருவநிலை அழியாத வானவர் வானவராயினர்
அருவநிலை அழியாத விண்ணவர் விண்ணவராயினர்.

ஓலை: 5

அருவுருவத்தார் கொடிநிலை, கந்தழி, வள்ளியாயினர்
கருவழியார் முனிவர், இருடி, ஞானியாயினர்
குருவழியார் நாயனார், ஆழ்வார், வள்ளலாயினர்
திருவழியார் ஆச்சாரியார், பட்டர், குருக்களாயினர்
மருள்வழியார் பட்டாங்கிப்படி பதின்மூன்று வகையினர்.

ஓலை: 6

அருள்வழியார் இலக்கணப்படி முப்பத்தாறு வகையினர்
கலைவழியார் நூன்மரபால் அறுபத்து நான்கு வகையினர்
தத்துவ வழியார் நூன்மரபால் தொண்ணூற்றாறு வகையினர்.

ஓலை: 7

திருப்பதியார் நூன்மரபால் நூற்றெட்டு வகையாயினர்
சத்திபீடத்தார் நூன்மரபால் இருநூற்று நாற்பத்துமூன்று வகையினராயினர்
சீவாலயத்தார் நூன்மரபால் ஆயிரத்தெட்டு வகையினராயினர்.

ஓலை: 8

இன்ன திறத்தால் மானுடர் தரம் உயர உய்ய
பண்ணுற வழிகளாயிரம் வகுத்த பதினெண் சித்தர்கள்
எண்ணம் கண்டு திருந்திடு மானுடமே.

ஓலை: 9

மண்ணகம் வானகம் விண்ணகம் அண்டம்
பேரண்டம் அண்டபேரண்டம் கண்டவர்களே இவர்கள்
பிண்டத்துள் அண்டங்கள் கோடி கண்டவர்களே இவர்கள்
அண்டங்கள் கோடிவிரியினும் பிண்டத்தை அவற்றுள் நிறைப்பவர்கள் இவர்கள்.

ஓலை: 10

கண்டுணர மாந்தர்நிலை கடந்தவர்களே இவர்கள்
விண்டுரைத்து விளங்குநிலை கடந்தவர்களே இவர்கள்
பண்டு மானுடத்தைப் பயந்தவர்களே இவர்கள்.

ஓலை: 11

மானுடர்க்கு இறவாமை பிறவாமை வழங்கியவர்களே இவர்கள்
மானுடரை கடவுளாக்கும் சமயநெறி கண்டவர்களே இவர்கள்
மானுடர் வழிபடுநிலைக்குரிய நாற்பத்தெட்டு வகை அருளாளரைக் கண்டவர்கள் இவர்கள்

ஓலை: 12

மானுடர் வழிபாடு நிகழ்த்த நூற்றுக்கு மேற்பட்ட வகையான நிலையங்களைக் கண்டவர்களே இவர்கள்
இட்டும் தொட்டும் சுட்டியும் ஞானம் வழங்குபவர்களே இவர்கள்
கோயில், நகரம், ஆலயம், திருப்பதி, கோட்டம், பாழி என தொண்ணூற்றாறும்
மட்டநிலை மானுடர் கெட்டநிலை விட்டொழிக்க
திட்டமிட்டுக் கட்டிய வழிபடு நிலையங்களே.

ஓலை: 13

பட்டப்பகல் பூசையில் விளையும் பத்தியே
வெட்டவெளித் தவமாகிக் கூட்டுவிக்குமே ஞானம்
பதினெண் சித்தர்களே பலவகைச் சித்தர்களைப் பயந்தளித்தனர்
பதினெண் சித்தர்களே பார் முழுவதும் சமயநெறியால்
தனிமனிதர், குடும்பம், சமுதாயம், அரசியலாவன வடித்தனர்.

ஓலை: 14

பதினெண் சித்தர்களே ஆகமம், மீமாம்சை, நிடதம், துணைநிடதம் ஈன்றனர்
பதினெண் சித்தர்களே செப்புமொழி செய்தனர்
பதினெண் சித்தர்களே கலைகள் ஞானங்கள் கண்டனர்
பதினெண் சித்தர்களே தத்துவங்கள் சித்துக்கள் ஈன்றனர்.

ஓலை: 15

பதினெண் சித்தர்களே ஊழ்வினை, விதிகள் வெல்ல வழியமைத்தனர்
பதினெண் சித்தர்களே இதிகாச புராணமென இலக்கியங்கள் தோற்றுவித்தனர்
பதினெண் சித்தர்களே அனாதியினர் ஆதியினர் பாதியினர் மீதியினர்.

ஓலை: 16

பதினெண் சித்தர்களே மறையோர், முறையோர், நெறியோர், வேதத்தோர்
பதினெண் சித்தர்களே ஐந்திறத்தார், ஐந்தரத்தார், ஐங்கரத்தார், ஐம்பூதத்தார்
பதினெண் சித்தர்களே சாத்திறத்தார், சாத்தரத்தார், தோத்திறத்தார், தோத்தரத்தார்

ஓலை: 17

பதினெண் சித்தர்களே அத்திறத்தார், அத்தரத்தார், சூத்திறத்தார், சூத்தரத்தார்
பதினெண் சித்தர்களே நிடதத்தார், துணைநிடதத்தார், ஆகமத்தார், மீமாம்சையார்
பதினெண் சித்தர்களே திருவாக்கார், திருவாசகத்தார், குருவாக்கார், குருவாசகத்தார்.

ஓலை: 18

பதினெண் சித்தர்களே அருள்வாக்கார், அருள்வாசகத்தார், மருள்வாக்கார், மருள்வாசகத்தார்
பதினெண் சித்தர்களே ஞானியர், தவத்தார், பூசையார், கல்வியார்.

ஓலை: 19

பதினெண் சித்தர்கள் திறமே சரித்திறம் வரலாறு
பதினெண் சித்தர்கள் அடைவே சாத்திறம் தோத்திறம்
பதினெண் சித்தர்கள் கொடையே இலக்கியம் கலை
பதினெண் சித்தர்கள் சாதனையே சமயம் அரசியல்
பதினெண் சித்தர்கள் விழியே வழியே பைந்தமிழ்.

ஓலை: 20

பதினெண் சித்தர்களும் பல்வகைச் சித்தர்களும்
எண்ணம்போல் செயல்படவே திட்டமிட்ட தலைமை பிறந்தது
பதினெண்சித்தர் பீடாதிபதிகள் காலங்காலங்களில் தோன்ற ஆணையும் பிறந்தது.

ஓலை: 21

அனாதிக் கருவூறார் என்றும் ஆதிக் கருவூறார் என்றும்
தொன்மதுரைக் கருவூறார் என்றும் தென்மதுரைக் கருவூறார் என்றும்
ப·றுளியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
குமரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கபாடபுரத்துக் கருவூறார் என்றும்

ஓலை: 22

தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
வைகையாற்றங்கரைக் கருவூறார் என்றும்
அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் என்றும்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் என்றும்
கணக்கிடு பதினோரு பீடாதிபதிகள் தோன்றினர்.

ஓலை: 23

கண்ணில் கன்னித்தமிழ் கொண்டு காத்தனர்
விண்ணில் பிறக்கும் ஒலிகளை எழுத்தாக்கினர்
மண்ணில் அருட்பயிர் தழைக்க இலக்கியங்கள் செய்தனர்
மானுடர் வாழ்வு கூனும்குருடும்முடமும் பெறாதிருக்கக் கலைகள் படைத்தனர்
ஏனிடர் எந்தமிழர்க்கு எல்லாம் தமிழால் முடியும்.

ஓலை: 24

விண்ணகத்து மாந்தர்களை விந்தையால் கொணர்ந்து வேண்டுமிடத்து
மண்ணகத்து நாளோலக்கம் புரியச் செய்து மானுடர்
கண்ணகத்துக் காட்டி நிலையான கலைக்கோயிலும் கட்டினரிவர்.

ஓலை: 25

வண்ணத் தமிழால் உருவ அருவ அருவுருவப் பெரியாரெல்லாம் தொழுக
தன்னகத்தே வானகத்தைக் கண்டு போனகத்தைப் புரிந்து உய்க
முன்னகத்தை விண்ணகமாக்கி வித்தையாக்கும் வேந்தர் சித்தர்களே என உணர்ந்தால்

ஓலை: 26

உன்னகத்தை உய்வுறுத்தி உயர்த்தி ஒளியாக்கி நிலையாக்கிடு
வண்டமிழர் வாழ்வெல்லாம் வகைவகையாக வாகை சூடிட வழிகள் செய்தார்
மண்டலமாண்ட வைகையாற்றங்கரைக் கருவூறார் வல்லமை பலவற்றால்
அண்டபேரண்டங்களும் தெய்வத் தமிழால் ஆட்சி செய்யவே வழிகண்டார்.

ஓலை: 27

விண்டுரைத்த வித்தைகளைத் தமிழர் வீணாக்கி
வேதனையாக்கியே வருத்தினர்
பண்டு நினைத்தவை பாழாயின கண்டே
பகலென உடலோடு பரம்பொருளானாரே
கதையானது வைகை யாற்றங்கரைக்
கருவூறாரின் வாகான செயலெல்லாம்
விதையாக இருந்த தத்துவங்கள் வேதாகம
விளைவுகளால் முளைத்தன.

ஓலை: 28

அதையறுவடை செய்யவே அமராவதியாற்றங்கரைக் கருவூறார் தோன்றினார்
கடல் விழுங்கிய சங்கங்கள் வளர்த்த செல்வமெல்லாம் காத்திட்டார்
கன்னித் தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையும் பற்றும் போற்றி வைத்தார்
மக்கள் மலர்ச்சியே மாக்கடலில் மாண்டனவற்றின் மறுமலர்ச்சி.

ஓலை: 29

சமுதாயப் புரட்சியே சங்கத் தமிழ் வளர்ச்சி செழுச்சி
சங்கத் தமிழ் வளர்ச்சியே செழுச்சியே தமிழின எழுச்சி! மீட்சி! ஆட்சி!
தமிழின எழுச்சியே மீட்சியே ஆட்சியே மானுட மலர்ச்சி செழுச்சி
ஆக்கக் கொள்கை இவையென அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் ஆற்றினார் பணிகள் பல.

ஓலை: 30

பாக்கள் பழையன புதியன தொகுத்துப் பகுக்கப்பட்டன
புராண இதிகாசங்கள் காப்பியங்கள் கதைகள் ஏடுபெயர்த்தெழுதப் பட்டன
இலக்கணங்கள் இசைநூல்கள் நிகண்டுகள் நாரைகள் குருகுகள் ஆராயப்பட்டன.

ஓலை: 31

கடவுட் கலைகள் தெய்வீகக் கலைகள் பேய்க்கலைகள்
நோய்க் கலைகள் தேய்கலைகள் பயிற்றப் பட்டன
கலைகள் வளரச் சிலைகளும் கலைக் கூடங்களும் உலைக்கலமாயின
நிலையான நிமிர்வாழ்வு செந்தமிழர் பெற்றிட
அண்டபேரண்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன.

ஓலை: 32

உருவங்கள் அருவங்கள் அருவுருவங்கள்
விரைந்தே கருவறை குருவறைகளில் குடியேறின
திருநின்ற தெய்வ நாடாய் தீந்தமிழகம்
வளர்ந்தாலும் அரசு கெட்டுப் பட்டிட்டது
சமுதாயப் புரட்சியை நம்பியவர் அரசைக்
கவனியாமல் அனைத்து மழிய விட்டார்.

ஓலை: 33

அன்னியர் பலர் ஆழ்கடல் பொங்கியதெனத்
தமிழை, தமிழரை, தமிழ்நாட்டை யழித்தனர்
எண்ணி யெண்ணிப் பதைத்தே தமிழ்ச்
சமுதாயத் தாழ்ச்சியும் வீழ்ச்சியும்
கண்ணிருந்தும் குருடரான தமிழரால்
நிகழ்ந்ததென உணர்ந்தார்.

ஓலை: 34

கன்னித் தமிழ்ச் சமுதாயம் கட்டுக்கோப்பு
விட்டதால் பட்ட பயிராயிற்று.
விண்ணிலிருந்து வந்தவரானாலும் இந்தத்
தமிழ் மானுடரைத் திருத்தலரிதே
செந்தமிழ் நாட்டு மானுடர் எந்த மானுடர்
எனப் புரியவில்லை

ஓலை: 35

எந்த மானுடர் இந்த மானுடராய்ப் பிறந்து
சொந்த மானுடரை நைந்திடச் செய்தார்
வந்த மானுடர் வண்டமிழர் வாழ்வு
தீய்ந்து கருகிடவே செய்தார்
சொந்தத் தமிழருக்குள் பற்றில்லை, பாசமில்லை,
ஒற்றுமையில்லை, கூட்டுறவில்லை

ஓலை: 36

பைந்தமிழருக்கு மொழிப் பாசமில்லை இனப்பற்றில்லை நாட்டன்பு இல்லை
ஒண்டீந் தமிழருக்குத் தன்னம்பிக்கையில்லை
தன்மானப் பிடிப்பில்லை உரிமையில்லை பெருமையில்லை
அமுதத் தமிழர் அன்னியர்க்கு அடிமையாவதில்
அளப்பிலா ஆர்வமிகு மகிழ்வு பெற்றார்.

ஓலை: 37

அந்தோ செந்தமிழர் மாநகரம் மதுரை
செந்தீயால் வெந்து கருகிச் சாம்பலாயிற்று
நந்தமிழ்ப் புலவர்கள் நாடெங்கும் கொன்று குவிக்கப்பட்டனர்
இன்றமிழ் ஏடுகள் அனலிலும் புனலிலும் எறியப்பட்டு அழியலாயின.

ஓலை: 38

வெகுண்டெழுந்த அமராவதி யாற்றங்கரைக் கருவூறார்
ஆற்றிடப் பணிகள் இருந்தன
கரந்த மலையில் மதுரைக் கூலவாணிகன்
சீத்தலைச் சாத்தனார் கொண்டு
சங்கத் தமிழ் சாகாதிருக்க கிடைத்தன
தொகுக்கச் சொன்னார்

ஓலை: 39

பங்கமுற்ற சமுதாய மலர்ச்சிப் புரட்சிப் பணியால் அங்கம் வாடினார்
எங்கும் தமிழ்ச் சமுதாயம் மங்குவதே விதியென வருந்திப் புகுந்தார் நிலவறையில்
காக்கையரும் வானகமெங்கும் கன்னித் தமிழினம் காக்கக் “கா கா” எனக் கதறியே பறக்கலானார்

ஓலை: 40

காக்கையர் கன்னித் தமிழும் நாடும் இனமும்
காக்கத் தினமும் ‘கா கா” எனவே கதறிப் பறக்கிறார்
அன்னியர் தமிழர் மென்னியை நெறிப்பது
கண்டே காக்கையர் கதறுகிறார்
காக்கையர் கதறல் காதில் விழவே பொதிகை மலைக்
குகையிலிருந்து புலியெனப் புறப்பட்டார்
காவிரியாற்றங்கரைக் கருவூறார் புலிக்கொடி
கட்டியே புவியாளப் புறப்பட்டார்.

ஓலை: 41

கன்னித் தமிழர் உணர்வு கன்னியாகவே
இருப்பது கண்டு திருத்த நினைத்தார்
குருபாரம்பரியம் அரச பாரம்பரியம்
இலக்கிய பாரம்பரியம் உருவாக்கியே ஏட்டில் வளரவிட்டார்
கருவான அறிவியல்களை மெய்ஞ்ஞானங்களை ஏட்டில் எழுதினார்.

ஓலை: 42

திருவாய் மலர்ந்த தெய்வத் தமிழறிந்தார் கொண்டு ஏடுகள் தொகுத்தார் நாடுமுழுவதும்
சிறுபள்ளி, பெரும்பள்ளி, தவப்பள்ளி, குருகுலம்
எனப் பல்வகைக் கல்விச் சாலைகள் கண்டார்
வளர்ந்தோங்க கல்விவகை பெறவே
பன்னாட்டுப் பன்னோக்குப் பல்கலைக் கழகம் கண்டார்

ஓலை: 43

வாழ்வியல் கலைகள் போர்க்கலைகள் ஆட்சிக்கலைகள்
அருட்கலைகள் ஆயகலைகளாக
எண்ணற்கரிய கலைகள் நுண்மையாய்
திண்மையாய் பயிற்றப்பட்டன
வான்செலவு, கடல்போக்கு, தேரோட்டம்
யானை குதிரையேற்றம் உலகோர் கற்கத் திரண்டனரே

ஓலை: 44

திருத்தம் பெற்ற மருத்துவம் தேர்ந்த மருந்துகளும்
விரைந்தே ஞால முழுதும் சென்றனர்
பொருத்தமாக தமிழர் வரலாறு பூத்தமலர்க்
காடாக வளர்க்கப்பட்டது.
இராமாயணம், பாரதம், கீதை, வாசிட்டம்,
புராணங்கள், காப்பியங்கள், அறநூல்கள்
வீராவேசங் கொண்டு கிளர்ந்து வளரலாயின விவேக மிகுதியோடு.

ஓலை: 45

தீராக் கலைப்பசியும் வேட்கையும் நெஞ்ச
வறட்சியும் சிந்தை மிரட்சியும்
ஆராத் துயருழந்து அகன்றோடின விலையான
நிறைவுகள் நிம்மதிகள் ஏராளமாயின
பாராண்ட பைந்தமிழர் பாரம்பரியப் பெருமையெல்லாம்
பரந்த வெளிப் பண்டங்களாயின.

ஓலை: 46

தாராளமாய்த் தமிழர் தன்னம்பிக்கை தன்மானம்
தழைத்தோங்கவே வழிகள் பிறந்தன
காரிருளில் கண்ணற்றவர் வாழ்வென விருந்த
கன்னித் தமிழர் வாழ்வும் மாறியது
பொருத்தமான விளக்கங்கள் வரலாறுகள்
பொருள் நூல்கள் மரபு நூல்கள்
திருத்தமான சமுதாய சமய அரசியல் மரபு நூல்கள்
இலக்கண இலக்கியங்கள்

ஓலை: 47

கருவாயிருந்து மறந்து இறந்த தென்றான
கலைகள் ஞானங்கள் எல்லாம் பிறக்கச் செய்தன
உருவான தலைவர்கள் கலைஞர்கள் தளபதிகள்
உருவாக்கியே அனைத்தும் ஞானப்பயிர் விளைத்தனர்
ஒருமை காணாச் சமயக் கணக்கர் சமுதாயப்
பிணக்கர் அரசியல் சுணக்கர்

ஓலை: 48

அருவாய் வளர்ந்த இணக்கமற்ற பிணக்குகளை
சுணக்குகளை வித்தகத் தத்துவத்தால்
கருவூறார் எருவாக்கத் தமிழர் தீரம், வீரம்
மறம் திறம் வளர்த்தாரே
இருநூற்றைம்பத் தாறாண்டுகள் இருள்
பகல் பாராது உழைத்தாரே இவர்.

ஓலை: 49

பட்டி தொட்டி குக்கிராமங்கள் கிராமங்கள்
சிற்றூர்கள் பேரூர்கள் நகரங்கள்
பட்டாளக் கொட்டடிகளாயின பைந்தமிழ் படை
திரண்டு பரணி பாடியே பார்முழுதும் உலா வந்தது
பண்டைய மூவேந்தர் ஆட்சி வலிவோடு
வாழ்வுற்றது வளர்ந்தது மீண்டும்

ஓலை: 50

எண்டிசையும் வென்றார் செந்தமிழர் மந்தைகளாய்
உழைக்க அடிமைகள் வந்தனரே
வண்டமிழகம் வந்தவரை வாழவைத்து
வாழ்வுபெற்றுத் தாழ்வகன்று அருட்பேரரசு பெற்றதே!
சோனகரம் சீனகரம் யவனகரம் அலைகடல்
நகரங்கள் தானாகத் தானமாக வந்தனவே
வானகரம் வையகமே யாமென வளர்ந்த
தஞ்சையில் பெரிய உடையார் விண்ணகரம் வளரலாயிற்று

ஓலை: 51

போன தமிழின வாழ்வு மீளச் சிவாலயங்கள்
சத்திபீடங்கள் திருப்பதிகள் எழுப்பினார்
வானவரை விண்ணவரை அமரரை இருடியை
முனிவரை அருவுருவச் சித்தியாளரை எல்லாம் மானுடராக்கினார்
மோனமாய்க் கருவறை மேல் கோபுரம் அமைத்தே
அருளாட்சிக்கு அருளாளர்களைப் பயிராக்கினார்

ஓலை: 52

திருமுறைகள் திவ்விய பிரபந்தங்கள் குருவாசகங்கள் அருள்வாக்குகள்
எனப் பலவகைப் பத்தி இலக்கியங்கள் சேர்த்தார்
கருவறைக்கே கற்சிலைகள் ஐம்பொன் சிலைகள்
செப்புச் சிலைகள் மரப்பாவைகள் மண்பொம்மைகள் செய்தார்
உருவாக்கிய அடியான் அடியாள் அடியார்
கொண்டே முழுமையாக அனைத்தையும் உயிர்ப்பித்தார்

ஓலை: 53

கரூர் முடிகண்ட சோழபுரத்தே விருப்பப்படி ஆரிய
சந்திரகுல வாரிசைத் தோற்றுவித்தாரே
உருவான இளவரசன் முதலாம் விசயாலயனைக்
குலக்குடியில் கலைகளும் ஞானங்களும் பயிற்றி வளர்த்தாரே
அருவப்போர், உருவப்போர், அருவுருவப்போர்
எத்தனை யெத்தனையோ நித்தம் செய்தாரே

ஓலை: 54

அரியலூர்க் கோவிலூரில் பந்திக்குப் பந்தி
ஆயிரம் மண்குதிரை வீரர் சிலைசெய்தே மாயப்படையை உருவாக்கினாரே
மண்ணால் செய்த மாயப்படை வென்ற வரலாற்றை
சீரிய அவ்வரலாறும் தோற்கக் காவிரிக் கருவூறாரின்
மண்ணாலான மாயப்படை மாபெரும் போர் செய்தது.

ஓலை: 55

திருப்புறம்பயம் பள்ளி வல்லம் கொல்லம்
தெள்ளாறு வெள்ளாறு குடமூக்கு
கருப்பூர் கோவிலூர் வடுவூர் கோட்டைகள் பாட்டைகள்
எனச் சண்டைகள் போர்கள் நிகழ்ந்தன எங்கும்
விருப்புற்ற மக்களால் படை விரிந்தது வெற்றிகள்
குவிந்தன கோட்டங்கள் கோட்டைகள் எழுந்தன

ஓலை: 56

ஆரியர், மோரியர், நந்தர், களப்பிரர், பூரியர்
வீரியர், சூரியர், தத்தாரியர்... ஆட்சிகளெல்லாம் அகன்றன
புதியது செய்யப் புரியாது புலம்பல்வாதிகள்
இணக்கமில்லாச் செயலால் சமுதாய இயக்கம் கெட்டது நின்றது
விதியிது என்று விவேகமின்றித் தளர்ந்த
சுணக்க வாதிகளால் சமுதாய இயக்கம் தடைப்பட்டு நின்றது.

ஓலை: 57

முதலாம் விசயாலயன் பரகேசரி விசயாலயன்
முதலாம் ஆதித்தன் முதலாம் பராந்தகன்
கண்டராதித்தர், அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன்
உத்தம சோழன் முதலாம் இராசராசன் என்று
ஒன்பது பேர் கோள்களாகப் பாரதநாடு முழுமையும்
அருட்பேரரசு கண்டு அருளாட்சி நிறுவினாரே.

ஓலை: 58

தன்னோடு ஆக்கம் பெற்ற அரசியல் மாற்றமே
ஏற்றதெனச் செயல்பட்டும் விளைவு வீணாணது கண்டு நொந்தார்
முன்னர் அமராவதி யாற்றுக் கருவூறார் சமுதாய மாற்றமே
தன்னோக்கு ஆக்கம்பெற ஏற்றுத் தோற்றதை நினைத்தார்
என்ன செய்தால் இந்த மானுடர் திருந்துவர்
எந்த மானுடர் இந்த மானுடர் என்று
தமிழரை எண்ணியே வருந்தினார்.

ஓலை: 59

சமுதாய மாற்றத்துக்குப் பின்னே நிகழும் அரசியல்
மாற்றமே பயனை நல்குமென அறிந்த அளவில்
நிலவறையில் நிறைந்தாரே
நிலவறை புகுந்த நீள் தவத்தோர் நினைவால் கடலெனப்
பொங்கிய கலகங்களைக் கருவூர்த் தேவரே அடங்கச் செய்தார்.

ஓலை: 60

தன் தந்தை முயற்சி முழுமை பெறப் பன்னிரு திருமுறை
அரங்கேற்றியதோடு பல்வகைச் சைவநெறிச்
சாத்திறங்கள் பிறப்பித்தார்
தந்தை போல் முயன்று தஞ்சை போல் புகழ்
விளங்கும் கங்கை கொண்ட சோழீச்சுவரர் கோயில் கட்டினார்
முந்தையோர் முயற்சிகளின் தொடர்ச்சியால்
மூலை முடுக்கெல்லாம் கோவில், ஆலயம்
கோட்டம், பீடம், மடமென்பன கட்டினார்.

ஓலை: 61

தவமிருந்து பெற்ற திருமகனார் திருமாளிகைத் தேவர்
தொண்ணூற்றாறாவதாண்டு நிலவுக் கண்டம்
ஏகிய பின்னும் தமிழினம் காத்தார்
தந்தை பெற்ற வருத்தமே அரச குடும்பத்தாரால்
தமக்கும் வந்தது கண்டே வருந்தி
வட இமயம் நாடினார் தவத்துக்கே
இவர் வழிவந்தோர் ‘தமிழ் விடுதூது’ பாடியே
அரற்றிப் புலம்பி அன்னைத் தமிழின் பெருமை
அறிவிக்க முயன்றார்

ஓலை: 62

அனைத்துலகச் சமயங்களும், சாதிகளும் இனங்களும்
மொழிகளும் இமயம் புகுந்து வந்தே ஆட்சி பெற்றன
தினையளவு வேற்று மொழியோ இனமோ அற்ற
தென்குமரி வட இமயத்திடை பரந்த பாரத நாடு சிதைந்தது.

ஓலை: 63

வினையான பிரிவுகள் வேறான பேர்கள் முரணான
சண்டைகள் முடிவுறாத கலகங்கள் மூண்டு கொண்டே உள்ளன
நினைப்பால் எல்லோரையும் ஒருங்கிணைத்து
பாரதத்தின் நீண்ட புகழை மீண்டும்
நிலைநாட்ட அனைவருமே விரும்புகின்றனர்.

ஓலை: 64

நீண்டு விரிந்து கிடக்கும் பாரதம் அருளாட்சி பெற
மீண்டும் பாரதப் போர் தெரு தோறும்
நிகழ்த்திட அருளரசன் யோகி வரணும்
நல்லிலக்கண இயல்புகளால் சமுதாய மாற்றமும்
அரசியல் மாற்றமும் இணைத்துப் பிணைத்து
நிகழ்த்தத் திருவும் குருவும் ஒருவராய் வரவேண்டும்

ஓலை: 65

இவ்விலக்கணமும் சமய சமுதாய அரசியல்
பொருளிலக்கணமும் புரிந்த அருளுள்ளம் எழுச்சியை
கிளர்ச்சியைத் தலைமை யேற்க வேண்டும்
அல்லவை அகற்றி நல்லவை விளைத்திட அருள் வல்லமையும்
சித்தித் திறமுடைய தவத்தோர் தலைமையில் புரட்சி வேண்டும்

ஓலை: 66

வரட்சி யெல்லாம் வீழ்ச்சியுற்றுத் தாழ்ச்சி நீங்கச்
சூழ்ச்சி மிகு பெருவீரன் மீட்சிப் பணியோடு
ஆட்சி புரிய வர வேண்டும்
மிரட்சி யெல்லாம் திரட்சி பெற்று ஒருமுகமாய்
அழிந்தொழிய அருளாட்சியே வழிகாணும்
இருளகற்றி ஒளி பரப்பிடும்.

ஓலை: 67

பொருளுலகக் குறைகளும் கறைகளும் கடுமைகளும்
கொடுமைகளும் ஒழிய அருளாட்சி மலர வேண்டும்
அருளாட்சி மலர மண்ணுலக மதங்களனைத்தும் ஈன்ற
விண்ணுலகத் தத்துவமாம் இந்துமதம் மலர வேண்டும்

ஓலை: 68

இருளற்ற சமத்துவச் சகோதரத்துவப் பொதுவுடமைக்
கூட்டுறவுச் சமுதாயம் அமைக்க
இந்துமத வழி இயக்கமே திருவழி
உருவாகும் இந்துமத இயக்கம் மறுமலர்ச்சிப்
பணியில் இந்த மானுடர் எல்லோரும்
இணைந்தாலே வழியுண்டு இனி

ஓலை: 69

அருட்பணிகள் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தால்
சித்தர் நெறிக் கலைகளாலும் ஞானங்களாலும் விரைவாக விரிவாகும்
கருவாகச் சித்தர் நெறியும் கன்னித் தமிழும் ஏற்காமல்
எந்த மானுடம் இந்த மானுடம் என்ற பழி வரலாகாது இனியும்

ஓலை: 70

அருளால் மருளால் திருவாக்காக குருவாக்காகப்
பிறணவங்கள் பிறமாணங்கள் மீமாம்சைகள்
வேதங்கள் நிடதங்கள் உபநிடதங்கள் என நாற்பத்தெட்டு
அருளாட்சிக் கருவாகப் பிறணவங்கள்
பிறமாணங்கள் நிடதங்கள் உபநிடதங்கள்
காயந்திரிகள் மீமாம்சைகள் ஆகமங்கள்
என வரும் நாற்பத்தெட்டும் எழுந்தனவே

ஓலை: 71

குருவழி நேரில் பயின்று முயன்று அடியான்
அடியாள் அடியார் உருவாகி அருளாட்சி அமைத்திடுக
அருட்காட்சி ஞானக்காட்சி அத்திற ஓச்சு
கட்டு மந்திறம் கருவறை உயிர்ப்பு
எந்திரம் சக்கரம் பெற்றோர் வளர்க!
திரிந்த காயம் புரிந்த உயிர் போகாப்புனல்
வேகாத் தழை சாகாக் கல்வி அருவுருவச்
சித்தி உற்றோர் உலகறிய உலவுக

ஓலை: 72

தரித்திரம் சோம்பல் இல்லாமை கல்லாமை
இயலாமை அறியாமை புரியாமை தீய்த்து மாய்க்கும்
அருள் வீரர் போர் புரிக
அரிப்பு எரிப்பு எரிச்சல் உதிர்ப்பு ஏக்கம்
சுணக்கம் பிணக்கு இணக்க மறுப்பு
இல்லாத மனம் வளர்க்க அருட்பணி விரிவாகட்டும்

ஓலை: 73

பாரதம் பரம்பொருளின் அருளாட்சி பெறப் பைந்தமிழினம்
பரந்து விரிந்து விரைந்து பாடுபடட்டும்!
பாடுபடட்டும்! பாடுபடட்டும்!

ஓலை: 74

தீராதனவெல்லாம் தீந்தமிழால் தீர்த்து வைக்கத்
திரண்டெழுவீர் செந்தமிழரே உலகப் புரட்சி புரிய
உங்களாலேயே முடியும்
தராதன இல்லை அருளால் எனத் தரணியோர் புகழத்
தண்டமிழரே அருட்செல்வராகி அருட்பணி விரிவாக்கப் புறப்படுவீரே.

ஓலை: 75

இருநூற்றாண்டாகியும் இந்து மறுமலர்ச்சி இயக்கம்
இலைமறை காயாக இருப்பது என்ன நியாயம்
இளையவர்களே சளைக்காதுழைப்பீரே!
ஒருமனப் பட்டவரே அருட்கரு பெற்றுக் குருவாய்
திருவாய் விரைவாய் உருவாகி இருநிலம்
காக்க இருப்பவரே என்றும்.
 


ஓம் திருச்சிற்றம்பலம்