Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • ஆதிசங்கரர் வரலாறு>
  • ஆதிசங்கரர் சித்தாந்தவாதியே!
  • ஆதிசங்கரர் சித்தாந்தவாதியே!

    ஆதிசங்கரர் சித்தாந்தவாதியே!

    மெய்யான இந்துமதமும் பொய்யான ஹிந்துமதமும்

    கேள்வி:- ஆதிசங்கரர் அத்வைத வாதியா? அல்லது சித்தர்களின் சித்தாந்தவாதியா? ஏனெனில், அனைத்தும் மாயை என்று கூறிய அவர் மாந்தரீக சக்கரங்களையும், தாந்தரீகப் பூசாவிதிகளையும், வேதப் பாராயணங்களையும் நம்பியே வாழ்ந்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் ‘அகப் பிறமம்’, ‘தானே கடவுள்’. ‘ஒவ்வொருவரும் தமக்குள் பரமாத்மா இருப்பதையும், பரமாத்மாவுக்குள் தானிருப்பதையும் உணர வேண்டும்’ என்று கூறிய அவர் கன்னியாகுமரி முனையிலிருந்து இமயமலை வரையிலுள்ள பெரும்பாலான கோயில்கள் அனைத்துக்கும் சென்று பூசைகள் செய்திருக்கிறார். அவருடைய வாரிசுகள் என்று கூறிக் கொள்ளும் சங்கராச்சாரியார்கள் அனைவருமே உருவ வழிபாடு செய்பவர்களாகவும், மாந்தரீகத் தாந்தரீகப் பூசைக்காரர்களாகவும்தான் இருக்கிறார்கள். இந்த மாபெரும் முரண்பாடுகளுக்கும், மயக்கங்களுக்கும், குழப்பங்களுக்கும் விளக்கம் தேவை?

    பதில்:-

    (1) நாம் ஆதிசங்கராச்சாரியாருக்காக ஒரு மலர் வெளியிடுகிறோம் என்றால் மெய்யான இந்துமதத்திற்கும், பொய்யான ஹிந்துமதத்திற்கும் இடையே மிகத் தெளிவான வேறுபாடுகளையும், அடிப்படைப் பேருண்மைகளையும், வரலாற்று நுட்பங்களையும் விளக்குவதற்கு ஆதிசங்கராச்சாரியாரின் வரலாறு மிக மிகச் சிறப்பாகப் பயன்படும் என்பதேயாகும்.

    (2) சங்கராச்சாரியார், ஆதிசங்கராச்சாரியார், சிவாச்சாரியார், ஆதிசிவாச்சாரியார், பரமாச்சாரியார், ஆதிபரமாச்சாரியார், ஈசுவராச்சாரியார், ஆதி ஈசுவராச்சாரியார் என்று எட்டுவகை ஆச்சாரியார்கள் சிவன் முழுமுதற் கடவுளாக ஏற்று வழிபடும் கொள்கைக்கு உரியவர்களாக மெய்யான இந்துமதத்தில் அறிவிக்கப் பட்டுள்ளார்கள். இதன்படி, மேற்குறிப்பிட்டு எட்டுவகை ஆச்சாரியார்களும் இவ்வுலகின் அனாதிக்காலம், ஆதிக்காலம், பாதிக்காலம், மீதிக்காலம் எனப்படும் நான்கு யுகங்களிலும் எண்ணற்றுத் தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

    (3) ஆச்சாரியார் சிவனை மட்டும் வழிபட்டால் சங்கராச்சாரியார், சிவாச்சாரியார், ஈசுவராச்சாரியார், பரமாச்சாரியார் என்று குறிக்கப் படுவார். அதே நேரத்தில் சத்தியையும், சிவனையும் (அம்மையப்பன்) சேர்த்து வழிபடக் கூடிய ஆச்சாரியார், ஆதிசங்கராச்சாரியார், ஆதி சிவாச்சாரியார், ஆதிபரமாச்சாரியார், ஆதி ஈசுவராச்சாரியார் என்று குறிக்கப் படுவார். இங்கு ஆதி என்ற சொல் சத்தி வழிபாட்டினைக் குறிக்கிறது. (ஆதிசிவன், ஆதித் திருமால், ஆதி இந்திரன், ஆதி குபேரன், … என்ற சொற்கள் மனைவியோடு வாழ்ந்த சிவன், ஈசுவரன், பிறமண், சங்கரன், பெருமால், திருமால், இந்திரன், குபேரன், … முதலியவர்களை மட்டும் குறிப்பதாகக் குருபாரம்பரியச் செய்தி உள்ளது.)

    (4) இந்தக் கலியுகத்தில் பல சங்கராச்சாரியார்கள் தோன்றியிருக்கிறார்கள். ஆனால், வட ஆரியர்கள் அனைத்துச் சங்கராச்சாரியார்களையும் ஒரே சங்கராச்சாரியாராக ஆக்கி விட்டார்கள். இது ஒரு மாபெரும் மோசடியான மோசமான கருத்தாகும்! செயலாகுக! செய்தியாகும்! ஏனெனில், பிறமண்ணினரான பிறாமணர்கள் எனப்படும் ஆரியர்கள்தான் சங்கராச்சாரியார் பற்றிய ஆதாரங்களையும், செப்பேடுகளையும், இலக்கியச் சான்றுகளையும், நாட்டு வழக்கிலிருந்த அனைத்துச் செய்திகளையும் சிதைத்துச் சீரழித்து ஒழித்து விட்டார்கள்.

    குறிப்பு:- பல சங்கராச்சாரியார்கள் எழுதிய நூல்களையும், உரைகளையும் (பாஷ்யங்களையும்) ஒரே சங்கராச்சாரியார் எழுதியதாகக் கதைகட்டி விட்டிருக்கின்றார்கள். அதாவது பல கருவறைகளில் சிவநிலைப் பெற்றுச் சமாதியான பல்வேறு சித்தர்களையும், சித்தர் குலப் பெண்களையும் ஒரே சிவாம்சம், ஒரே சத்தி அம்சம் என்று கூறி வரலாற்றுக் குழப்பங்களையும், கருத்து மயக்கங்களையும், மெய்யான இந்துமத வரலாற்று இருட்டடிப்புகளையும் செய்தது போலத்தான் பல சங்கராச்சாரியார்களையும், பல ஆதிசங்கராச்சாரியார்களையும் ஒரே ஆதிசங்கராச்சாரியாராக உருவாக்கி யுள்ளார்கள். இங்கு குருபாரம்பரியத்தில் அனாதிசங்கராச்சாரியார், ஆதிசங்கராச்சாரியார், பாதிசங்கராச்சாரியார், மீதிசங்கராச்சாரியார் என்று குறிக்கப் படுபவர்களையும் ஆராய வேண்டும்.

    (5) அத்வைத தத்துவத்துக்குரியவர் சங்கராச்சாரியார் எனப்படுவார். இப்படிப்பட்ட சங்கராச்சாரியார் இம் மண்ணில் இதுவரை 40 பேர்களுக்கு மேல் தோன்றி விட்டார்கள். இன்னும் தோன்ற வேண்டியவர்கள் எட்டுப் பேர்களே. இவர்கள் சிவனையே முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்கள். அதாவது, சீவன் நிலைபேறு பெற்றவர்கள் சித்தர்நெறிப்படி சிவன் என்று அழைக்கப் படுகிறார்கள். இந்த சிவன் என்ற பெரும் பொருள் அல்லது பரம்பொருள்தான் பரமாத்மா அல்லது பரம ஆன்மா என்று அழைக்கப்படுகிறது. இது ஆருயிர், ஆவி, ஆன்மா என்கின்ற மூன்றையும் பிறப்பிடமாகவும், இருப்பிடமாகவும், முடிவிடமாகவும் இருக்கின்றது. இதனை நினைக்கும் போது, பதினெண்சித்தர்கள்; “அண்டபேரண்டங்கள் அனைத்தும் கடந்த பால்வெளியில் எங்கும் நிறைந்த அருவுருவ உயிர்ப் பொருளாக இருப்பதுதான் பரமான்மா. இதுவே 1008 சிவாலய அண்டங்களிலும், 243 சத்திபீட அண்டங்களிலும், 108 திருப்பதி அண்டங்களிலும்; ஓரணு உயிர் முதல் 150 ஆயிரம் (நூற்றைம்பது ஆயிரம் = ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்) அணுக்களைக் கொண்ட மானுட உயிர்வரை வடிவப்பட்டு, வாழ்ந்து, தேய்ந்து, ஓய்ந்து, மாய்ந்து மீண்டும் அந்தப் பால்வெளியையே அடைகின்றது. எனவேதான் ஆன்மாவுக்குள் அண்டபேரண்டங்கள் கடந்த பரமான்மாவின் சத்தியும், பரமான்மாவின் ஆன்மாவும் இருக்கும் தத்துவம் கூறப்பட்டது”. இந்தத் தத்துவத்தைக் கூறுபவர்களே சங்கராச்சாரியார்கள். இவர்கள், மேற்படி தத்துவத்தின் விளக்கமாகவே ‘உருவ வழிபாடு தேவையில்லை, அனைவருமே பரமான்மாவின் வடிவம், உலகப் பொருள்களும், இயக்கங்களும் மாயமே. அதாவது, அனைத்துமே பரமான்மாவில் தோன்றி பரமான்மாவில் முடிகின்றன’ என்று கூறுகின்றார்கள். இந்தச் சங்கராச்சாரியார்கள் நான்கு யுகங்களிலும் தோன்றியுள்ளார்கள். இவர்களின் தத்துவம் பதினெண்சித்தர்களின் தத்துவமே. இவர்கள் பதினெண்சித்தர்களின் தத்துவ வித்துக்களே. (‘13 வகை ஆச்சாரியார்கள் குருவழியாகத் தோன்றுபவர்கள் வேறு; கருவழியாகத் தோன்றுபவர்கள் வேறு’ என்ற குருபாரம்பரிய கருத்தையும், ‘48 வகையான ஆச்சாரியார்கள் பதினெண் சித்தர்கள் மரபுப்படி தோன்றி வருகிறார்கள்’ என்ற குருபாரம்பரியச் செய்தியையும் தனித்தனியாக எண்ணிப் பார்க்க வேண்டுமே தவிர, மேலே உள்ள எட்டு ஆச்சாரியார்களுடன் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. விவரம் குருவழிக் காண்க.)

    (6) ஆதிசங்கராச்சாரியார் என்பவர்கள் பதினெண்சித்தர்கள் மரபுப்படி ‘சத்தி வழிபாடு’, ‘தாய் வழிபாடு’, ‘அன்னை வழிபாடு’, ‘கன்னிப் பூசை’, ‘ஏழு கன்னிகள் பூசை’, ‘ஒன்பது கன்னிகள் பூசை’, ‘தாந்தரீகப் பூசை’, ‘மாந்தரீகப் பூசை’, ‘ஏந்தரீகப் பூசை’, ‘சத்தி சிவ வழிபாடு’ … முதலிய பூசைகளைச் செய்பவர்களே யாவார்கள். இவர்களில் ஞானசித்தர்களும் தோன்றுவதுண்டு.

    குறிப்பு:- இவர்களில் தோன்றும் ஞானசித்தர்கள் உலகியலுக்காகவாவது பெயரளவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதாவது, இல்லறத்தை ஏற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது கூடுவிட்டுக் கூடு பாய்ந்தாவது, வேறு உடல்களிலிருந்து பெண்ணின்பத்தைத் துய்த்து பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதத்துக்குரிய இல்லற வாழ்வை ஏற்றவர்களாக ஆக வேண்டும்.

    (7) மேற்படி பதினெண்சித்தர்கள் நெறிப்படி தோன்றுகின்ற ஆதிசங்கராச்சாரியார்கள் தேவியை அதாவது சத்தியை வழிபடும் நெறிமுறைகளைத்தான் வலியுறுத்தி விளக்கிச் சொல்லுவார்கள். இப்படிப்பட்ட ஆதிசங்கராச்சாரியார்கள் இந்த நான்கு யுகங்களாக 32 பேர் தோன்றியிருக்கிறார்கள். இன்னும் தோன்ற வேண்டியவர்கள் 16 ஆதிசங்கராச்சாரியார்கள் உள்ளார்கள். இந்த ஆதிசங்கராச்சாரியார்கள் 16, 27, 32, 36, 48, 64, 82, 96, 108, 120 என்று பத்து வகையான வயதுகளை உடையவர்களாக இருப்பார்கள்.

    குறிப்பு:- இன்றைக்கு நாட்டு நடப்பில் கூறப்படும் ஆதிசங்கராச்சாரியார் ‘காலடி ஆதிசங்கரன்’, ‘தென்பாண்டித் தமிழன்’, ‘ஆதிசங்கரன்’, ‘வெள்ளாடை மேனியான் ஆதிசங்கரன்’, ‘உச்சிக்குடுமியான் ஆதிசங்கரன்’, ‘கருணீக்க ஆதிசங்கரன்’, ‘சீர்காழி ஞானசம்பந்தன் வழித்தோன்றல் ஆதிசங்கரன்’, ‘ஞானசித்தன் ஆதிசங்கரன்’, ‘வடபுலத்து அருவுருவ அருளாட்சி அமைத்த தமிழ் அந்தணன் ஆதிசங்கரன்’, ‘மாந்தரீக சித்தியாளன் காலடி ஆதிசங்கரன்’, ‘தாந்தரீகவல்லி தமிழ் அந்தணன் ஆதிசங்கரன்’ … என்றெல்லாம் குருபாரம்பரியத்தில் குறிக்கப்படுபவரே யாவார். இவர் தமது 32வது வயதில் இமயமலையில் நீள்தவத்தில் ஆழ்ந்து ஒரு மண்டலப் பருவ பூசைகளை (48 மாதங்கள் = 4 ஆண்டுகள்) முறையாகச் செய்து நிறைவு பெற்று உடல் ஓரிடத்திலும், உயிர் வேறு இடத்திலுமாக பிறவாமைச் சித்தியும், இறவாயாக்கைச் சித்தியும் தமது 36வது வயதில் பெற்றிட்டார். இவரையே பிறமண்ணினரான பிறாமணர்கள் எனப்படும் வட ஆரியர்கள், தங்களுடைய வட ஆரிய வேதமதத்தின் ஆச்சாரியாராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    குறிப்பு:- இந்த பிறமண்ணினரான பிறாமணர்கள் எனப்படும் வட ஆரியர்கள் இதுவரை தோன்றியுள்ள 40 சங்கராச்சாரியார்களையும், 32 ஆதிசங்கராச்சாரியார்களையும் ஒன்றாக்கித்தான் அனைத்து வகையான தத்துவக் குழப்பங்களையும், சித்தாந்தக் குழப்பங்களையும், வேதாந்தக் குழப்பங்களையும், வரலாற்றுக் குழப்பங்களையும், ஆள் மாறாட்டங்களையும் செய்து உள்ளார்கள். இவர்களுக்கு மேலே குறிப்பிட்ட 72 ஆச்சாரியார்களும் (40 சங்கராச்சாரியார்கள் + 32 ஆதிசங்கராச்சாரியார்) பதினெண்சித்தர்கள் தோற்றிவித்த மெய்யான இந்துமதம் வாழ்ந்து வரும் 43,73,086 ஆண்டுகளில் தோன்றியவர்களே யாவார்கள் என்ற பேருண்மை தெரியவில்லை! புரியவில்லை! தமிழினத்தைச் சார்ந்தவன்தான் 8 வகையான ஆச்சாரியார்களாக இருக்க முடியும் என்று குருபாரம்பரியம் கூறுகிறது.

    சித்தர் நெறிப்படி தோன்றும் சங்கராச்சாரியார்கள் பெண்ணின்பத்தைத் துய்த்தே தீர வேண்டும். எனவேதான், பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி இன்றைக்கு இந்த ஆச்சாரியார்களைப் பற்றி விளக்க நேரிட்டது.

    (8) இதுவரை 40 சங்கராச்சாரியார்களும், 32 ஆதிசங்கராச்சாரியார்களும் தோன்றியிருக்கிறார்கள் என்ற கருத்தை எதிர்க்கவோ! மறுக்கவோ! முற்படுபவர்கள் யாராக இருந்தாலும், வெளிப்படையாகக் கூறுகின்ற அளவுக்கு தமிழகத்துக்குள்ளேயே 20க்கும் மேற்பட்ட சங்கராச்சாரியார்களின் சமாதுகள் இருப்பதைத் தெரிந்தும், புரிந்தும் செயல்பட வேண்டும்.

    குறிப்பு:- தமிழகத்திலுள்ள கோயில்களில் சங்கராச்சாரியார்கள் சிலைகள் உடைய இடங்களெல்லாம், சங்கராச்சாரியார்களின் சமாதுகளே. அருளுலகில் ஆச்சாரியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தியாளர்கள், சித்தர்கள், புத்தர்கள், தேவகுமாரர்கள், தேவதூதர்கள், … முதலியவர்களை எல்லாம் அந்தந்த வகைக்கேற்ப ஒரே மாதிரியாகத்தான் முடி, உடை, உணவு, உடல், வாழ்வியல், … முதலியவைகளைப் பெற்றிடுவார்கள் அல்லது அமைத்துக் கொள்ளுவார்கள் என்பதுதான் பதினெண்சித்தர்களின் குருபாரம்பரியச் செய்தி. எனவேதான், மேற்படி ஆச்சாரியார்களின் சமாதுகளில் மேலுள்ள சிலைகள் ஒரே மாதிரியான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டு வேண்டுமென்றால், இதுவரை தோன்றியுள்ள 32 புத்தர்களும், 27 தீர்த்தங்கரர்களும், 47 தேவகுமாரர்களும் (ஈசா = ஏசு), 48 நபிகளும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், … ஒரே மாதிரியான தோற்றத்தைத்தான் அமைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதனைக் கூறிடலாம்.

    (9)

    இந்த இருவேறு வகைப்பட்டவர்களையும், பிறமண்ணினரான பிறாமணர்கள் எனப்படும் வட ஆரியர்கள் ஒன்றாக்கினதால்தான், உங்கள் கேள்வியிலுள்ள மயக்கங்களும், குழப்பங்களும், முரண்பாடுகளும் நிறைந்தன. இன்றுள்ள சங்கராச்சாரியார்களிடம் தெளிவோ, முறையோ, நெறியோ, பூசாவிதியோ, வேதமோ, … முழுமையாக இல்லாமல் இருப்பதற்குக் காரணமே இவர்கள் பதினெண்சித்தர்களின் மெய்யான இந்துமதத்தைப் புரிந்து கொள்ளாமல் பொய்யான ஹிந்துமதத்தில் செயல்படுவதுதான்.

    எனவேதான், எட்டுவகை ஆச்சாரியர்களைப் பற்றியும், 13 வகை ஆச்சாரியார்களைப் பற்றியும், 48 வகை ஆச்சாரியார்களைப் பற்றியும், பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் குருபாரம்பரியம், குருவாசகம், குருவாக்கு, குருவாக்கியம் என்னும் நான்கின் மூலம் விளக்கங்கள் கொடுக்கும் பணி துவக்கப்பட்டிருக்கிறது. அனைத்தையும் முழுமையாக வெளியில் கூறக்கூடாது என்று கருவாணை, குருவாணை, தருவாணை, திருவாணை, அருளாணை, மருளாணை ஆகிய ஆறு ஆணைகளும் கண்டிப்பதால் மேற்கொண்டு விளக்கம் தேவைப்படுகிறவர்கள் நேரில் ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, குருதேவர், அரசயோகி, அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார், 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்களிடம் காண்க! குருவழிக் காண்க!


    தொடர்புடையவை: