இப்படி ஒரு தலைப்பில் இந்து வேதம் பிறந்த நாட்டிலேயே கட்டுரை ஒன்று எழுத நேரிட்டிருக்கின்றது என்பது பற்றி எண்ணிப் பார்த்திட்டாலேயே போதும். இந்தத் தலைப்புக்கு உரிய பொருளும், நோக்கமும் மிகத் தெளிவாக விளங்கிடும். அதாவது இந்து வேதம் என்ற ஒன்று இன்றைய காலக் கட்டத்தில் இந்துக்களுக்கு முறையாகவும், நிறைவாகவும், முழுமையாகயும், மெய்யாகவும் …. கிடைக்காமல், கிடைக்க முடியாமல் மறைக்கப்பட்டிருக்கிறது, மறைக்கப்பட்டிருக்கிறது, மறைக்கப்பட்டிருக்கிறது என்ற மாபெரும் பேருண்மையை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும், கொள்கையாகும், குறிக்கோளாகும்.
குமரி முதல், இமயத்தின் விளிம்பு வரை பரந்து விரிந்து கிடக்கின்ற இந்துமத இந்தியாவிற்குள் மட்டுமின்றி இந்த இரு எல்லைகள் கடந்துள்ள பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்து வேதத்தின் பகுதிகளும் இந்து வேதம் பற்றிய செய்திகளும், இந்து வேதம் பற்றிய வரலாறுகளும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக ஒன்று திரட்டப்பட்ட பிறகுதான் இந்து வேதம் பற்றிய ஆய்வுகள் கணக்கற்று தோன்றின. அத்துடன் இந்து மதத்திற்கு, இந்து மக்களுக்கு, இந்துக்களுக்கு …. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டு விட்ட கணக்கற்ற, கடுமையான சோதனைகள், வேதனைகள், இழிவழிவுகள், பழிபாவங்கள், கண்முடித்தனமான தாக்குதல்கள் …. முதலியவைகள் இந்து மதத்திற்குரிய இந்து வேதத்தையும் இந்து வேத வரலாற்றையும் தேடும்படிச் செய்து விட்டன.
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சந்திர குலத்திற்குரிய சித்தர் கருவூறார் பாரம்பரியத்தில் தோன்றிய கண்டப்பகோட்டை சித்தர் ஏளனம்பட்டியார் உ.இராமசாமி பிள்ளையவர்கள் ஆசியாக் கண்டம் முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் தேடி அலைந்து இந்து வேதத்தையும் இந்துவேத வரலாற்றையும் பற்றிய பல பேருண்மைகளைத் தொகுத்திட்டார். அப்பேருண்மைகள் இந்துவேத விடுதலை முழக்கத்தை பிறப்பெடுக்கச் செய்தன. ஆனால் சித்தர் ஏளனம்பட்டியாரோ முதல் இந்திய விடுதலைப் போர் எனப்படும் சிப்பாய்க் கலகத்தின் கதாநாயகராக, உயிர் மூச்சாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதால், இந்து வேத விடுதலை முழுக்கம் இந்து வேத மத நாடான இந்தியாவின் விடுதலை முழுக்கமாக மாறிற்று. ஆனால் இவருடைய சமகாலத்தவரான அருட்பெருஞ்சோதி ஆண்டவர், அருட்பாக் கொடை வள்ளல், வடலூர்ப் பெருவெளி, வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார் அவர்கள் ஹிந்து வேதத்தையும், ஹிந்து வேத ஆகமத்தையும், சாத்திறச் சம்பிறதாயச் சடங்குகளையும், கோத்திர நம்பிக்கைகளையும் கடுமையாகச் சாடித் தகர்த்து மெய்யான இந்து வேத விடுதலைக்குரிய “இந்துவேத விடுதலை முழக்கத்தை எழுப்பினார்”. அந்த இந்துவேத விடுதலை முழக்கம்தான் ஆத்திகர்களையும், நாத்திகர்களையும் இந்து வேதம் பற்றிச் சிந்திக்கச் செய்தன.
இந்த இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் பின்னுமாக இந்த உலகம் முழுவதுமே அந்தந்த மதங்கள் அவரவர் வேதங்களைப் பற்றிய ஆய்வுகளைத் துவக்கின. அதன் விளைவாக ஒவ்வொரு மதமும் தன்னுடைய வேதத்தையும், வேத வரலாற்றையும் வெளிப்படுத்திப் பரப்புகின்ற மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டிட்டன. இந்தியத் துணைக் கண்டத்தில் மார்க்சீயக் சிந்தனைகளைக் காட்டுத் தீ போல் பரப்பிய M.N.இராய் அவர்களும், ம.ப.பிள்ளை அவர்களின் கம்யூனிசக் கட்சி என்ற நிறுவன நிர்வாகக் கட்டமைப்புக்களின் மூலமும், பகுத்தறிவு இயக்கம், பகுத்தறிவுக் குடியரசு இயக்கம், உலக மத ஆய்வுக் குழு, உலக ஆன்ம நேய ஒருமைப் பாட்டுச் சங்கம் ….. முதலிய பல்வேறு வகையான இயக்க அமைப்புக்களின் மூலமும், இந்தியாவில் ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கும் மடங்களின் வழியாகவும், துணையாகவும் இந்து மதத்திற்குரிய இந்து வேதம் பற்றிய ஆய்வுகளைத் துவக்கினார்கள். அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இருபெரும் பிரிவுகள் தோன்றின. அவை தொடர்ந்து இருபெரும் துருவங்களாக வளர்ந்தனவே தவிர வேறு எவ்விதமான பயனும் விளையவில்லை.
இவற்றுக்கெல்லாம் ஒரு விடிவு ஏற்படும் வண்ணமாக இம்மண்ணுலகின் முடிவுக்குள் தோன்ற வேண்டிய நாற்பத்தெட்டு பதினெண் சித்தர் பீடாதிபதிகளில், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியாகத் தோன்றியுள்ள குவலய குருபீடம், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஆதிஅனாதி கடந்த தம்பிரான் அடிகளார், கருமூலப் பண்டாரம், குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார், அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார் அவர்கள் இந்துவேத வளவளர்ச்சிக்காகவும், இந்துமத ஆட்சி மீட்சிக்காகவும் தமது பணிகளைத் துவக்கினார். இந்து வேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்தர் மடமும், இந்து மதத்தை இம்மண்ணுலகில் நிறுவிய பதினெண் சித்தர் பீடமும் முறையாக குருகுலம், திருகுலம், தருகுலம், கருகுலம் எனும் நான்கையும் துவக்கி அருளை அநுபவப் பொருளாக வழங்க வல்ல சன்னிதானம், ஆதினம், தம்பிரான், பண்டாரம், பண்டார சந்நிதி, ஆச்சாரியார் …. முதலிய 48 வகைப்பட்ட அருட்பட்டத்தவர்களையும் உருவாக்கியுள்ளன. இவர்கள் உலகெங்கும் பரந்து விரிந்து செயல்பட்டு இந்து வேதம் இந்த உலகம் முழுவதும் ஆற்றியுள்ள அரும்பெரும் பணிகளையும், சாதித்துள்ள சாதனைகளையும் தெள்ளத் தெளிவாகப் பட்டியலிட்டுத் தொகுத்தார்கள். இந்து வேதம் இந்த உலகில் தோன்றக்கூடிய அனைத்து வேதங்களுக்கும் மூலமாகவும், அடிப்படையாகவும், கருவாகவும் உயிர் முச்சாகவும் தொடர்ந்து இருந்து வருகின்றது என்ற பேருண்மையை மிகத் தெளிவாக வரையறுத்து, வடிவப்படுத்தி உலகுக்கு வழங்கும் சாதனைகளைச் சாதித்தார்கள். இதன்பிறகே, கடந்த சில நூற்றாண்டுகளாக முளைவிட்டுக் கிளைத்துச் செழித்து வளர்ந்து வரும் இந்து வேத விடுதலை முழக்கத்திற்குப் புதிய வளர்ச்சியும் ஏற்பட்டன, ஏற்பட்டன, ஏற்பட்டன.
இன்றைக்கு உலகம் முழுவதுமுள்ள மதவாதிகள் இந்துவேத நூல்களையும், இந்து மத நூல்களையும் காண வேண்டுமென்ற அக்கரைக்கும், ஆர்வத்துக்கும், அவாவிற்கும் ஆளாகி விட்டார்கள். குறிப்பாக உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் தங்களுடைய இந்து மதத்தின் இந்து வேதம் பற்றித் தெரிந்து கொள்ள அளப்பரிய அக்கரையையும் ஆர்வத்தையும் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அவற்றின் பயனாகத்தான் இந்து வேத விடுதலை முழக்கம் என்ற தலைப்பில் கட்டுரைகள் ஆராய்ச்சி நூல்கள் ஆராய்ச்சியாளர்கள், பத்தியாளர்கள், மதவாதிகள், இலக்கியவாதிகள் …. தோன்ற ஆரம்பித்து விட்டார்கள், தோன்ற ஆரம்பித்து விட்டார்கள், தோன்ற ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த கால கட்டத்தில்தான் இந்து வேதத்திற்கும் இந்து மதத்திற்கும் உரிய மெய்யான பிறப்பிடம், இருப்பிடம், காப்பிடம், வாரிசு, தலைமை .. முதலியவை பற்றிய பேருண்மைகள் வெளிவர இருக்கின்றன.