Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • பெரியார்>
  • இ.ம.இ. கௌரவத் தலைவர்
  • இ.ம.இ. கௌரவத் தலைவர்

    இ.ம.இ. கௌரவத் தலைவர்

    சித்தர் நெறிச் செல்வரே பெரியார் ஈ.வெ.ரா.

    திருச்சி மாவட்டக் கரூர் அருகிலுள்ள முடிகணம் எனப்படும் முடிகண்ட சோழபுரத்தில் வாழ்ந்த அருட்பேரரசர் காக்கா வழியன் பண்ணையாடி மருதையா பிள்ளை அவர்கள் ‘கரூர்ப் பெரும்புலவர்’ என்ற பட்டத்துடன் கோயம்புத்தூர், சேலம், திருச்சி, தஞ்சை, மதுரை, … முதலிய மாவட்டங்களுக்கு நன்கு அறிமுகமானவர். இவர் அரசவேடம் பூண்டு (தமிழினத்தின் உண்மையான அரச பாரம்பரியத்தில் தோன்றியவர்; அருளுலகில் சித்தர் காகபுசுண்டரின் வாரிசு) பாட்டுப்பாடிக் கூத்துக்களும், நாடகங்களும் ‘புராண இதிகாச மறுப்பாக’ நிகழ்த்தியவர். பிறாமண வெறுப்பையும் மறுப்பையும் வித்திட்டு வளர்த்தவர்.

    இவரது நெடிதுயர்ந்த தோற்றமும், செம்மேனியும், இனிய குரலும், தமிழ்ப் புலமையும், ஆரம்பப்பள்ளி ஆசிரியத் தொழிலும் (திண்ணைப் பள்ளிக்கூடம், தமது பண்ணையத்துக் குடிசையில் நடத்தினார்), கூத்தாடும் தொழிலும், சித்த மருத்துவத் திறமையும், சோதிட ஆற்றலும், தத்துவ நூல், தர்க்க சாத்திரம், கனாநூல், தொடுகுறி, அங்கவியல், மனையியல், வரியியல், நிமித்திகம், … முதலியவற்றில் இவருக்கிருந்த திறமையும், … இவரை நாடறிந்த ‘பெரும்புலவர்’, ‘சித்தர்’, ‘காக்கையர்’ என்று புகழ் பெறச் செய்தன. இவர், தனது செயல்நிலை வாரிசாகச் சுவாமி கைவல்யத்தை உருவாக்கி; இருவரும் இணைந்தே பெரும்பாலும் சுற்றுப் பயணங்களில் ஈடுபட்டிட்டனர்.

    சுவாமி கைவல்யத்தின் பொறுப்பிலே கரூர்ச் சந்தையிலே வெல்லம் விற்பதும்; கரூர் வட்டாரத்தில் மிளகாய், எள், பருத்தி முதலியன வாங்கி ஈரோட்டுச் சந்தையிலே விற்பதும் பெரும்புலவர் காக்கையர் மருதையா பிள்ளையின் பொழுது போக்குகளில் ஒன்று. ஏனெனில், வணிகத்தாலோ, கூத்து நாடகத்தாலோ, மருத்துவத்தாலோ, பிற கலைகளாலோ பொருளீட்டியவர் அல்ல முடிகணம் காக்கா வழியன் (காக்கையர் வழியினர் என்பதன் சுருக்கம்) பண்ணையாடி கரூர் பெரும்புலவர் மருதையா பிள்ளை.

    ஈரோட்டு வணிகத் தொழிலால் வெங்கட்ட நாயக்கரின் மண்டியில் வாடிக்கையாளர்களாக மாறிய மருதையா பிள்ளையும், அவரின் நண்பர் கைவல்ய சாமியாரும் (சுவாமி கைவல்யம் என்றே அனைவராலும் இவர் மரியாதையுடன் அழைக்கப் பட்டார்) தங்களது வேடிக்கைப் பேச்சால் வெங்கட்ட நாயக்கரின் குடும்ப நண்பரானார்கள். ஆண்டு தோறும் சோழியாயி கோயில் (கரூர்ச் சோழமாதேவி, நத்தமேடு சோழியாயி - இதுவே சோழப்பேரரசுகள் பிறப்பதற்குக் கருவாக இருந்த இடம். இதனால்தான் அருகிலுருவான சோழத் தலைநகர் கரூர் எனப் பெயர் பெற்றது) திருவிழாவுக்கு வெங்கட்ட நாயக்கர் குடும்பத்தார் வருவதும்; நன்கொடைகள் வழங்குவதும் ஈரோட்டுக் காவிரிக்கரையையும், கரூரின் அமராவதி ஆற்றங்கரையையும் இணைத்தது.

    அதாவது வெங்கட்ட நாயக்கரின் இளைய மகன் பெயரில் ‘ஈ.வெ.இராமசாமி நாயக்கர் மண்டி’ என்ற வணிகநிலையம் ஈரோட்டில் புகழ் பெற ஆரம்பித்ததுடன்; கரூர்ப் பெரும்புலவர் மருதையா பிள்ளையும், அவரது தத்துவத் தயாரிப்பான சுவாமி கைவல்யமும் காவிரிக்கரை ஈ.வெ.இராமசாமியை அமராவதிக்கரைக்கு வரவழைத்துச் சித்தர் நெறிச் செல்வராகத் தயாரித்தனர். பெரும்பாலும் இருவரில் ஒருவர் ஈரோட்டில் தங்கி ஈ.வெ.இராமசாமியைத் தயாரிக்கலானார்கள்.

    ஒரு திருமண விழாவில் ஈ.வெ.இராமசாமி உட்கார்ந்திருந்த பந்தியிலிருந்து பிறாமணன் ஒருவன் அவரை எழுப்பிச்

    “சூத்திரன் உட்காரக் கூடாது. அது பிறாமணர்க்குரிய பந்தி. வெளியே போய் உட்கார்… …”

    என்று சொன்னவுடன் அருகிலிருந்த சுவாமி கைவல்யம் அந்தப் பிறாமணனைக் கீழே தள்ளி அடியும் உதையும் கொடுத்தார். ஈ.வெ.இராமசாமி சண்டையை விலக்க வெளியே கைவல்ய சாமியாரை அழைத்து வந்து;

    “நாம் பிறாமணாள் சாப்பிடற இடத்திலே உட்கார்ந்ததுதான் தவறு. நீங்க சாமியாரே இப்படி பிறாமணாளை அடிக்கலாமா?”

    என்று கேட்டார்.

    அப்பொழுதுதான் சுவாமி கைவல்யம்,

    “… இராமசாமி!, உன் தந்தையோ, தாயோ, அந்தப் பிறாமணன் சொன்னதை நல்ல வேளை கேட்கவில்லை. அவன் உன்னைத் தாசிமகன், தேவடியாள் மகன், அடிமை வேலை செய்யப் பிறந்த கீழ்மகன் … என்று திட்டினான். அது உனக்குப் புரியவில்லை. இல்லாவிட்டால், அந்தப் பிறாமணன் உன்னைச் சூத்திரன் என்று சொல்லியவுடனே நீயே அவனைக் கொன்றிருப்பாய். பிச்சையெடுத்துப் பிழைக்கும் இந்தப் பிறாமணன் உன்னைத் திட்டியதைக் கேட்டுக் கொண்டு சும்மாயிருந்தால் என்னை மருதையா பிள்ளை தயாரித்ததற்குப் பயனே இல்லாமல் போயிருக்கும் …”

    என்று குமுறினார்.

    அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ஈ.வெ.இராமசாமிக்குப் பிறாமணர் ‘சூத்திரர்’ என்ற சொல்லால் அனைவரையும் தாசிமகன், தேவடியாள் மகன், அடிமை … என்பது புரிந்து பிறாமணர் மேல் வெறுப்பு வளர்ந்தது. அந்த வெறுப்பைக் கரூர் அமராவதி ஆற்றங்கரையில் மருதையாபிள்ளையின் புலமையும், சுவாமி கைவல்யத்தின் தர்க்க சாத்திர அறிவும் உரமிட்டுக் களை பறித்து வளமாக வளர்த்தன.

    பிறாமணரின் வேத மதத்தின் மாயைகளையும், பொய்களையும், ஆபாசங்களையும், ஏமாற்றுக்களையும், சுரண்டல்களையும் ஒழித்தால்தான் தமிழனின் மானம், மரியாதை, உரிமை, பெருமை, வாழ்வு, … முதலிய அனைத்துமே பிழைக்கும் தழைக்கும் என்ற சித்தர் நெறியின் வாரிசாக ஈ.வெ.இராமசாமியைத் தயாரித்தவர்கள் காகபுசுண்டர் கரூர் பெரும்புலவர் மருதையா பிள்ளையும் அவர் நண்பர் சுவாமி கைவல்யமுமேயாகும். எனவேதான், பொது வாழ்விலிருந்து ஒதுங்கி வாழும் நான், சித்தர் நெறிச் செல்வரே பெரியார் ஈ.வெ.ரா. என்ற பேருண்மையை விளக்கி அவரை இ.ம.இ.யின் கெளவரவத் தலைவராக்கப் பரிந்துரைக்கிறேன்.

    - காக்காவழியன் பண்ணையாடி சித்தர் காகபுசுண்டர் ம.பழனிச்சாமிபிள்ளை, இ.ம.இ.யின் இரண்டாவது பாரம்பரியத் தலைவர்.

    தொடர்புடையவை: