Gurudevar.org
  • முகப்புப் பக்கம்>
  • 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி>
  • அருளாட்சி ஆணைகள்.>
  • அருளாட்சி ஆணைகள் - நிறைவுரை.
  • அருளாட்சி ஆணைகள் - நிறைவுரை.

    அருளாட்சி ஆணைகள் - நிறைவுரை.

    பதினெண்சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள்

    நிறைவுரை

    அருளாட்சி நாயகம், ஞானாச்சாரியார், இந்துமதத் தந்தை, இராசிவட்ட நிறைவுடையார், அரசயோகி, குருதேவர் அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம், குவலய குருபீடம், குருமகா சன்னிதானம் , ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்.

    1. இந்த நிறைவுரை தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய குருமகா சன்னிதானம் பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் எழுதிய குருபாரம்பரிய வாசகங்களையும்; செவிவழியாக வாழுமாறு செய்த குருவாக்கியங்களையும்; பிறர் எழுதி வைத்துக் காத்த குருவாக்கியங்களையும், வாசகங்களையும்; நாமக்கல் மோகனூர் உருத்திரம்பிள்ளை தொகுத்து வைத்த குறிப்புக்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு கண்டப்பக் கோட்டை சித்தர் ஏளனம்பட்டியார் எழுதியவைகளிலிருந்து உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

    2. “அருள்மொழித்தேவன் தன்னுடைய வாழ்நாளில் தானே முயன்று தோற்றுவித்து உருவாக்கி வளர்த்த ஒன்றாகவே அருட்பேரரசான சோழப் பேரரசை கருதினான். இன்னும் சொல்லப் போனால் அருள்மொழித்தேவன் தன்னை இராசராசனாக நினைத்துக் கொண்டதினால் தானே ஒரே ஒரு இரவுக்குள் தஞ்சை மாநகரை உருவாக்கியதாக நினைத்துக் கொள்கிறான். எனவேதான், தன்னிச்சையாகச் சோழப் பேரரசை ஆள முற்படுகின்றான். இம்மாபெரும் தவறை அவனே உணர்ந்து திருந்துமாறு செய்ய வேண்டும்.”

    3. “இராசராச சோழன் ஒட்டக்கூத்தர்களான வட ஆரியர்களுக்கு அளவுக்கு மீறிய முதன்மையும், சிறப்பும் பெருமையும் வழங்குகிறான். இதனால், இந்த அன்னியர்கள் தமிழினத்துப் பாணர், பாடுமகள், விறலியர், ஆடுமகள், கூத்தர், தொடியர், பொருநர், துடியர், கடம்பர், பறையர், மேளத்தார், வாத்தியத்தார் (வாத்து + இயம் = வாத்தியம் –> வாத்துக் கூட்டம் ஒலி எழுப்புவது போல் சிலர் சேர்ந்து எழுப்பும் இசையொலி) ……. முதலியவர்களையெல்லாம் அடிமைப்படுத்தி, செல்வாக்கிழக்கச் செய்து தங்களையே அனைத்துக்கும் உரிய பெரியவர்களாக நிலைநிறுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகி விட்டது. இப்பேருண்மையினை இன்றைக்கு உணர மறுக்கின்ற, மறக்கின்ற இராசராசசோழன் காலப்போக்கில் இதை உணர்ந்தே தீருவான். ஆனால், அதற்குள் இந்த அன்னியர்கள் தங்களையும், தங்களுடைய நிலைகளையும் இவற்றிற்குரிய தங்களுடைய தாய்மொழியான சமசுக்கிருத மொழியையும் மிகமிக உயர்ந்ததாக உலகத்தார் நம்பச் செய்து விடுவார்கள். அதன்பிறகு, இந்த வட ஆரியர்களின் பிடியிலிருந்து நமது சமுதாயத்தையும், சமயத்தையும் விடுவிப்பது அரிது! அரிது! அரிது! அதாவது, தனிமனிதர்களைக் கூட வட ஆரிய மாயையிலிருந்து காப்பாற்றுவது மிகவும் சிரமமாகி விடும். எனவே, இந்த அருட்பேரரசுக்கு முன்னால் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேலாகச் சமய, சமுதாய, அரசியல் துறைகளில் அன்னியர்களால் அனாதைகளாகவும், நாடோடிகளாகவும், பிச்சைக் காரர்களாகவும் ஆக்கப்பட்டிருந்த இத் தமிழர்களை அவர்களுக்குரிய தத்துவ பீடமான பதினெண் சித்தர் பீடமே அவர்களது வாழ்க்கையை மாற்றி யமைப்பதற்காக அருட்பேரரசான சோழப்பேரரசை அமைத்தது. இருந்தாலும், அருட்பேரரசின் அரசர்கள் காலப் போக்கில் மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று, கடமை உணர்ச்சி, பொறுப்புணர்ச்சி, தத்துவ பீடத்தின் தலைமை அருளாளர்களின் வழிகாட்டல் முதலியவைகளை மறக்கவும் துறக்கவும் முயன்று அருட்பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாகி விட்டார்கள். இவற்றால்தான் தமிழகத்து அரசியலும், தமிழினத்தின் சமய சமுதாயமும், பாரம்பரிய தமிழ்த் தமிழினத்தின் சமய சமுதாயமும், பாரம்பரிய தமிழ்த் தத்துவ நாயகர்களாலேயே தலைமை தாங்கி வழிநடத்தப்பட வேண்டும் என்ற நியதியை விதியாக்கி ஆணையாக்கினோம். இதனைப் புரிவோரில்லை, புரிந்த சிலரும் பலருக்குப் புரிவிப்பவராக இல்லை. என் செய்வது?”

    4. “பாரம்பரியத்தை மட்டும் நம்பி அரச குடும்பத்தவர் அடுத்தடுத்து அரியணையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டது தவறாகிவிட்டது. அரச குடும்பத்தவர்களும், மற்ற அரசியல் துறை அலுவலர்களும், அதிகாரிகளும் கட்டாயமாக அன்றாடம் காயந்திரி ஓத வேண்டும், அருட்சினை மந்திறம் ஓத வேண்டும்; அன்றாடம் பூசாவிதிகளின்படி பூசை செய்ய வேண்டும்; அமாவாசை வேள்வியும், மூன்றாம்பிறைத் தொழுகையும், பருவபூசையும், வியாழக் கிழமை குருவைப் போற்றி மோனதவமும் செய்ய வேண்டும் என்ற நியதியை விதியாக்கி ஆணையாக்கிடாமல் விட்டது தவறாகிவிட்டது. அருட்பேரரசை ஆளவந்த அரசர்கள் தாங்கள் தமிழினத்தவர் என்பதையும், தங்களின் தாய்மொழி, தமிழ் என்பதையும், தங்களுடைய தாய்நாடு தமிழ்நாடு என்பதையும் மறந்துவிட்டு புகழுக்காகவும், இன்ப பொழுதுபோக்குக்காகவும், தமிழ்மொழியையும், தமிழ் இனத்தையும், தமிழ்நாட்டையும் அன்னியர்களின் வேட்டைப் பொருளாக ஆக்கிவிட்டார்கள். இதனால், தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு மூன்றையும் வளவளர்ச்சிப் படுத்தி மெய்யான இந்துமதத்தின் ஆட்சி மீட்சியை நிலை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அருட்பேரரசு மேற்படி மூன்றுமே நலிந்து மெலிந்து சிதைந்து சீரழிவுற்று நோயுற்றுக் கிடக்கும் படிச் செய்து விட்டது. இந்த தோல்வியின் தாக்குதல்கள் எவ்வளவு காலம் நீடித்திடும் என்று சொல்லவே இயலாது. எனவேதான், தமிழகத்தைப் பொறுத்தவரை சமய, சமுதாய, அரசியல், கல்வி, கலை இலக்கிய, தொழில், … துறைகள் அனைத்திலும் தமிழர்களே தலைவர்களாக இருக்க வேண்டும். தமிழ்மொழியே ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஆணையை அரசாணையாக்க வேண்டும் என்று கட்டாயம் செய்ய நேரிட்டது. ஆனால், இராசராசனோ இந்தச் சோழப்பேரரசைத் தானே தனியருவனாகத் தன்னுடைய வாழ்நாளில் தோற்றுவித்ததாக நினைத்துத் தலைகால் தெரியாமல் ஆரம்பமும், முடிவும் பற்றி ஆராயாமல் குருபீடத்தின் ஆணைகளை மறந்தும், துறந்தும் செயல்படுகிறான். இவனுடைய இந்தத் தவறு நெடுங்காலத்திற்குத் தமிழகத்தையும், தமிழினத்தையும், தமிழ்மொழியையும் தலைதூக்கவே முடியாமல் செய்திடும்! செய்திடும்! செய்திடும்! காலப்போக்கில் அன்னியர்கள் தமிழினத்தை மலைப்பாம்பு போல் வளைத்துக் கட்டி இறுக்கி, நொறுக்கி உணவாக்கிக் கொண்டிடுவார்கள். அதன்பிறகு தமிழர்களுக்கிடையே ஒற்றுமையோ, பற்றோ, பாசமோ, தன்னம்பிக்கையோ, தன்மானப் பிடிப்போ, விடுதலை வேட்கையோ, சுயமரியாதை நாட்டமோ, முளைத்துக் கிளைப்பது பாலைவனத்துக் குறும்புதர்களைப் போலாகி விடும். இவற்றை, அரசாங்கத்தை நடத்துபவர்கள் உணராமல் போனாலும் பாதகமில்லை; உடனடியாகத் தமிழ்நாட்டின் சமய, சமுதாய, கல்வி, கலை, இலக்கிய தொழில் துறையினர் உணர்ந்தேயாக வேண்டும்! உணர்ந்தேயாக வேண்டும்! உணர்ந்தேயாக வேண்டும்!”

    5. “நாட்டிலுள்ள வழிபாட்டு நிலையங்கள், கருவறைகள், வெட்டவெளிக் கருவறைகள், முதலியவற்றைச் சார்ந்ததே அந்தந்த வட்டாரத் தோப்புத் துறவுகள், நஞ்சைகள், புஞ்சைகள்… முதலிய அனைத்தும் நூற்றுவர் பண்ணை, இருநூற்றுவர் பண்ணை, … என்று படிப்படியாக ஆயிரவர் பண்ணைவரை பத்து வகைப் பண்ணைகளாக்கப் பட்டன. இந்தப் பண்ணைகளின் நிறுவன நிர்வாகம் முழுக்க முழுக்க அந்தந்த வட்டாரத்து அம்பலம், அரசு, நாட்டாண்மை, பூசாறி எனும் நான்கு வகையினரின் நேரடிப் பார்வையிலேயே இருக்க வேண்டும். அப்பொழுதுதான், அரசுக்குத் தேவையான வரியும், மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் ஒரே சீராகக் கிடைத்திட முடியும். இதேபோல் அனைத்து வகையான வணிகமும் சமுதாயக் குழுக்களின் கையிலேயே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாடுதழுவி சமத்துவச் சகோதரத்தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் உருவாக முடியும். இதே அடிப்படையில்தான் விசயாலயன் முதல் சுந்தர சோழன் ஆட்சி வரை தமிழகத்தில் விரைந்து சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் உருவாகியிருந்தது. ஆனால், சுந்தர சோழனின் ஆட்சி ஆண்டு ஆரம்பத்திலிருந்தே அந்தந்த வட்டாரத்தின் ஆட்சி அந்தந்த வட்டாரத்து கோயிலையே அரண்மனையாகக் கொண்டு (கோயில் என்ற சொல் இங்கு அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்களையும், கருவறைகளையும், வெட்டவெளிக் கருவறைகளையும் குறிப்பதாகப் பயன்படுத்தப் படுகிறது) அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், கல்வி, கலை, இலக்கிய, தொழில் துறைகளும் ஆட்சி செய்யப்பட்ட நிலை தளர்வுற்றது, சிதைந்தது, கட்டுக்கோப்பு முறைகேடுற்றது. பொருளாதார ஏற்றத் தாழ்வும், சாதி உயர்வு தாழ்வுகளும் நாகத்தின் நஞ்சு போல் ஏறிவிட்டன. இப்போது உத்தம சோழனால் விளைந்த நிலையற்ற தன்மைகள் அனைத்தும் இராசராசனால் கலைகளாக்கப் பட்டு விட்டன. மேலும், அனைத்துத் துறைகளிலும் அன்னியர்களுக்கும், அன்னிய மொழிகளுக்கும் அளவுக்கு மீறிய மதிப்பும், மரியாதையும், அதிகாரமும் வழங்கப்பட்டு விட்டன. இது எதில் கொண்டு போய் முடிக்குமோ தெரியவில்லை. இன்றைக்கு இராசராசன் அனைத்து வகையான அன்னியர்களையும் அரசியலில் கண்மூடித்தனமாக அதிகாரிகளாக நியமித்து விடுவதினால்; காலப் போக்கில் இந்த நாட்டுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பேயில்லை என்ற பொய்மைக் கருத்துக் கூடத் தோன்றிவிடும். இன்னும் சொல்லப் போனால் தமிழகத்துக்குள் மேலாண்மை பெற்றுவரும் அனைத்து அன்னியர்களும் ஒன்று கூடித் தமிழர்களும் தங்களைப் போல் வெளியிடங்களிலிருந்து தமிழகத்துக்கு வாழவந்த அன்னியர்களே என்ற மோசடியான நாசக் கருத்துக் கூடத் தோற்றுவிக்கப்படும். எனவே, இம்மண்ணுலகின் முதல் இனமான தமிழர்கள் பொருளாசையின் இச்சையாலோ, அரசாங்கத்தாரிடம் உள்ள அச்சத்தாலோ, அன்னியர்களும் அன்னிய மொழிகளும் தமிழகத்தைத் தங்களின் வேட்டைக் காடாக ஆக்கிக் கொள்வதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அதாவது, இராசராச சோழன் தனது தவறுகளை உணர்ந்து திருந்தாவிட்டால்; இனியாவது விரைவில் திருத்தப் பட வேண்டும். அதற்குரிய செயல்திட்டமாகவும், முயற்சியாகவுமே இந்த ‘பதினெண் சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள்’ உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றைப் பொருளுலக வாதிகள் ஏற்றுப் போற்றிச் செயலாக்க முயலாவிட்டாலும் அருளுலக வாதிகள் மிகப் பெரிய அரிய முயற்சிகளை மேற்கொண்டு, இந்த அருளாட்சி ஆணைகளை நிறைவேற்ற முற்படவேண்டும். இல்லாவிட்டால், தமிழர்களிலேயே பெரும்பாலானவர்கள் அன்னியர்க்கு ஆலவட்டம் சூட்டுபவர்களாகவும், கொடிபிடிப்பவர்களாகவும், பாதுகாப்புஅரண் செய்பவர்களாகவும், பாதுகை தாங்குபவர்களாகவும், அடிவருடிகளாகவும், கூலிக்காரர்களாகவும் மாறிட நேரிடும்! மாறிட நேரிடும்! மாறிட நேரிடும்!”

    6. “இராசராச சோழனின் (வரலாற்றை), வாழ்வியல் சாதனைகளை நாடோடிப் பாடல்களாகவும், தாலாட்டுப் பாடல்களாகவும், காவடிச் சிந்துகளாகவும், வேலைநேரப் பாடல்களாகவும், பாணர் பாடலாகவும், பொருநர் முழக்கமாகவும், விறலியர் ஆட்டமாகவும், இசைவாணர்களின் இசையாகவும், நாடகவல்லாரின் நாடகமாகவும், பல்வேறு வண்ணங்களில் எங்கும் பரப்பி மிக மிக வலுவான செல்வாக்கையும், ஆதிக்கத்தையும் உருவாக்கிய யாமே இந்தத் தனிமனிதனின் முடிவுக்குக் காரணமாக நேரிட்டுவிட்டது. இவன் எமது அருளாட்சி ஆணைகளை அரசின் ஆணைகளாக வழங்கிடத் தயங்கி, மயங்கித் தேங்கி நிற்கும் இந்த நிலை எப்படி வந்தது என்று ஆராய்ந்துணர்ந்ததால்தான்; யாமே குருகுலத்தாரின் அனைத்து வகையான போதனைகளையும், சாதனைகளையும் நிலவறைச் சொத்துக்களாகவும், ஏட்டுச் சுரைக்காய்களாகவும் ஆக்க நேரிட்டு விட்டது. இவற்றைப் புரிந்து இனியாவது தமிழர்களுக்கே உரிய கருகுலங்களிலும், குருகுலங்களிலும், தருகுலங்களிலும், திருகுலங்களிலும் மெய்யான தமிழினப் பற்றுள்ள பெரியவர்களும், இளைஞர்களும், கல்வி கற்றிட வேண்டும்; ஏட்டறிவையும், பட்டறிவையும் முறையாக வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்நான்கு வகையான பயிற்சி நிலையங்களிலும் அன்னியர்கள் இடம் பெறாமல் காத்திடல் வேண்டும்! காத்திடல் வேண்டும்! காத்திடல் வேண்டும்! ஏனெனில், குருகுலத்தாரின் சாதனைகளும், போதனைகளும் விதை முதலாக வழங்கப் படுவதும், நாற்றுக்களாக வழங்கப் படுவதும் இந்த நால்வகைப் பட்ட பயிற்சி நிலையங்களில்தான். எனவே, குருகுலத்தார் பற்றிய அனைத்து மரபுகளும், செய்திகளும், மறைபொருளாகவே காக்கப்பட்டாக வேண்டும்! காக்கப்பட்டாக வேண்டும்! காக்கப் பட்டாக வேண்டும்! எம்மைப் பற்றிய அனைத்து வகையான செய்தி சான்றுகளையும், ஊன்றுகளையும் மறைகளாகக் காக்கும்படி ஆணையிட்டுச் செல்கிறோம் யாம்.”

    “இவற்றை முறையாக வெளியிடும் பணி எமக்குப் பின்வரும் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியால் அணிபெறுக! அணிபெறுக! அணிபெறுக! எனவே, தமிழர்கள் தங்களுடைய தாய்மொழியே தங்களுக்கு விழி என்பதை உணர்ந்து செயல்படத் தவறுவார்களேயானால் அகவாழ்விலும், புறவாழ்விலும் குருடர்களாகி விடுவார்கள்; அடிமையுற்று மிடிமையுற்றிடுவார்கள்; நலிந்து மெலிந்து கேலிக்குரியவர்களாகி விடுவார்கள்; போலியாக வாழும் கூலிகளாகி விடுவார்கள்.”

    தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டிய 11வது பதினெண்சித்தர் பீடாதிபதியும், இராசராச சோழனின் அரசகுருவும் ஆன சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

    பதினெண்சித்தர் பீடாதிபதியின் அருளாட்சி ஆணைகள் என்ற ஒரு சிறு பகுதியை தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களுடைய வரலாறு பற்றி எழுதியுள்ள பன்னிரண்டு தொகுதிகளில் பன்னிரண்டாவது தொகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

    இதனை இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் இளைஞரணி அவசர அவசியமாக அச்சிட்டு வெளியிடுகின்றது. இதன் மூலமாவது யாராவது சிலராவது, ஒருவராவது ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்களுடைய வரலாற்று நூலும், வரலாற்றுச் சாதனை நூல்களும், போதனை நூல்களும் அச்சேறி வெளிவருவதற்கு உதவி செய்ய முன்வர மாட்டார்களா’ என்று எதிர்பார்க்கின்றது. இந்த எதிர்பார்ப்பினால்தான் இந்த முடிவுரை என்ற கட்டுரையில் தமிழ்மொழி, இனம், நாடு… முதலியவை உணர்ச்சிமிகு வளர்ச்சியும், ஆட்சி மீட்சியும் பெறுவதற்குத் தூண்டுகோலாக அமையக் கூடிய கருத்துக்களில் ஆறு மட்டும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

    இன்றைக்கு நாட்டில் மொழி உணர்ச்சி மட்டும் காட்டாற்று வெள்ளமாக அவ்வப்போது பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனை இனப்பற்று, நாட்டுப்பற்று, சமய அறிவு, சமுதாயப் பிடிப்பு, இன ஒற்றுமை முதலியவைகளால் அணைகட்டித் தேக்கி நன்கு பயன்படுத்த வேண்டும் என்று இந்த சிறிய பகுதி தனிநூலாக வெளியிடப்படுகின்றது.

    நிறைவுரை முடிவுற்றது.

    தொடர்புடையவை: